நம்பியாராக மாறிய எம்ஜிஆர்!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான கார்த்தி நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதன் இயக்குநர் நலன் குமாரசாமி. ‘‘‘சூது கவ்வும்’ படம் எடுக்கும்போது, ‘இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா’ என்றார்கள். அப்போது, ‘தர்மம் வெல்லும்’ என ஒரு படம் எடுப்பேன் என்றேன். அதுதான் ‘வா வாத்தியார்’’’ சிறிய அறிமுகத்துடன் பேச ஆரம்பித்தார் நலன் குமாரசாமி.
 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதே?
ஆமா. அதுதான் எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். மசாலா என்று சொல்லக்கூடிய பாட்டு, ஃபைட், எமோஷன் கலந்த கமர்ஷியல் படங்களை உலகளவில் தனித்துவமாக பார்க்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை த்ரில்லர், அட்வென்ச்சர் என சில ஜானர் இருக்கும். ஆனால், மசாலா என்று சொல்லக்கூடிய படங்களை ஸ்பெஷலாக பார்க்கிறேன். அது இந்திய சினிமாவில்தான் இருக்கிறது. வேறு எங்கும் கிடையாது. அந்த வகை ஜானர் படத்துக்கு மரியாதை செலுத்தணும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்தப் படம். ‘டார்க் காமெடி’தான் என்னுடைய ஏரியா. எனக்கும் இந்த மாதிரி ஜானரில் படம் பண்ணணும்னு ஆசை இருந்துச்சு. நாம நினைக்கிற மாதிரி மசாலா படங்கள் பண்ணுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை.
 ஃபேன்டஸி, ஹாரர் போன்ற ஜானர் டிரெண்டாக இருக்கும்போது இந்த மாதிரி மசாலா படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் ?
 ரசிகர்களைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட குட், கிரேட் என்று கொடுத்தால் டியூனாகிவிடுவார்கள். மெச்சூர்டு படங்கள் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கு ஒர்க் அவுட் ஆவதில்லை. எமோஷனல், காமெடி போன்ற அம்சங்கள் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருக்கும்போது அது தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கு ஒர்க் அவுட்டாகிவிடுகிறது. என்னுடைய ‘காதலும் கடந்து போகும்’ படம் கொஞ்சம் மிதமான எமோஷனல் படமாக இருந்துச்சு. அந்த மிதமான பிரசன்டேஷன் தியேட்டருக்கு பத்தவில்லை. அது நல்ல படமாக, மரியாதைக்குரிய படமாக பார்க்கப்பட்டாலும், பல சிக்னலைத் தாண்டி பரபரப்பாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும். ‘96’ படம் மெலிதான காதல் படமாக இருந்தாலும் பாடல்கள், எமோஷன்ஸ் அழுத்தமாக இருந்துச்சு. அப்படி தியேட்டருக்கு அழுத்தமான கதை தேவைப்படுகிறது. இது அந்த வகையான படம். என்ன கதை?
பாட்டு, ஃபைட் வெச்சு ஒரு கதை ரெடி பண்ணணும்னு பண்ணின கதை இது. ராஜ்கிரண் சார் தீவிர எம்ஜிஆர் ரசிகர். தன் பேரன் கார்த்தியை எம்ஜிஆர் போல் வளர்க்க ஆசைப்படுகிறார். சில அசம்பாவிதத்தால் எம்ஜிஆர் ரூட்டில் டிராவல் பண்ண வேண்டிய பேரன், நம்பியார் ரூட்ல டிராவல் பண்ணுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை கமர்ஷியலாக சொல்லியுள்ளோம்.
கார்த்தி முகத்தில் குறும்பு வழியுதே?
‘பருத்திவீரன்’, ‘சிறுத்தை’ போன்ற படங்களில் குசும்பு தெறிக்கும். நானும் அந்த நேச்சர் என்பதால் இருவருக்கும் ஒத்துப்போச்சு. கார்த்தி, தன்னை ஸ்டாராக பார்க்கமாட்டார். ஒரு படத்தின் ஆரம்பத்திலிருந்து உழைச்சு அதற்குரிய அர்ப்பணிப்பு செய்த பிறகு படம் வெளியாகணும்னு வேலை செய்வார்.
எந்தக் கட்டத்திலும் கார்த்தி படமாக வரணும்னு நினைக்கமாட்டார். வெவ்வேறு கதைகளில் ஆர்ட்டிஸ்ட்டாக வெளிப்படணும்னு நெனைப்பார். தன்னை ஒரு ஸ்டாராக வெளிப்படுத்துவதைவிட கலைஞனாக வெளிப்படுத்தணும் என்பதுதான் அவருடைய் நோக்கமாக இருக்கு.
இதில் ராமு என்ற கேரக்டர்ல வர்றார். சில காட்சிகளில் சிலம்பம் சுத்தணும். அதை முறையாக கத்துக்கிட்டார். சண்டைக்காட்சியிலும் ரிஸ்க் எடுத்தார். இந்தப் படத்துல அவருக்கு செம பேர் இருக்கு.
