நடிகை to சர்வதேச சாம்பியன்!



பிரகதி மகாவதி... நினைவில் இருக்கிறதா?

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கோலோச்சியவர்; கோலோச்சுபவர். படங்கள், சீரியல்கள் என சேர்த்து 200க்கும் மேலான ப்ராஜெக்ட்களில் தற்போது வரை பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை. 
தமிழில் பாக்கியராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து ‘பெரிய மருது’, ‘ஜெயம்’, ‘சிலம்பாட்டம்’, ‘தோனி’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட இருபதுக்கும் மேலான படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். 
தெலுங்கில் நூற்றுக்கும் மேலான படங்கள். சன் டிவியின் ‘வம்சம்’ சீரியல் பார்த்தவர்களுக்கு நிச்சயம் பிரகதி மகாவதி நன்கு பரிச்சயம். 

பிசி நடிகையாக இன்றும் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் சினிமாவில் வலம் வருபவர், தற்போது தங்க மங்கையாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
ஆம். துருக்கியில் நடைபெற்ற ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2025ல் பங்கேற்று இந்தியாவுக்காக நான்கு பதக்கங்களை வென்று திரும்பியிருக்கிறார். 

டெட் லிஃப்டில் தங்கம், பெஞ்ச் பிரஸ் & ஸ்குவாட் லிஃப்டிங்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் என மொத்தமாக 4 பதக்கங்கள். 
எப்படி சாதித்தீர்கள்... எப்படி முடிந்தது... என்றால் சிரிக்கிறார். ‘‘நிச்சயம் முடியும். என்னை டிரோல் செய்த அத்தனைப் பேருக்கும் நான் என் பதக்கங்கள் மூலம் பதில் சொல்லியிருக்கிறேன்...’’ முகம் மலர நம்பிக்கையுடன் பேசுகிறார் பிரகதி.

‘‘கனவு, முயற்சி, கடின உழைப்பு... இம்மூன்றும் இருந்தால் நிச்சயம் எந்தத் துறையிலும் தொடர்ந்து சாதிக்கலாம். பலரும் நான் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டேன் என்கிறார்கள். இப்படி நிறைய செய்திகள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன.ஒருபோதும் நடிப்பதை நான் நிறுத்த மாட்டேன். இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு சோறு போடுவது சினிமாதான். சாகும் வரை நிச்சயம் நடிப்பேன். 

தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வெயிட் லிஃப்டிங்கில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த வயதில் இதெல்லாம் தேவையா எனப் பலரும் என்னை என் காது படவே கேலி செய்தார்கள். அதேபோல் ஜிம்முக்கு ஒரு சில உடைகள்தான் நாம பயன்படுத்த முடியும். அந்த உடைகளுக்கும் கூட கிண்டல் கேலி வந்தன. 

‘வயசான காலத்துல இப்படி எல்லாம் கிளாமர் உடை தேவையா’ என என் காதுபட பேசினார்கள். என் கண்ணில் படும் அளவு எழுதித் தள்ளினார்கள்.எங்கே என்ன உடை உடுத்த வேண்டும்... எங்கே என்ன உடை உடுத்தினால் வசதியாக இருக்கும்... எனப் புரியாதவர்களுக்கு நாம வகுப்பு எடுக்க முடியாது. 

அதனால் எந்த நெகட்டிவ் விமர்சனங்களையும் நான் காதில் வாங்கவில்லை. அதே சமயம் என் முயற்சியையும் கைவிடவில்லை. ஹைதராபாத்தில் நடந்த வெயிட் லிஃப்டிங் போட்டிகளை பார்த்தபோதுதான் இதற்கு வயது ஒரு தடையில்லை என்பதே எனக்குப் புரிந்தது...’’ என்னும் பிரகதி, மாவட்ட, மாநில அளவில் தொடர் வெற்றிகளைக் குவிக்கத் துவங்கியிருக்கிறார்.

‘‘உள்ளூரில் நடந்த பவர் லிஃப்டிங் போட்டிகளுக்கான சந்திப்பில்தான் முதல் முயற்சி கொடுத்தேன். நான் ஒரு சிங்கிள் மதர். போதாதா என்னைப் பற்றி பேச? என்னுடைய நடவடிக்கை முதற்கொண்டு எனது அனைத்து அசைவுகளும் வதந்தி பரப்புவோருக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டது.ஆரம்பத்தில் இவையெல்லாம் என்னை பாதித்தன. போகப் போக ‘இவ்வளவுதானே உங்களால பேச முடியும்’ என புறக்கணிக்கத் தொடங்கி என்னுடைய பாதையில் எல்லா தடைகளையும் உடைத்து நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

அதன் விளைவுதான் தேசியப் போட்டிகளில் பங்கேற்பும், குவிக்கும் பதக்கங்களும். இவை நம்பிக்கை தர, என்னுடைய கோச், சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டேன்...’’ என்னும் பிரகதி ஆந்திரா, ஓங்கோல் நகரத்தில் 1976ம் ஆண்டு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பின் மீதான ஆர்வத்தால் தன்னுடைய பதின் பருவத்திலேயே சென்னைக்கு வந்தவர். 

தொடர்ந்து மாடலிங், சினிமா என தனது பயணத்தை, தானாகவே வடிவமைத்துக் கொண்டவர். 2025ம் ஆண்டு துவக்கத்தில் கேரளாவில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் கிளாசிக் பளு தூக்கும் போட்டியில் 115 கிலோ ஸ்குவாட், 50 கிலோ பெஞ்ச் பிரஸ், 122.5 கிலோ எடை தூக்கும் போட்டி என மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றார். 

தற்போது துருக்கியில் நடந்த ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பளு தூக்கும் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பதக்கத்துடன் இந்தியக் கொடியை உடலில் அணிந்து கழுத்தில் மாலையுடன் பிரகதியை நண்பர்களும் , அன்புக்குரியவர்களும் ஊர்வலமாக கொண்டாடி அழைத்து வந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.‘‘முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் போதும். வயது தடையே கிடையாது...’’ தலைநிமிர்ந்து பெருமையுடன் சொல்லுகிறார் பதக்க மங்கை பிரகதி மகாவதி!

ஷாலினி நியூட்டன்