எல்லாமே டார்க்... அனைத்தும் இருட்டு...



சினிமாவின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

சினிமா என்றாலே கனவுப் பட்டறை. கலர்ஃபுல் உலகம். ‘சீதா கல்யாணம்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ ஆகிய திரைப்படங்கள்தான் கருப்பு வெள்ளை சினிமாவை வண்ணமயமாக மாற்றின. இந்த மாற்றத்தை மொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடியது. 
இப்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முதல் வண்ணப் படம் என்பது வரலாற்றுப் பதிவாகவே இருக்கிறது.அப்படியிருந்த நிலை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி சினிமா தன்னுடைய வண்ணமயமான குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதோ எனத் தோன்றுகிறது. அதிகமான கருப்பு வெள்ளை, அதிகமான இருட்டு... என இன்று சினிமா விஷுவல் நிறங்கள் குறைவாக மாறி வருகின்றன. 

இந்த மாற்றம் எங்கே நிகழ்ந்தது என யோசித்தால் ‘த கேம் ஆஃப் திரான்ஸ்’ போன்ற வெப் தொடர்கள் வரவுதான் இதற்கு காரணமோ எனத் தோன்றுகிறது. அனுபவம் வாய்ந்த சினிமா தொழில்நுட்ப நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
‘‘தொழில்நுட்ப பயன்பாடுதான் காரணம்...’’ என்று ஆரம்பித்தார் ‘வல்லினம்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற எடிட்டரான சாபு ஜோசப்.‘‘டிஜிட்டல் கேமரா முதல் கிராபிக்ஸ் வரை அத்தனையும் ரியலிஸ்டிக் மோடுக்கு மாறி வருகின்றன. 

குறிப்பாக எதார்த்த சினிமா எடுக்கப்பட்டதன் விளைவுதான் இந்த டார்க் மற்றும் இருட்டு தீம். உதாரணத்துக்கு இந்தப் படம் ஒரு ஹாரர் அல்லது கிரைம் திரில்லர் எனில் விஷுவலிலேயே இந்த டார்க் ஷேடு, கிரே தீம் இப்போது சுலபமாக கொடுக்க முடியும். அதாவது படம் பார்க்க வரும் ரசிகனை விஷுவல் கலரிங் மற்றும் லைட்டிங்கிலேயே இதுதான் படத்தின் மூட் என உட்கார வைக்கும் நோக்கம். 

மேலும் வெப் தொடர்கள் இன்று மிகப்பெரிய பொருட்செலவில் சினிமாவுக்கு நிகராக அல்லது சினிமாவுக்கு சவால் விடும் அளவுக்கு மேக்கிங் கொடுக்கிறார்கள். 
எனில் சினிமாவும் அதற்கு நிகராக செயல்பட்டாக வேண்டும். கலர்ஃபுல்லாக, காமெடி கலாட்டா இதெல்லாம் கொண்ட படங்களும் வருகின்றன. ஆனால், முன்பை விட குறைவு. எதார்த்த சினிமா மீதான ஆர்வம்தான் இந்த டார்க் மற்றும் கிரே ஷேடு மாற்றம். 

அதேபோல் ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா ஒவ்வொரு டிரெண்டிலும் செயல்படும். பாலு சார் படங்களில் நேருக்கு நேரான லைட் பயன்படுத்தப்படும். அது ஒரு வித்தியாசமான எஃபெக்ட் கொடுத்தது. இப்போது இந்த டார்க் தீம். பொதுவாக க்ரைம் திரில்லர், டார்க் காமெடி படங்கள் அதிகரித்து விட்டதன் காரணம்தான் இந்த விஷுவல் மாற்றம். இன்று திருமண வீடுகளிலேயே மணமகள் மற்றும் மணமகன் பீச் கலர், பேஜ் கலர் என அடர்ந்த பளிச் நிறங்களை தவிர்க்கிறார்கள். 

இப்போதைய இளைஞர்களும் அப்படித்தான் சிவப்பு, பச்சை, மஞ்சள் என நேரடியான நிறங்களைத் தவிர்த்துவிட்டு, கருப்பு முதல் அடர் நிறங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த எதார்த்த கலப்புதான் தற்போதைய சினிமா மாற்றம்...’’ என சாபு ஜோசப் முடிக்க, தொடர்ந்தார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.‘‘சினிமாவைப் பொறுத்தவரை ஒரே ஃபார்முலாதான். 

