ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் to விஜய் சேதுபதி படத்தின் Editor!
‘‘‘இறைவி’ படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டாக என் பயணம் தொடங்கியது. பிறகு எடிட்டராக அறிமுகமான ‘தாதா 87’ படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டரை வெளியிட்டவர் விஜய் சேதுபதி. இப்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்துக்கு எடிட்டிங் செய்யும் வாய்ப்பு வரை வந்து சேர்ந்திருக்கிறேன்...’’ பொறுமையுடன் தனது அனுபவங்களை பகிர ஆரம்பித்தார் எடிட்டர் ஸ்ரீவத்சன்.
யார் இந்த ஸ்ரீவத்சன்?
சொந்த ஊர் சென்னை. படிச்சது டிப்ளமோ என்ஜினீயரிங். அது கம்ப்யூட்டர் துறை அசுர வளர்ச்சி கண்ட காலம். ஆர்வத்துல ‘அடோப் போட்டோ ஷாப்’ கத்துக்கிட்டதோடு, அதே ஃபீல்டுல டிராவல் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். சந்தானம் சாரின் ‘சர்வர்சுந்தரம்’ பட போஸ்டர்தான் என்னை எடிட்டிங் பக்கமாக கவனத்தை திருப்பியது. இதற்கிடையே ‘இறைவி’, ‘தெறி’ என சில படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தேன். அது நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. சினிமா ஒர்க்கிங் ஸ்டைலை ஸ்டடி பண்ண நடித்தேன்.  ‘பேர்ட் கேர்ள்’ எடிட்டர் ராதா மூலம் ‘சர்வர் சுந்தரம்’ எடிட்டர் தினேஷ் பொன்ராஜ் சாருடைய அறிமுகம் கிடைச்சது. முதல் நாளே ‘சர்வர் சுந்தரம்’ படத்தோட ரஃப் கட் பண்ண சொன்னார். தொடர்ந்து அவரிடம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘மோகினி’ உட்பட சில படங்களிலும், பிரதீப் ராகவ் சாரிடம் ‘கோமாளி’, ‘கதகளி’ உட்பட பல படங்களிலும் அசோசியேட்டாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
 எடிட்டராக வேலை செய்த முதல் படம் விஜய் ஸ்ரீ சார் இயக்கிய ‘தாதா 87’. தொடர்ந்து ‘டைம் இல்ல’, ‘யுத்த காண்டம்’, ‘எல்லோ’ உட்பட பல படங்கள். தற்போது ‘டிரெயின்’, சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் நடிக்கும் ‘ஒன் டூ ஒன்’, ‘எல்லோ’ இயக்குநரின் அடுத்த படம், சின்னத்திரை அபிராமியின் ‘வாரணாசி’ என்று பல படங்கள் கைவசம் உள்ளன.
சுந்தர்.சி., விஜய்சேதுபதி, மிஷ்கின் போன்ற பிரபலங்களின் படங்களில் அறிமுக டெக்னீஷியன்களுக்கான வாய்ப்புகள் அமைவது கடினம். அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
மிஷ்கின் சாருடன் ‘டிரெயின்’ படத்தில் வேலை செய்ததை மறக்க முடியாது. என்னைப் பற்றி எதுவுமே கேட்காமல் ‘வேலை தெரியுமா’ என்ற ஒரு கேள்வியுடன் ‘உடனே ஜாயின் பண்ணு’ என்று சொல்லிவிட்டார்.
எடிட்டிங் டேபிளில் தினமும் இருப்பார். அவருடைய படங்களுக்கு என்று தனித்துவமான எடிட்டிங் ஸ்டைல் இருக்கும். ‘எம்’ கட், ‘ஜெ’ கட் என்று சில டெக்னிக்கல் அம்சங்களை அவரிடம் கத்துக்க முடிந்தது.அந்த வகையில் தொழில்முறை எடிட்டர்களிடம் கத்துக்கிட்ட விஷயங்களைவிட மிஷ்கின் சாரிடம்தான் அதிகம் கத்துக்கிடேன். வெளியே மிஷ்கின் சார் என்றால் ஒருவித பிம்பம் இருக்கு. அது அவருடைய நிஜ முகம் கிடையாது. பழகுவதற்கு இனிமையானவர்.
