விளையாட்டு சினிமா ஆன்மிகம் கும்பல் ஆபத்து... மாப் சைக்காலஜி பெரும் ஆபத்து!
சமீபத்தில் அர்ஜென்டினா கால்பந்து கேப்டன் லியோனல் மெஸ்சி இந்தியா வந்திருந்தார். கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால், அவரை சரியாகக்கூட ரசிகர்களால் பார்க்கமுடியவில்லை. இதற்காக பலரும் 4 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து டிக்கெட் எடுத்திருந்தனர். இந்நிலையில் கோபமடைந்த ரசிகர்கள் அந்த மைதானத்தையே அடித்து நொறுக்கினர்.  இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் வைரலானது. இதேபோல் கடந்த ஜூன் மாதம் ஐபிஎல்லில் முதல்முறையாகக் கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு வெற்றி விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் தங்கள் ஆதர்ச வீரர்களைப் பார்க்கக்கூடியபோது கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதேபோல் தமிழகத்தில் கரூர் சம்பவம். பொதுவாக மக்கள் தங்கள் ஆதர்ச நடிகர், நடிகைகளையோ, வீரர்களையோ, ஆன்மீகத் தலைவர்களையோ பார்க்கும் ஆர்வத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர். அல்லது அவர்களைப் பார்க்க முடியவில்லை என்றால் வெறித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சமீபமாக இந்தப் போக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் உளவியல் நிபுணர்கள். இதனை அவர்கள் Mob psychology, அதாவது கும்பல் உளவியல் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த மாப் சைக்காலஜி குறித்து சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சுனில்குமாரிடம் பேசினோம்.
‘‘ஒரு தனி மனிதனுடைய நடத்தை என்பது ஒரு கும்பலுடன் சேரும்போது உருவாகும் மனநிலையைத்தான் கும்பல் உளவியல்னு சொல்வோம்.அதாவது ஒரு தனிப்பட்ட மனிதனுடைய நடத்தையை எடுத்து பார்த்தால் ஒருவிதமாக இருக்கும். அதே தனிப்பட்ட மனிதன் ஒரு கும்பல்ல இருக்கும்போது அவனோட நடத்தை அப்படியே மாறும். இதில் முதல்ல எமோஷன்ஸ்னு சொல்வோம். அதாவது உணர்ச்சிகள். நீங்க சந்தோஷமா இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி தனியாக ஒரு அறைக்குள்ள உட்கார்ந்து அந்த உணர்ச்சியை உணரும்போது அதன் தீவிரம் ரொம்பக் குறைவாக இருக்கும். அதுவே நீங்க ஒரு நாலஞ்சு பேருடன் சேர்ந்து அந்த சந்தோஷத்தையோ அல்லது கோபத்தையோ உணரும்போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். இது ஓர் அடிப்படை உளவியல்.
அதனாலதான் ஒரு கும்பலாக அல்லது குழுவாகப் போய் கலாய்க்கும் போது அங்க நிறைய பிரச்னைகள் நடக்குது. இது கும்பல் உளவியலால் ஏற்படக்கூடிய விஷயம். இப்ப மெஸ்சி வந்தபோதுகூட அவரைப் பார்க்கமுடியலனு அவ்வளவு கோபம் படும்போது ஒரு தனிப்பட்ட மனிதனுடைய கோபமாக அது இருந்திருந்தால் இவ்வளவு ஆக்ரோஷமான விஷயங்கள் எல்லாம் நடந்திருக்காது. அது கும்பலுடைய கோபமாக உருமாறுது. அதனால் அதன் தீவிரம் அதிகமாகுது.
இதில் இன்னொரு விஷயம்- சமூக உளவியல் அடிப்படையில் பார்க்கும்போது எனக்கு தனிப்பட்ட ஒரு அடையாளம் இருக்கும். நான் தனியாக இருக்கும்போது என்னைத் தனிப்பட்ட அடையாளமே இயக்கும்.
