2040ல் சென்னைக்கு ஆபத்து!



பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு மழை வெள்ளம்தான் நினைவுக்கு வரும்.ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே - அதாவது ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கடந்த 9 மாதங்களில் சுமார் 99 சதவீத நாட்களில் இந்தியாவின் பல மாநிலங்கள் தீவிரமான காலநிலையை எதிர்கொண்டன என கணித்திருக்கிறது. 

தீவிரமான காலநிலை நிகழ்வுகள் என்றால் வெப்பம், குளிர், மின்னல், புயல், பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என அந்த ஆய்வு பட்டியலிடுகிறது.தில்லியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் ‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்வயர்ன்மென்ட்’ எனும் சுற்றுச்சூழலுக்கான அறிவியல் அமைப்பு பல காலமாக இந்தியாவின் பல நிகழ்வுகளைப் பற்றி அவ்வப்போது அதிர்ச்சிகரமான ஆய்வுகளைச் செய்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. 

இந்த அமைப்புதான் அண்மையில் ‘க்ளைமேட் இந்தியா 2025’ எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டு பலரின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. இந்த ஆய்வில்தான் மேற்சொன்ன கண்டுபிடிப்பை வெளியிட்டிருந்தது. தொடக்கத்திலேயே சொன்னதுபோல் இந்த ஆய்வு இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை செய்யப்பட்டது. 9 மாதம் என்றால் கிட்டத்தட்ட 273 நாட்கள் என்பதை மனதில் வைப்பது நல்லது.

மேற்சொன்ன மாத இடைவெளியில் ‘சுமார் 4064 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது கடந்த 4 வருடங்களில் இருந்ததைவிட 48 சதவீதம் அதிகம். சுமார் 9.47 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. இதுவும் 4 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட 400 சதவீதம் அதிகம். 99 ஆயிரத்து 533 வீடுகள் இடிந்திருக்கின்றன. 58 ஆயிரத்து 982 விலங்குகள் இறந்திருக்கின்றன...’ என பட்டியலிடும் அறிக்கை எந்தமாதிரியான தீவிர காலநிலை அதிக இறப்புகளை கொண்டுவந்துள்ளன எனவும் சொல்கிறது.

‘மழையால் - அதுவும் தீவிர மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 2440 இறப்புகள், புயலால் 1456 இறப்புகள், மேகவெடிப்பால் 135 மரணங்கள். வெப்பக் காற்றால் 21, பனிப் பொழிவால் 12... எனச் சொல்லும் ஆய்வு சில மாநிலங்கள் பற்றியும் விலாவாரியாக பதிவு செய்கிறது.

ஆய்வு செய்யப்பட்ட காலத்தின் அளவு 273 நாட்கள் என்றால் ‘இமாச்சல்பிரதேசத்தில் 80 சதவீத நாட்கள் தீவிர காலநிலை நிகழ்வுகள் அரங்கேறின. வடமேற்கு மாநிலங்களான சண்டிகார், தில்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்டில் சுமார் 257 நாட்கள். கேரளாவில் 147 நாட்கள். மத்தியப்பிரதேசத்தில் 144 நாட்கள். 

இறப்பை பொறுத்தளவில் 532 இறப்புகள் பதிவாகி மத்தியப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. 484 இறப்புகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும், ஜார்க்கண்ட் 478 மரணங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.பயிர் தேசத்தை கணக்கில் கொண்டால் மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடம். 

அங்கே சுமார் 8.4 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அடுத்தது பஞ்சாப். இங்கே 0.26 ஹெக்டேர் நாசமாகியுள்ளன. மூன்றாவது இடத்திலிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் 0.221 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டன... என்றெல்லாம் இந்த அறிக்கை பட்டியலிட தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது என ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த பிரபாகரிடம் பேசினோம்.

‘‘குறைந்த நேரத்தில் அதிக மழை என்பதுதான் கடந்த 3 அல்லது 4 வருடங்களாக தமிழ்நாடு உட்பட இந்திய மாநிலங்கள் பலவற்றில் பார்க்கிறோம். இதற்கு காரணம் க்ளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமயமாதல்தான். 

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் 2040ம் ஆண்டளவில் இன்றைய மழையின் அளவைவிட சுமார் 26 சதவீதம் அதிகரிக்கும் என கணித்திருக்கிறார்கள். 
இப்போது பெய்யும் மழையே வெள்ளம், அழிவுகளைக் கொண்டுவரும் சூழ்நிலையில் மேலும் மழை அதிகரித்தால் என்ன செய்வது என யாருக்கும் தெரியாத நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 

அதிலும் இந்த மழை அதிகரிப்பு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையைத்தான் அதிகம் பாதிக்கும் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். தீபாவளி தொடக்கம் முதல் இன்று வரை டெல்டா பகுதிகளில் மழையும் அதன் பாதிப்பும் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்...’’ எனச் சொல்லும் பிரபாகர், டெல்டா மாவட்டங்களின் நிலையையும் விவரித்தார்.

‘‘தீபாவளியை ஒட்டி பெய்த மழை  காரணமாக டெல்டா விவசாயிகள் தாமதமாகத்தான் பயிர்களை விதைத்தார்கள். ஆனால் விதைத்து அறுவடை செய்யும் நேரத்தில் இப்போது மழை பெய்கிறது. இதனால் சுமார் 60 சதவீத விவசாயிகளின் பயிர்கள் வெள்ளத்தில் சேதமாகியிருக்கின்றன. 

கடந்த 3 அல்லது 4 வருடங்களாக விவசாயத்தில் லாபம் என்பதையே பார்க்காத டெல்டா விவசாயிகளுக்கு இந்த வருட மழை நிச்சயம் கடனில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும். 
அடுத்த வருடம் இந்த விவசாயிகளுக்கும் அல்லது அரிசியை நம்பியிருக்கும் தமிழக மக்களுக்கும் போதாத காலமாகவே இருக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சுற்றுச்சூழலுக்கான பாரிஸ் ஒப்பந்தம், 2100ம் ஆண்டில் உலகம் எட்டப்போகும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்க நாடுகள் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. 

ஆனால், கடந்த 3 வருடங்களிலேயே பல நாடுகள் இந்த 1.5 டிகிரியை எட்டிவிட்டன என்பதைத்தான் பல ஆய்வுகள் சொல்கின்றன. 

உதாரணமாக கடந்த சம்மரில் தமிழ்நாட்டின் கரூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 4லிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்ததை சொல்லலாம்.
ஊட்டியில்கூட சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பது சர்வநிச்சயமாக அசாதாரணமானதுதான்.பொதுவாக பூமியின் வெப்ப நிலை உலகளவில் சராசரியாக 15.5லிருந்து 16 டிகிரி வரை இருக்கும். இது ஒவ்வொரு நாட்டுக்கும் கூட, குறைய இருக்கும். 

ஆனால், தமிழகம் மற்றும் பல இந்திய மாநிலங்களில் காலநிலையின் மாற்றங்கள் பல சிக்கல்களைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதைத்தான் இந்த சுற்றுச்சூழல் அமைப்பின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் தமிழகமும் முன்னெச்சரிக்கையாக பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் பிரபாகர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவோமாக.

டி.ரஞ்சித்