சுந்தர்.சி. சார், அனுராக் காஷ்யப் சார் என்னுடைய ஒர்க்கைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். இயக்குநர் திரு முழு சுதந்திரம் கொடுத்தார்.சமீபத்தில் வந்த ‘எல்லோ’ படத்துக்கும் நல்ல வரவேற்பு. அதன் இயக்குநர் ஹரி மகாதேவன் என்னுடைய நெருங்கிய நண்பர். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தோம்.
எடிட்டரின் முக்கிய பணி என்ன?
இது சோஷியல் மீடியா உலகம். ரீல்ஸ் போடாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். ஆடியன்ஸ்க்கு எடிட்டிங் நாலேஜ் அதிகம். அவர்களே எடிட் செய்து ஒரு நிமிஷத்தில் வீடியோ போடுகிறார்கள். தற்போது ஆடியன்ஸ் மனநிலை எப்படி இருக்கிறது என்று சொன்னால், எல்லாமே சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்றுதான் இருக்கிறது. ஸ்கிப் பண்ணாத அளவுக்கு அவர்கள் மனநிலைக்கு ஏற்ப எடிட் செய்ய வேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் எடிட்டிங் சாப்ட்வேர் பற்றி சொல்ல முடியுமா?
எனக்கு டாவின்சியில் வேலை செய்யப் பிடிக்கும். ஹாலிவுட் படங்களான ‘மிஷன் இம்பாஸிபிள்’, ‘அவதார்-2’ போன்ற படங்கள் அந்த சாப்ட்வேர்லதான் எடிட் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் வெளியான ‘எல்லோ’ படத்தையும் அந்த சாப்ட்வேரில்தான் வேலை செய்தேன். டிஐ, டப்பிங், சிஜி என ஏராளமான வேலையை அதுல செய்ய முடியும். தமிழ் சினிமாவில் தற்போது ஆவிட் சாப்ட்வேர்லதான் வேலை செய்கிறார்கள். டாவின்சிக்கு மாறினால் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கலாம்.
மற்ற சாப்ட்வேர்ல மேன்யுவலாக செய்வதுபோல் இருக்கும். டாவின்சியில் ஏஐ தொழில்நுட்பம் இருக்கும். எடிட் செய்த காட்சிகளில் இரண்டு கட்டுக்கு நடுவே ஓர் இடைவெளி இருக்கும். டாவின்சியில் உள்ள ஆப்ஷனில் செலக்ட் கொடுத்தால், தானாகவே காட்சிகள் ஜாயினாகும். அப்படிச் செய்யும்போது ‘எம்ப்டி’ ஸ்பேஸ் இருக்காது. அப்படி செய்யாமல் வரும் படங்களை பார்க்கும்போதுதான் ஆடியன்ஸ் ‘லேக்’ என்று சொல்வார்கள்.
‘யுத்த காண்டம்’ சிங்கிள் ஷாட் படம். அதன் அனுபவம் எப்படி?
சிங்கிள் ஷாட் என்று சொல்லும்போது கேமரா இருந்தால் போதும் என்றில்லை. எடிட்டரின் பங்களிப்பும் இருக்கிறது. அந்தப் படத்தை லாங் ஷாட்டாக நிறைய எடுத்திருந்தார்கள். அதை பல கட்டங்களாக எடிட்டிங் செய்த பிறகு சிங்கிள் ஷாட்டாக கொண்டு வந்தோம்.
கதையை விறுவிறுப்பாக சொல்வதற்கு காட்சிகளை முடிந்தளவுக்கு எடிட் செய்வீர்களா அல்லது காட்சிகளை ஒருங்கிணைப்பு செய்தால் போதுமா?
‘டிரெயின்’ படத்தை உதா ரணமாக வெச்சு பதில் சொல்றேன். ஒரு காட்சியை டிரிம் பண்ணுவதைவிட ஒரு ஷாட்டுக்குள் ஷாட்டை டிரிம் செய்தால் ஒரு காட்சியை தூக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது ஷாட்டுக்குள் ஷாட்டை டிரிம் செய்தால் மொத்த படமும் டிரிம்மாகிவிடும். ஃபுட்டேஜ்ல தூக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆர்ட்டிஸ்ட் யாருமே மிஸ் ஆகமாட்டார்கள்.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|