ஒன்றிய அரசின் மெகா ஊழல்!
இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும், ‘பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக சமீபத்திய மத்திய தலைமை கணக்கு தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கையில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இதுபோலவே சிஏஜி அறிக்கை, பிரதமரின் ‘ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு’ திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகத் தெரிவித்தது. இப்போது தொழில் திறன் பயிற்சி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது சிஏஜி. இதில் போலி வங்கிக் கணக்குகள், பல பயனாளிகளுக்கு ஒரே புகைப்படம், ஒரே இ-மெயில் முகவரி, ஒரே செல்போன் எண், பயனாளிகளின் விவரங்களில் குளறுபடிகள் என மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அரங்கேறியுள்ளன.கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு ‘பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு வந்தது. இது திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்று.
அந்தவகையில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களுக்குத் தொழில்துறைக்கான திறன் பயிற்சியை வழங்கி சான்றிதழ்களை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மொத்தமாக ஒரு கோடியே 32 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வண்ணம் ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசு 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக சுமார் 14 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
ஆனால், இதில் 10 ஆயிரத்து 194 கோடி ரூபாய்தான் விடுவித்தது. இதிலும் 9 ஆயிரத்து 261 கோடி ரூபாயே செலவழிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற்றவர்களும் ஒரு கோடி 10 லட்சம் பேர்கள்தான் என்கிறது சிஏஜி அறிக்கை.
சிஏஜி இந்தத் தணிக்கையை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மற்றும் அசாம், பீகார், ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என எட்டு மாநிலங்கள் ஆகியவற்றில் மேற்கொண்டது. அதில்தான் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. இதில் திட்டமிடல், ஒருங்கிணைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, செயலாக்கம், நிதி, கண்காணிப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற பலவற்றில் குறைபாடுகள் இருந்ததாகச் சொல்கிறது அதன் 108 பக்க அறிக்கை.குறிப்பாக, நடத்தப்பட்ட பயிற்சிகளின் புகைப்பட மற்றும் காணொளி ஆதாரங்கள், பங்கேற்பாளர்களின் கல்வி மற்றும் பணி அனுபவம் தொடர்பான பதிவுகள் ஆகியவை பாதுகாக்கப்படவில்லை.
அத்துடன் பயிற்சியாளர்கள், மதிப்பீட்டாளர்கள், பயிற்சி பெறுபவர்களின் மின்னணு அடையாளங்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் என எதுவும் சரிவர பராமரிக்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தின்கீழ் ஐடி, ஆட்டோமோட்டிவ், ஹெல்த்கேர், விவசாயம், எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல் டெக்னீஷியன், டிரோன் ஆபரேட்டர் உள்ளிட்ட சுமார் 40 துறைகளுக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு 500 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை நிதியுதவி கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் அவர்களின் வங்கிக் கணக்குஎண் பெறப்பட்டு நேரடியாக அதில் பட்டுவாடா செய்யப்படுகிறது.
பயிற்சி தரும் நிறுவனங்களுக்கும் செலவுத்தொகையை அரசே வழங்கிவிடுகிறது. இதில்தான் பயிற்சி பெற்றவர்களின் புகைப்படங்கள் என ஒரே நபரின் புகைப்படமே பல பெயர்களில் இருந்துள்ளது. அதேபோல் ஒரே இ-மெயில் முகவரியே பலருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கு எண்கள் போலியாகவும், வங்கிக் கணக்கு விவரங்களே இல்லாது இருந்ததும் சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது சில வங்கிக் கணக்குகள் 1111111111... எனவும், 1234567... எனவும் இருந்துள்ளது.
எந்த வங்கிக் கணக்கும் இப்படியான நம்பர்களில் இருப்பதில்லை என்கிறது அந்த அறிக்கை. அதுமட்டுமல்ல, இந்தத் திட்டத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் நடந்த பயிற்சிகளின் தரவுகளைத் தணிக்கை செய்ததில், மொத்தம் 95,90,801 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 90,66,264 பேரின் வங்கிக் கணக்கு விவரங்கள் ஜீரோவாக அல்லது எதுவும் குறிப்பிடாமல் இருந்தன என்கிறது அறிக்கை. அதாவது 94.53 சதவீதத்தினரின் வங்கிக் கணக்குகள் போலியானவை. இதில் மீதமுள்ள 5,24,537 பேர்களில் 12,122 தனிப்பட்ட வங்கிக் கணக்கு எண்கள், 52 ஆயிரத்து 381 பேர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது ஒரு வங்கிக் கணக்கு எண் இரண்டுக்கும் மேற்பட்ட தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் ஒரே செல்போன் எண்ணும், ஒரே இ-மெயில் முகவரியும் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 407 இ-மெயில் முகவரிகள், 71 லட்சத்து 20 ஆயிரத்து 995 பேர்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோல் செல்போன் எண்களும் ஒரே எண், இரண்டு, மூன்று விண்ணப்பதாரர்களுக்கும் மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் 36.51 சதவீதம் பேர்களின் இமெயில் முகவரிகள் போலியானவை.
அடுத்ததாக இதற்கான பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இதில் பல பயிற்சி மையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது சிஏஜி அறிக்கை. இருந்தும் இந்த மையங்கள் பயிற்சி அளித்ததாக நிதியைப் பெற்றுள்ளன.
உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பல பயனாளிகளுக்கு ஒரே புகைப்படம்பயன்படுத்தப்பட்டுள்ளது.இன்னும் சிஏஜியின் அந்த 108 பக்க அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் ‘பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ திட்டத்தில் பல்வேறு மோசடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பி.கே.
|