14 வயது இயற்கை ஆர்வலர்... பாம்பு பிடிப்பதில் வல்லுனர்!



இந்தியாவின் தலைசிறந்த இளம் இயற்கை ஆர்வலர்களைப் பட்டியலிட்டால் அனன்யா விஸ்வேஷுக்கு ஓர் இடம் நிச்சயமாக இருக்கும். பாம்பு மீட்பு முதல் காடுகள் பாதுகாப்பு வரை இயற்கை சார்ந்த பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர். 
பொதுவாக அனன்யா மாதிரியான சிறுமிகள் வார இறுதியில் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார்கள்; பெற்றோர்களுடன் எங்கேயாவது வெளியில் செல்வார்கள்; திங்கட்கிழமைக்கான ஹோம்வொர்க்கைச் செய்வார்கள். 

ஆனால், அனன்யாவின் சனி, ஞாயிறையும் காடுகள்தான் ஆக்கிரமித்துள்ளன. வார இறுதி நாட்களில் கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு காட்டில் கேமராவுடன் அனன்யா உலாவிக்கொண்டிருப்பார். காட்டுயிர்களை புகைப்படம் எடுப்பது மட்டுமன்றி, காட்டின் சூழலையும் கவனிப்பது அவரது தனித்துவம்.மட்டுமல்ல, அனன்யாவின் பக்கத்து வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டால், அவர்கள் முதலில் அழைப்பது அனன்யாவுக்குத்தான். 
ஆம்; பாம்பு பிடிப்பதில் வல்லுனராகவும் வலம் வருகிறார். தவிர, பாலக்காடு பகுதிக்கு உட்பட்ட கேரளாவின் வனத்துறைக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூட அனன்யாவுக்குத்தான் அழைப்பு விடுக்கிறது. அந்தளவுக்குக் காடுகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். 

இத்தனைக்கும் அனன்யாவுக்கு வயது 14தான். இயற்கையின் மீதான அனன்யாவின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் முழு ஆதரவையும் தருகின்றனர். அனன்யாவின் தேடலுக்கு நிறைய நேரம் தேவைப்படும் என்பதால் ஹோம்ஸ்கூலிங் முறையில் கல்வி கற்று வருகிறார். 

‘‘எங்களது குடும்பம் ஊட்டியில் குடியேறியது. ஊட்டி தான் இயற்கையின் மீது ஆர்வம் வர காரணம். அடிக்கடி அங்கிருந்த காடுகளுக்குப் பயணம் செய்வேன். அந்தக் காடுகளின் வழித்தடங்கள் என்னை அப்படியே ஆக்கிரமித்தன. 

என்னை மாதிரியே இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்களைத் தேடிப்போக என் பெற்றோர் உதவினார்கள்...’’ என்கிற அனன்யா, ஆரம்பத்தில் நீலகிரி காடுகளுக்குள் பயணம் செய்தார். யாருமே செல்லாத வழித்தடங்களில் எல்லாம் பயணித்தார். அப்போது அவர் வயது மற்ற குழந்தைகள் தங்களின் பாடப்புத்தகங்களில் மட்டுமே அந்த இடங்களைப் பார்த்திருப்பார்கள். 

‘‘காட்டில் உள்ள ஒரு பறவையைப் போட்டோ எடுத்தேன். அப்போது எனக்குப் பின்னால் இருந்த புதரிலிருந்து ஒரு கரடி மேலே எழுந்து வந்து என் முன்பு நின்றது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னுடைய உள்ளுணர்வு என்னை ஓடும்படி சொன்னது. 

‘தனியாக இருக்கும் கரடி மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் பயந்து, ஓடிவிடும். அதே நேரத்தில் கரடியைப் பார்த்து நாம் பயந்து ஓடினால் அது நம்மைத் துரத்தும்...’ என்று என்னுடன் வந்த வனக்காவலர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் நகராமல் நான் அப்படியே நின்றேன். என்னுடன் வனக்காவலர்களும் இருந்தனர். பயந்துபோன கரடி பின்நோக்கிச் சென்றது. இதுதான் காட்டு விலங்கைப்பற்றி நான் கற்றுக்கொண்ட முதல் பாடம்...’’ என்று சொன்ன அனன்யா, எட்டு வருடங்கள் ஊட்டியில் வாழ்ந்தார். 

கரடியுடனான சந்திப்பு காட்டுயிர்களின் மீதான ஆர்வத்தை அவருக்குள் அதிகரித்தது. அடிக்கடி காட்டுயிர்களைக் காண்பதற்காகவே சஃபாரி பயணம் மேற்கொண்டார். சஃபாரி வழிகாட்டிகள் அனன்யாவுக்கு நண்பர்களாகிவிட்டனர். அவர்கள் காட்டின் உட்பகுதிகளுக்கெல்லாம் அனன்யாவை அழைத்துச் சென்றனர். ஒரு பக்கம் பறவைகள் மற்றும் விலங்குகளைப்பற்றி அறிந்துகொண்டார் அனன்யா. இன்னொரு பக்கம் அனன்யாவின் வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் அனன்யாவைப் பற்றி அறிந்துகொண்டனர். 

ஆம்; மசினகுடி சூழலியல் இயற்கையாளர் கழகம் அனன்யாவை அணுகி, அவரை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது. அந்தக் கழகத்தில் இளம் உறுப்பினர் அனன்யாதான். 
தினமும் காடுகளுக்குப் பயணம் செய்தார் அனன்யா. 