கீர்த்தி ஷெட்டி ஒவ்வொரு பேட்டியிலும் உங்கள் புகழ் பாடுகிறாரே?
படத்துல ஹீரோயின் ரோல் ஆர்வத்தை தூண்டும்படி இருக்கும். நடிக்கத் தெரிஞ்சவங்க இருந்தால் நல்லா இருக்கும்னு ஹீரோயின் தேடினோம். டான்ஸ் பெர்ஃபாமன்ஸும் பண்ணணும். கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் நடிப்புக்காக பேர் வாங்கியவர். அந்த தைரியத்துல கமிட் பண்ணினோம். அவரும் சிறப்பாக பண்ணினார்.
வில்லன் யார்?
சத்யராஜ் சார். அவருடைய வில்லத்தனம் டீசன்ட்டாக இருக்கும். அவர் கேரக்டர் எப்படியிருக்கும் என்றால் லாபிஸ்ட். அரசுத் துறைகளுக்கு மத்தியில் புழங்கும் உயர்தர தரகர். ராஜ்கிரண் சார் பின்னியெடுத்தார். ஆரம்பத்துல வேற நடிகர் மனசுல இருந்தார். ஆனால், இவருடன் வேலைசெய்யும்போதுதான் ஏன் இவரை எல்லோரும் விரும்புறாங்கன்னு தெரிஞ்சது. அந்தளவுக்கு மனதைக் கொள்ளையடிக்கிறார்.
ஆனந்தராஜ் சார் கேமியோ ரோலில் வர்றார். இவர்களுடன் கருணாகரன், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், பி.எல்.தேனப்பன் ஆகியோர் இருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் என்ன ஸ்பெஷல்?
என்னுடைய படங்களுக்கு அவர்தான் மியூசிக் பண்ணுவார் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். எங்கள் காம்போ பற்றி சொல்ல வேண்டியதில்லை. இசைக்கான ஸ்பேஸ் நிறையவே வெச்சிருந்தோம். அவரும் சரியாக பண்ணினார். ஜார்ஜ் வில்லியம்ஸ் கேமரா ஹேண்டில் பண்றார். இந்தியாவின் தலைசிறந்த கேமராமேன்களில் ஒருவர். அந்த ஆளுமை அவருடன் வேலை செய்யும்போது தெரிஞ்சது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஃபுல் சப்போர்ட் பண்ணினார்.
ரசிகர்களுக்கு என்ன சொல்லப்போறீங்க?
அரசியலில் எம்ஜிஆரைப் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க இருக்கலாம். ஆனால், சினிமாவில் அவர் எடுத்த நிலைப்பாடு எல்லோருக்கும் பிடிக்கும். அதாவது புகை பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, அம்மாவை மதிக்கவேண்டும் போன்ற கொள்கைகளை மதிக்கத்தக்கதாகவும், விரும்பத்தக்கதாகவும் மாற்றியவர். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்ல வருகிறோம். மாபெரும் நடிகர் மீது மக்கள் வைத்த அன்பு எப்படி இருந்துச்சு என்பதுதான் படம். மற்றபடி மக்களுக்கு என்ன மெசேஜ் இருக்கு என்றால் படம் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.
திரைத்துறை இப்போது எப்படியுள்ளது?
சினிமா ஓடிடி சார்ந்துள்ளது. எனவே இப்பொழுது எதிர்பாராத தேக்கம் ஏற்பட்டுள்ளது. அழுத்தமான கதை பண்ணும் இயக்குநர்கள் கமர்ஷியல் படங்கள் செய்ய முன் வரணும். எளிமையான எமோஷனலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்கள் கொடுக்கலாம். தற்போது தமிழ் சினிமாவுக்கு வெற்றி தேவைப்படுகிறது. கதை சொல்லும் முறை மாறியுள்ளதா என்று கேட்கிறார்கள். அதுதான் பலமாகவும், பலவீனமாகவும் உள்ளது. தெலுங்கு படங்களை மசாலா படங்கள் என்று சொன்னோம். இபோது அதுதான் பலமாக பார்க்கப்படுகிறது.
தமிழில் முற்போக்கு சிந்தனை, பரீட்சார்த்த ரீதியான படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அந்த மாதிரி படங்கள்தான் அதிகமாக வெளியாகிறது. கமர்ஷியல் படங்கள் குறைந்துள்ளன. அதனால் எல்லாதரப்புக்கும் வருமான இழப்பு. நிறைய படங்கள் ஓடினால் இண்டஸ்ட்ரி பிசியாக இருக்கும்.
படம் ஓடும் பொறுப்பு ஹீரோவுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கு. ஹீரோ ஒரு கட்டம் வரைதான் வேலை செய்ய முடியும். எல்லோருடைய சப்போர்ட்டும் தேவைப்படுகிறது. இப்போது பிராசஸும் மாறியிருக்கு. ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்களான நாங்களும் அதற்கு ஒருவகையில் காரணம்.
எஸ்.ராஜா
|