இதுவே நீங்க ஒரு கும்பல்ல போயிட்டா அந்த கும்பலின் அடையாளத்திற்கு நீங்க மாறிடுவீங்க. உதாரணத்திற்கு இப்போ ஒரு கோயில்ல க்யூல நிக்கிறீங்க. அங்க எல்லாரும் கோவிந்தானோ அல்லது அரோகரானோ சொல்லும் போது நீங்க்களும் அப்படியே அதை அந்தக் கும்பல்ல சொல்றதுக்கான வாய்ப்பு அதிகம். ஏன்னா அந்த கும்பலுடைய அடையாளத்தை நாம் ஏத்துக்கிற மாதிரியான ஒரு உளவியல் நெருக்கடி நம்மை அறியாமலேயே அங்க ஏற்படும். அப்போ, உங்களுடைய சுயஅடையாளம் போய் அந்த கும்பலின் அடையாளத்தை நீங்க ஏத்துக்கற மாதிரியோ அல்லது அந்த கும்பலின் அடையாளத்துக்காக நீங்க வேலை செய்ற மாதிரியான சூழலோ உருவாகும்.
அடுத்து, ஷேர்டு ரெஸ்பான்சிபிலிட்டினு சொல்வோம். அதாவது பகிரப்படும் பொறுப்புகள். இப்போ, தனிப்பட்ட ஒருவர் பஸ் மீது கல் எறிஞ்சார்னா, அதுக்கு அவர்தான் பொறுப்பாவார். அதுவே கும்பல் எனும்போது அவருடைய செயலுக்கான பொறுப்பு அவர் தலையில் இருந்து போய் அது கும்பலுடைய பொறுப்பாக மாறுது. அங்க யாருக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பு கிடையாது. அது பகிரப்படும் பொறுப்புகளாகிடும்.
அப்போ, அங்க தறிகெட்ட நடத்தைகள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். அதாவது அவர் கும்பல்ல சேரும்போது அந்தக் கும்பலின் தாக்கம் அவரை அதிகப்படியாக கோபப்படுத்துறதும், கும்பலின் அடையாளமாக அவருடைய அடையாளம் மாறிடுறதும், அவருக்கான பொறுப்பு கும்பலோட பொறுப்பாக மாறுவதும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும்.
அதனால் ஒரு கும்பல் சேர்ந்தாலே அது ஆபத்துதான். இதை ஆபத்துனு சொல்றதவிட அங்க ஒரு கூட்டு சக்தி இயங்குது என்பதே பாயிண்ட்...’’ என்கிறவர் மேற்கொண்டு தொடர்ந்தார். ‘‘அதேபோல் கும்பல் மனநிலையில் ஒருவரின் சுய விழிப்புணர்வு, சுய அறிவு எல்லாம் குறைஞ்சிடும். அங்க பகுத்தறிவு துளியும் வேலை செய்யாது.
சட்டத்தை மதிக்கிறவங்ககூட ஒரு குரூப்புக்குள்ள போயிட்டாங்கன்னா அவங்க வன்முறையில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.அப்புறம், அந்த குரூப்ல யாராவது ஒண்ணு சொன்னா போதும். அது அப்படியே வதந்தி மாதிரி சீக்கிரமாகவே பரவிடும். அது தாக்குதல் நடக்கும் அளவிற்குப் போயிடும்.
அடுத்து முக்கியமா, இந்த கும்பல் மனநிலை எப்போ சூப்பரா வேலை செய்யும்னா அதுக்கு வசீகரமான தலைவர் வேணும். அதாவது ஒரு கவர்ச்சிகரமான தலைவரால் மட்டும்தான் இந்த கும்பல் உளவியலை அணி திரட்ட முடியும். காரணம், இந்த வசீகரத் தலைவர்களை நார்மலாக நெருங்க முடியாது. தூரமாகத்தான் இருப்பாங்க. தொடமுடியாது. நான் தொட்டுட்டேன், போட்டோ எடுத்திருக்கேன் என்பதையே ரசிகர்கள் ஒரு பெருமையாக சொல்வாங்க. பொதுவாக வசீகரத் தலைவர்களும் சாமானியன்கிட்ட இருந்து தூரமாக தள்ளி, எட்டாத ஒரு இடத்துல இருக்கிறதை விரும்புவாங்க. அவங்க கீழறிங்கி வந்துவிட்டால் அவங்க கவர்ச்சி எல்லாம் போயிடும். இந்த வசீகரமான தலைவர்கள் எல்லா காலத்திலுமே இருக்காங்க. அது சினிமானு இல்ல. ஆன்மீகத் துறையாகவோ, விளையாட்டுத் துறையாகவோகூட இருக்கலாம்.
