வாராரு வாராரு கருப்பரு வாராரு...



14. திண்டுக்கல் ஸ்ரீ வண்டி கருப்பண்ணசாமி கோயில் திண்டுக்கல் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது?

சீரக சம்பா அரிசி. அதனால்தான் ‘தலப்பாகட்டி’ பிரியாணியின் தாயகமாக திண்டுக்கல் இருக்கிறது. 

அதுமட்டுமா? 

வேடசந்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதிகள் ஜவுளிக்கு பெயர் போனவை. இங்கு தயாராகும் காட்டன் துணிகளுக்கும் பெட்ஷீட்டுக்கும் ஏக டிமாண்ட். உள்ளூரில் மட்டுமல்ல வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலும் இந்தப் பருத்தி ஆடைகள் விரும்பி வாங்கப்படுகின்றன.

பிறகு?

விவசாய சந்தை. வெங்காயம், மக்காச்சோளம், பருப்பு வகைகள் இங்கு அதிகளவு விளைவதால்... அவை தரமாகவும் சுவையாகவும் இருப்பதால் தென் தமிழகத்தின் முக்கிய விவசாய சந்தையாகத் திகழ்கிறது.

பின்னர்?

சுற்றுலா. நிலமும் மலையும் இணையும் அடிவாரமே திண்டுக்கல். குறிப்பாக கொடைக்கானலுக்கு செல்பவர்கள் திண்டுக்கல்லில் கால் பதித்துவிட்டே மலைக்கு செல்கிறார்கள்.

அப்புறம்?

கோட்டை. பாண்டியர், நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர் காலங்களில் திண்டுக்கல் கோட்டை வலுவான இராணுவத் தளமாக விளங்கியது.

கடைசியாக?

திண்டுக்கல் என்றால் சட்டென்று எல்லோரும் சொல்வது பூட்டுதான்.ஆம். தொழில்நுட்பங்கள் வளர்ந்து இன்று பயோ மெட்ரிக் சிஸ்டம் எனப்படும் கைரேகை சார்ந்த லாக்கர்ஸ் எல்லாம் புழக்கத்துக்கு வந்த பிறகும் கையால் சாவி கொண்டு திறக்கும் பூட்டுகளின் மேல் மக்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவேயில்லை. அதுவும் திண்டுக்கல் பூட்டு என்றால் அவ்வளவு பாதுகாப்பு என்ற எண்ணம் அனைவரது மனதிலும் பதிந்திருக்கிறது.இந்தப் பட்டியலும் இதில் இடம்பெற்ற செய்திகளும் நாம் அனைவரும் அறிந்ததுதான்.

என்றாலும் நம் கருப்பரின் பெருமைகளைக் குறித்து பார்த்து வரும் இந்தத் தொடரில் இதையெல்லாம் ஏன் விளக்கமாக நினைவுபடுத்துகிறோம்?

காரணம், நம் கருப்பரின் அருமையை, அவரது தெய்வீக அம்சத்தை இவையெல்லாம் உணர்த்துகின்றன என்பதால்தான்.

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல் தோன்றுகிறதா?

இல்லை. சுற்றிவளைக்கவில்லை. திண்டுக்கல் பகுதியைச் சுற்றி ஏன் கருப்பண்ணசாமிக்கு அவ்வளவு கோயில்கள் இருக்கின்றன..? ஏன் கருப்பர் வழிபாடு திண்டுகல்லின் இண்டு இடுக்கெல்லாம் நடைபெறுகின்றன..? திண்டுக்கல் பகுதியில் பிறந்து வளரும் ஒவ்வொரு குழந்தையும் ஏன் தனக்கு ஆபத்து வரும்போது கருப்பரை நினைத்துக் கொள்கிறது... 

தனக்கு நல்லது நடக்கும்போது ஏன் அது கருப்பரின் அருள் என அவர் காலடியில் சமர்ப்பிக்கிறது?

இவற்றுக்கான விடைகள் சுட்டிக்காட்டுவது திண்டுக்கல் என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களைத்தான். அதனால்தான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சீரக சம்பாவில் ஆரம்பித்து பூட்டு வரை பார்த்தோம்.ஆம். முன் தோன்றிய மூத்த குடியான தமிழர்களின் வரலாற்றை யார் எழுதினாலும் திண்டுக்கல்லை அழுத்தமாக பதிவு செய்தே ஆகவேண்டும். அந்தளவுக்கு தொன்மையான நிலப்பரப்பு இது.

சங்ககால நிலமும் சமூகமும் ஒன்றிணைந்த பகுதி இது. மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை, வறட்சி நிலவிய பாலை... என மூன்று  திணைகளும் கலந்த பிரதேசமே திண்டுக்கல்.சங்க இலக்கியங்களில் ‘திண்டுக்கல்’ என்ற பெயர் நேரடியாக வராவிட்டாலும், இன்றைய திண்டுக்கல் பகுதி பாண்டிய நாட்டு நிலப்பரப்புக்குள் அடங்கியதுதான்.