எது வெற்றி பெறுகிறதோ அதுதான் அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு டெம்ப்ளேட். ‘ஷோலே’ படம் வந்த வேளையில் எல்லா மொழிகளிலும் அதேபோன்ற படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றன. அந்த கான்செப்ட்தான் ஒரு வெப் தொடரை மக்கள் இவ்வளவு நேரம் செலவு செய்து பார்க்கிறார்கள் எனில் ஏன் சினிமாவுக்கு இந்த டார்க் ஷேடு அல்லது இருட்டு தீம் கொடுக்கக் கூடாது என்கிற எண்ணம். 

இப்போதைய டிரெண்ட் டார்க் காமெடி, இருட்டு உலக வாழ்க்கை, கிரைம் திரில்லரை அதிகம் விரும்பும் மக்கள்... இதுதான் காரணம் என்பதாலேயே எந்த கான்செப்ட் வெற்றி அடைகிறதோ அதை நோக்கி பயணிக்கும் நிலை. 

ஆனால், இதே சூழலில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற திரைப்படங்களும் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன. என்னதான் தீம் செட் செய்தாலும் என்னதான் விஷுவல் விருந்து கொடுத்தாலும் எல்லாவற்றிற்கும் மேல் கதைதான் ஹீரோ. கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் அது என்ன கலர், விஷுவல் என இதையெல்லாம் மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். 

இது ஒரு டிரெண்ட். அவ்வளவுதான். கூடிய சீக்கிரம் வேறு ஒரு விஷுவல் எஃபெக்ட் வரும். இல்லையேல் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளே கலக்கப்படும் பொழுது இதில் மாற்றம் உண்டாகலாம்.

நான் படம் செய்யும் வேளை யில் என் கைக்கு எப்போது டிஜிட்டல் கேமரா வந்தது என்பதே தெரியாது. ‘பில்லா 2’ படத்தின் போது இயக்குநர் சக்ரி டோலட்டி வரும்பொழுது ஒரு எபிக் கேமரா பாக்ஸுடன் வந்தார். அப்படித்தான் என் கைக்கு டிஜிட்டல் கேமரா வந்தது என நினைக்கிறேன். 

அப்போதும் கூட முழுமையாக அதை பயன்படுத்தினேனா என்பது தெரியாது. ஒரு சில வருடங்களில் பார்த்தால் மொத்த சினிமாவும் டிஜிட்டல் கேமரா பயன்பாட்டில் இருக்கு. 
எனில் ஒரு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கோ ஒரு சில படங்கள் வெற்றி அடையும்பொழுது அதை நோக்கி பயணிக்கும் முறைதான் இந்த டிரெண்ட்...’’ என ஆர்.டி.ராஜசேகர் முடிக்க, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ தொடங்கி 70க்கும் மேலான படங்களின் தொகுப்பாளரான ரூபன் தொடர்ந்தார்.

‘‘இதை கலர் இழப்பு என சொல்ல முடியாது. ஏஸ்தடிக் விஷுவல் மீதான மோகம் எனலாம். அதாவது ‘Old is Gold’ என மீண்டும் பழைய ஸ்டைலை புதுமையான டெக்னாலஜியில் ரசிப்பது. 
ஏன்... ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படம் பழைய ஸ்டைல்தான். 

ஆனால், மீண்டும் சில டிஜிட்டல் மாற்றங்களுடன் வந்தால் பார்க்க மாட்டோமா என்ன? அப்படித்தான். வின்டேஜ் கார்களை விரும்பும் மக்கள் அதிகரித்துள்ளனர். மேலும் எப்போது வெப் தொடர் கலாசாரம் வந்ததோ அப்பொழுதே சினிமா திரையரங்கம் போன்ற டெக்னாலஜி வீட்டிலேயே வந்துவிட்டது. 

தியேட்டர் அனுபவம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் செலவு செய்து வீட்டில் பெரிய திரை, நல்ல சவுண்ட் என உருவாக்குகிறார்கள். எனில் சினிமா தைரியமாக டார்க் தீம், இருட்டு விஷுவல் கொடுக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் வீட்டில் லைட்டுகளை எல்லாம் அணைத்து விட்டு குடும்பமாக , நண்பர்களாக... தியேட்டர் ஸ்டைலில் படம் பார்க்கிறோம்?
இதற்கேற்ப சினிமாவும் பரிணாம வளர்ச்சி அடைகிறது. ‘பிளாக் & ஒயிட் பியூட்டிஃபுல் சைட்’ எனும் பழமொழி எக்காலத்திலும் மாறாது. இரவு, டார்க்... இதற்கு ஓர் இயல்பிலான அழகு உண்டு. அதை நோக்கிய மாற்றமாக இதைப் பார்க்கிறேன்...’’ என்கிறார் ரூபன்.

ஷாலினி நியூட்டன்