இரவில் தனது காட்டுப் பயணத்தைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்வது அனன்யாவின் வழக்கம்.இது அனன்யாவின் பெற்றோர்களுக்கும் காடுகளின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. அதனால் அனன்யாவுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க முடிவு செய்தனர். 

ஆம்; ஆரம்பத்தில் வழக்கமான பள்ளியில் படித்து வந்த அனன்யாவை, அவரது விருப்பத்துக்கு ஏற்ப ஹோம்ஸ்கூலிங்கில் படிக்க முழு ஆதரவையும் பெற்றோர் தந்தனர். 

‘‘‘நான் ஹோம்ஸ்கூலிங்கில் படிக்கிறேன்’ என்று அனன்யா சொன்னபோது, ஒரு அப்பாவாக என்னால் அதை ஏற்க முடியவில்லை. அவளுடன் சேர்ந்து காட்டுப் பயணம் சென்ற
போதுதான் அனன்யாவுக்குக் காடுகளின் மீதிருக்கும் ஆர்வம் புரிந்தது. 

பிறகு எப்படி அவளது ஹோம்ஸ்கூலிங் முறையை ஏற்காமல் இருக்க முடியும்...’’ என்கிறார் அனன்யாவின் தந்தையான விஸ்வேஷ் சுப்ரமணியன். காட்டுப்பயணத்தின் அழகான பக்கங்களை மட்டுமே அனன்யா தரிசிக்கவில்லை. காடும், அங்கே வாழும் உயிர்களும் அழிந்துகொண்டிருப்பதையும் கவனிக்க ஆரம்பித்த அனன்யா, இயற்கைப் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கவும் ஆரம்பித்தார். 

ஒரு நாள் இறந்துபோன யானைக்குப் பிரேத பரிசோதனை பண்ணுவதை அனன்யா பார்த்திருக்கிறார். யானையின் உடலில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் இருந்தன. அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். மட்டுமல்ல; அந்த யானை கர்ப்பமாகவும் இருந்திருக்கிறது. 

இந்நிகழ்வு அனன்யா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது. காடுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எதிராகவும், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும் சில முன்னெடுப்புகளைத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டார். 

இன்று கேரளாவில் வசித்து வருகிறார்அனன்யா. ‘‘நம்முடைய சமூக வனவியல் அமைப்புக்கு இளம் இயற்கை ஆர்வலரான அனன்யாவை அறிமுகம் செய்கிறேன். நம்முடைய தளத்தில் தங்களின் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது என்று மக்கள் பதிவு செய்யும்போதெல்லாம், நாம் அந்த வீடுகளுக்குச் சென்று பாம்புகளை மீட்போம். இப்போது நமது பாலக்காடு பாம்பு மீட்பர்களில் புதிதாக இணைந்திருக்கிறார் அனன்யா...’’ என்று அனன்யாவைப் பற்றி சக இயற்கை ஆர்வலர்களிடம் அறிமுகம் செய்து ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் சிவ பிரசாத் என்கிற சூழலியலாளர். 

அனன்யா இளம் பாம்பு மீட்பர் மட்டுமல்ல, மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள பெண் பாம்பு மீட்பர்களிலும் ஒருவர். ‘‘மசினகுடிக்கு அருகிலிருந்த ஒரு குளத்தின் ஓரத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் கற்கள் நிறைந்த இடத்தில் ஒரு பாம்பு சுருண்டு படுத்துக்கிடந்தது. அதை மீட்பதற்காக என்னை அழைத்தனர். 

முன் அனுபவம் இல்லை என்பதால் எனக்கு சவாலாக இருந்தது. ஆனால், ஆர்வத்துடன் செயல்பட்டு பாம்பை மீட்டேன். துணிச்சலைவிட, ஆர்வம்தான் பயத்தைப் போக்குகிறது என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்...’’ என்று முதல் பாம்பு மீட்பு அனுபவத்தைப் பகிர்ந்த அனன்யா, இதுவரை 75க்கும் மேலான பாம்புகளை மீட்டிருக்கிறார். இதில் கொடிய விஷப்பாம்புகளும் அடக்கம். 

மட்டுமல்ல; 11 வயதிலேயே ஹெர்பெட்டாலஜி எனும் ஊர்வன இயலில் ஜூனியர் மாஸ்டர் டிகிரியைத் தன்வசமாக்கியிருக்கிறார். இதுபோக கேரள வனத்துறையிடம் பாம்பு மீட்புப் பயிற்சியும் பெற்றிருக்கிறார். பாம்பு மீட்பு மட்டுமல்லாமல், தன்னைப் போன்ற 9500 மாணவர்களிடம், தான் கற்ற இயற்கை குறித்த அனைத்து விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார். 

அவர்களில் ஒருசிலராவது நாளைக்கு அனன்யாவைப் போல மாறலாம். ‘‘காடுகளில் குப்பைகளைப் போடாதீர்கள். குப்பைகளை ஏதாவது ஒரு பையில் வைத்து, காட்டுக்கு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள்...’’ என்பதுதான் காட்டுப்பயணத்தில் அனன்யா கற்றுக்கொண்ட முதன்மையான பாடம்.

த.சக்திவேல்