அதிலிருந்து யாராவது ஒருவர் வருகிறார் என்றால் அவரைப் பார்க்க ஒரு கும்பல் சேரும். நடிகைக்கும் கும்பல் வரும். சாமியாருக்கும் கும்பல் வரும். அந்தக் கும்பல்ல இருக்கிற ஒருத்தருடைய மகிழ்ச்சியோ, கோபமோ அது எளிதாகப் பரவிடும். அப்படி பரவும்போது அந்தக் கும்பல் ஒரு தனிப்பட்ட அடையாளத்தை வகுத்துக் கொள்ளும். அங்க என்னுடைய தலையில் பழி விழாது. கும்பல் மேல் விழும் என்கிற உளவியல் வேலை செய்யும்.
அதனால் இப்ப கரூர் சம்பவத்திற்குப் பிறகு பேரிடர் மேலாண்மைக் குழுவில் மாப் சைக்காலஜி பத்தி சொல்வதற்கு ஒரு உளவியல் குழு அமைக்கணும்னு வலியுறுத்துறாங்க.
என்ன தீர்வு? தனிப்பட்ட நபர்கள் எல்லோரும் தனிப்பட்ட முறையில் எவ்வளவு நல்லவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பண்புடனும், கருணை உள்ளத்துடனும் இருக்கலாம். பகுத்தறிவுடன் வேலை செய்யலாம். அதேநேரம் அவர் ஒரு கும்பல்ல மாட்டிக்கிட்டார்னா இதெல்லாம் அங்க வேலை செய்யும்னு சொல்லமுடியாது. அது அவரின் குற்றமும் கிடையாது. அப்போ ஒரு கும்பலுக்குள்ள நாம் போகும்போது அங்க போகணுமா, வேண்டாமா என்பதை முதல்ல முடிவெடுக்கணும்.
ஒருவேளை போனால், அந்த கும்பல் ஒரு அளவுக்குமேல் தறிகெட்டுப் போகுதுனு ஆரம்பத்திலேயே உணர்ந்துட்டோம்னா அந்த கும்பல்ல இருந்து தூரமாக தள்ளி நிற்பது நல்லது.
இல்லையெனில் அந்தக் கும்பலின் தாக்கம் நமக்கும் வந்திடும். ஒருதடவை அந்தக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்து விடும்போது அங்கே மனிதாபிமானம் மொத்தமாக ஜீரோவுக்கு போயிடும். அதனால், சிந்தித்து செயல்படணும்.
அப்புறம், இன்னைக்கு டிஜிட்டல் மாப் என்பதும் பெருகிட்டு இருக்கு. அதாவது டிஜிட்டல்ல ஒருவரை தாக்குவதற்கு எல்லோரும் ஒண்ணு கூடு வதை டிஜிட்டல் மாப்னு சொல்வோம். உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை ட்ரெண்டிங் பண்றேன் என்கிற பேர்ல நியூஸ் பண்ணுவாங்க. அங்க நம்மை நாம் பாதுகாத்துக்கணும். உணர்ச்சிபூர்வமான ஒரு தகவலை நாம் ஃபார்வேடு பண்ணணுமானு கேட்டுக்கணும்.
அந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிந்து வெளிப்படுத்தணும். கோபத்தையோ, பயத்தையோ கிளப்புகிற மாதிரியான விஷயங்களை நாம் ஷேர் பண்ணாமல் இருக்கணும். இல்லனா டிஜிட்டல் மாப் வேலை செய்யும்.
இப்போ, கும்பல் மனநிலை தாக்கத்துல இளம் தலைமுறையினர் ஈசியாக மாட்டிக்கிறாங்க. காரணம், அவங்களுக்கு இந்தக் காலக்கட்டத்துல உணர்ச்சிகள் அதிகமாக வேலை செய்யும். அதனால் அவர்கள் கவனமாக இருக்கணும்...’’ என எச்சரித்தபடி விடைகொடுத்தார் உளவியல் நிபுணர் சுனில்குமார். =
பேராச்சி கண்ணன்
|