லாக்டவுனை விட இப்பதான் ஆன்லைன்ல மக்கள் அதிகம் வாழறாங்க!



உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் காலங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். பள்ளி, கல்லூரிகள் கூட ஆன்லைன் மூலமாகத்தான் இயங்கின. வேலைகளைக் கூட ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தே செய்தோம். 
நண்பர்கள், உறவினர்களைக் கூட ஆன்லைன் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டோம். பலர் மருத்துவ ஆலோசனைகளை ஆன்லைனில்தான் பெற்றனர். திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகள் கூட ஆன்லைனில் அரங்கேறின.
வெளியில் எங்கேயும் செல்ல முடியாத சூழலால் முழுநேரமும் இணையத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் மூழ்கிக் கிடக்க வேண்டிய நிலை. இதனால் முன்பைவிட, லாக்டவுன் காலங்களில் ஆன்லைன் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. 

லாக்டவுன் முடிந்து உலகமே இயல்பு நிலைக்குத் திரும்பி இரண்டு, மூன்று வருடங்களாகிவிட்டன. இன்று மக்கள் ஆன்லைனில் மூழ்கிக் கிடப்பது குறைந்திருக்கும் என்றுதானே நினைப்போம். ஆனால், அப்படியில்லை. 

ஆம்; லாக்டவுன் காலத்தைவிட, இன்று மக்கள் தினமும் அதிக நேரம் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று அதிர்ச்சியளிக்கின்றன சமீபத்திய ஆய்வுகள். ‘‘லாக்டவுன் காலத்தில் இணையத்திலேயே மூழ்கிக்கிடந்தோம். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும் அது தொடர்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. 

எதனுடனாவது மனிதன் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தால், அவனுக்கு அது பழக்கமாகிவிடும். அதிலிருந்து வெளியேறுவது அவ்வளவு சுலபமில்லை. சிகரெட் பழக்கம் மாதிரிதான்...’’ என்கிறார் உளவியல் ஆலோசகரான எரிக். மற்ற நாட்டினருடன் ஒப்பிடும்போது, இந்தியர்கள்தான் அதிக நேரம் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கின்றனர். 

அதாவது, இந்தியர்கள் சராசரியாக தினமும் 5 முதல் 7.3 மணி நேரம் வரை ஆன்லைனில் இருக்கின்றனர். இது லாக்டவுன் காலத்தைவிட 16 சதவீதம் அதிகம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைத்தளங்கள், யூடியூப் மாதிரியான வீடியோ தளங்கள், கேமிங், ஸ்ட்ரீமிங் தளங்களுக்குத்தான் அதிகமான இந்தியர்கள் விசிட் அடிக்கின்றனர். 

குறிப்பாக ஜென் இஸட் தலைமுறையைச் சேர்ந்த இளசுகள்தான் அதிகளவில் ஆன்லைனைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் மூலமும், 4 சதவீதம் பேர் லேப்டாப், டேப்லெட் மூலமும், ஒரு சதவீதத்தினர் மட்டுமே கம்ப்யூட்டர் மூலமும் இணையத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்கின்றனர். 

தினமும் 7.3 மணி நேரம் ஆன்லைனில் மூழ்கிக் கிடப்பது என்பது, அமெரிக்கர்கள், சீனர்களின் ஆன்லைன் பயன்பாட்டு நேரத்தைவிட அதிகம். இதில் சமூக வலைத்
தளங்கள், வீடியோ மற்றும் கேமிங் தளங்களில்தான் 70 சதவீத நேரத்தை செலவழிக்கின்றனர் ஜென் இஸட் தலைமுறையினர்.  

இந்தியா மட்டுமல்ல,  2025ம் ஆண்டில் மட்டும் இங்கிலாந்து இளசுகளும் சராசரியாக தினமும் 4.30 மணி நேரம் ஆன்லைனில் மூழ்கிக் கிடந்திருக்கின்றனர். இது கொரோனா லாக்டவுன் காலத்தைவிட, அரை மணி நேரம் அதிகம். 

‘‘அந்த நேரத்தில் அவர்கள் இணையத்தில் எதைப் பார்க்கின்றனர் என்பதைப் பொருத்து மனதளவில் பாதிப்புகள் ஏற்படலாம்...’’ என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
இந்தியாவில் ஜென் இஸட்டைச் சேர்ந்த 38 கோடிப்பேர் டிஜிட்டல் வாழ்க்கையின் மையத்தில் இருக்கின்றனர். 

அவர்களை நம்பித்தான் இணைய விளம்பரங்களே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் வாரத்தில் 20 மணி நேரத்துக்கும் மேல் ஓடிடி,  யூடியூப் சேனல்கள், இன்ஸ்டா ரீல்ஸ், பாட்காஸ்ட், மியூசிக் ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கின்றனர். மற்ற தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, ஜென் இஸட் தலைமுறையினர் 1.7 சதவீதம் அதிகமாக கேமிங் தளங்களிலும் தங்களின் நேரத்தை செலவழிக்கின்றனர். 

இவர்களால் 2029-க்குள் டிஜிட்டல் சந்தை 15 சதவீதம் உயரும்.மட்டுமல்ல, 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் போனைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மாதிரியான தளங்களில் உலா வருகின்றனர். 

பெற்றோரின் போனும் இரவு நேரத்தில்தான் குழந்தைகளின் கைகளுக்குக் கிடைப்பதால், உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஸ்மார்ட்போன் மூலமாக இணையத்தைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு.

இதனால் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுகிறது, சரியான தூக்கமின்மையால் பகல் நேரத்தில் பள்ளிக்கூடத்தில் சரியாக பாடங்களைக் கவனிக்க முடியாத நிலை, கண் சம்பந்தமான பிரச்னைகள் வேறு. தவிர, ஆன்லைனில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் குழந்தைகளின் மனதைப் பாதிக்கும்படி இருப்பதால் மனரீதியாக குழந்தைகள் ஆன்லைன் ஆபத்தானது என்கின்றனர். 

தவிர, விபிஎன் எனும் டூலின் பயன்பாடும் அதிகரித்திருக்கின்றது. இந்தியாவில் பல ஆபாசப்பட தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட இந்த தளங்களைக் கூட விபிஎன் மூலம் பார்க்க முடியும். இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் விபிஎன்னின் பயன்பாடு எகிறியுள்ளது. தடை செய்யப்பட்ட ஆபாசப்படத் தளங்களைப் பார்ப்பதற்காகத்தான் அதிகமாக விபிஎன்னைப் பயன்படுத்துவதாகச் சொல்கின்றனர். 

உலகம் முழுவதும் கடந்த மே மாதம் வரை தினமும் 40 லட்சம் பேர் விபிஎன்னைப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால், நவம்பர் மாதத்தில் தினமும் 45 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் ஆபாசப்படத் தளங்களுக்குள் நுழைவதற்காக விபிஎன்னைப் பயன்படுத்தியிருக்கின்றனர். கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை தினமும் 30 லட்சத்தைக் கூட தாண்டவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி.மொத்தத்தில் நாம் அடிமைகளாக இருக்கிறோம், ஆன்லைனுக்கு. டாட். 

த.சக்திவேல்