Brain Storage



Just Enough Room Island. மனிதக் குடியிருப்பு கொண்ட, உலகின் மிகச்சிறிய தீவு இது. சுமார் 3300 சதுர அடி பரப்பு கொண்டது. அமெரிக்க - கனடா நாடுகளின் எல்லை அருகே இருக்கிறது. இந்தத் தீவில் என்னவெல்லாம் இருக்கும்? ஒரே ஒரு வீடு, ஒரு மரம், ஒரு சிறிய கடற்கரை. அவ்வளவே. 

இன்றைய உலகில் நம்மைச் சுற்றி பல்வேறு வகையான influencers இயங்கி வருகிறார்கள். சங்க இலக்கிய காலத்திலும்  இருந்தார்கள்! ஆற்றுப்படை என்று ஒரு சிற்றிலக்கிய வகை உண்டு. விறலியர், பாணர், கூத்தர், பொருநர் போன்றோர் வள்ளல்களிடம் சென்று தங்கள் பாடல், ஆடல் கலைகளால் அவர்களை மகிழ்வித்து, பொருள் பெறுவது சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்தது. 

பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன் பெற, தாம் பரிசு பெற்ற வள்ளல் அல்லது அரசனின் பெருமைகளைக் கூறி வழிப்படுத்துவது ஆற்றுப்படை. இதோ, உங்களை, சிற்றிலக்கியங்களை நோக்கி ஆற்றுப்படுத்தி ஆகி விட்டது- கொஞ்சம் தமிழ் என்னும் அமிழ்தத்தை நீங்களும் பருகுங்களேன்.

கர்நாடக இசையில் மொத்தம் 72 தாய்  ராகங்கள் உண்டு. இவற்றுக்கு மேளகர்த்தா ராகங்கள் என்று பெயர். இந்த ராகங்களில் மட்டுமே ச, ரி, க... முதலிய ஏழு ஸ்வரங்களும் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் உண்டு. 

இந்த மேளகர்த்தா ராகங்களில் இருந்து பிறந்த மற்ற ராகங்களுக்கு ஜன்ய ராகங்கள் என்று பெயர். ஜன்ய ராகங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவற்றில் ஏழு ஸ்வரங்களும் இருக்காது. ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்! இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி! காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்!’ என்றெல்லாம் தோன்றுகிறதா?

மனித உடலில் ஒரு புறம் மட்டுமே உடல் பாகத்தோடு இணைந்து மறுபுறம் இணையாமல் இயங்கும் ஒரே தசை நாக்கு. 

நமது சூரிய குடும்பத்தில் தங்களைச் சுற்றும் நிலவு இல்லாத இரண்டே கிரகங்கள், புதனும் வெள்ளியும் (Mercury and Venus) மட்டும்தான். சூரியனுக்கு அருகில் இருப்பதால், சூரியனின் புவி ஈர்ப்பு விசையின் தாக்கத்தால், தங்களுக்கென நிலா இல்லாத வாழ்க்கை அந்த இரண்டு கோள்களுக்கு. 

ராஜேஷ் சுப்ரமணியன்