வறண்ட சமவெளியும், மலை அடிவாரமும் இணைந்த பகுதி என்பதால் வேட்டை, கால்நடை மேய்ப்பு, வணிகப் பயணம் என்ற மூன்றும் இதே நிலத்தில் நிகழ்ந்தன.
சங்ககாலத்தில், மதுரையில் இருந்து கரூருக்கு - அதாவது பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டுக்குச் - செல்ல வேண்டுமென்றாலும்; மதுரையிலிருந்து கொங்கு நாட்டுக்குப் பயணப்பட வேண்டுமென்றாலும் திண்டுக்கல் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

அந்தளவுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்நாட்டு வணிகப் பாதையின் ஜங்ஷனாக திண்டுக்கல் விளங்கியது. மதுரை, பாண்டியர்களின் தலைநகரம் என்றால், அதன் வடமேற்குக் காவல் எல்லை திண்டுக்கல்தான். மலைகளும் பாறைகளும், இயற்கையும் பாண்டிய நாட்டுக்கு பாதுகாப்பளித்தன. 

நாயக்கர் காலத்தில் திண்டுக்கல் மலையின் மீது பெரும் கோட்டை கட்டப்பட்டது. முன்பே குறிப்பிட்டபடி இப்பகுதி, எல்லைப் பிரதேசம். எனவே அண்டை நாடுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் எதிரிகளைச் சமாளிக்கவும், வணிகர்களை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கவும் இக்கோட்டை பயன்படுத்தப்பட்டது.

எனவே இராணுவ முக்கியத்துவமுள்ள பகுதியாக திண்டுக்கல் மாறியது. இந்த மாற்றமே வரலாற்றில் திருப்புமுனையாகவும் அமைந்தது.ஆம். நாயக்கர் காலத்துக்குப் பின், ஹைதர் அலி, திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்றினார். திப்பு சுல்தான் காலத்தில் இப்பகுதி மைசூர் ஆட்சியின் தெற்கு மையமாகத் திகழ்ந்தது. எனவேதான் ஆங்கிலேய வரலாற்றாசிரியர், South Indian geopoliticsஇன் முக்கியப் புள்ளி என இப்பிரதேசத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். 

திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பின் திண்டுக்கல் ஆங்கிலேயர் வசம் சென்றது. இராணுவ முகாமுடன் சேர்ந்து நிர்வாக மையமாகவும் திண்டுக்கல்லை மாற்றினார்கள். பல நிலப்பரப்புகள், பிரதேசங்களை இணைக்கும் புள்ளி என்பதால், திண்டுக்கல்லை மையமாக வைத்து சாலைகளும் ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டன.இதனால் சுதந்திரப் போராட்டக் காலத்தில் இப்பகுதி முக்கியமான தளப் பிரதேசமானது. தொழிற்சங்கங்களும் தோன்றின. காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் வளர்ந்தன. அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயத்தில் தொடங்கி கைத்தறி நெசவுத் தொழில் வரை வளர்ந்தன; இன்றும் வளர்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் திண்டுக்கல் காலத்தின் நகரம் மட்டுமல்ல; அது சங்க காலத்துக்கு முன்பு தொடங்கி இக்காலம் வரை நீளும் வரலாற்றின் தடத்தை தன்னகத்தே பாதுகாக்கும் மாபெரும் பெட்டகம். சங்ககால வண்டிப்பாதை முதல் இன்றைய நெடுஞ்சாலை வரை, திண்டுக்கல் எப்போதும் பயணத்தில் இருந்த - இருக்கும் - இருக்கப் போகும் நகரம். 

இப்படி புவியியல் ரீதியாக எல்லைப் பிரதேசமாகவும், வணிகப் பாதையாகவும், நிலமும் மலையும் சங்கமிக்கும் புள்ளியாகவும் ஓரிடம் இருந்தால் -
அந்த இடத்தின் அதிபதி - தலைவர் - அரசர் - பாதுகாவலர் - ஒரேயொருவர்தான்.அவர்தான் கருப்பண்ணசாமி.

அதனால்தான் திண்டுக்கல்லில் எங்கு திரும்பினாலும் நம் கருப்பர்தான் காட்சியளிக்கிறார். எங்கு தடுக்கி விழுந்தாலும் அவரது காலடியில்தான் விழுகிறோம்.  

சீரக சம்பா, வெங்காயம், மக்காச்சோளம் என பசியின்றி மக்களைப் பார்த்துக் கொள்கிறார். பருத்தி ஆடைகளை வழங்கி மக்களின் மானத்தைக் காக்கிறார். பூட்டுச் சாவி வழியாக அரும்பாடுபட்டு மக்கள் சேர்க்கும் செல்வங்களைப் பாதுகாக்கிறார்.

எனவேதான் திண்டுக்கல்,லின் முகம் கருப்பர். திண்டுக்கல்லின் அடையாளம் கருப்பர்.  திண்டுக்கல்லும் கருப்பரும் வேறு வேறல்ல. கருப்பரே திண்டுக்கல்.  திண்டுக்கல்லே கருப்பர் என்கிறோம்.

அப்படி திண்டுக்கல்லில் வீற்றிருக்கும் எண்ணற்ற கருப்பரில் ஒருவர்தான், வண்டி கருப்பண்ணசாமி.திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் அமைந்துள்ள இக்கோயில், புராதனமானது. உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. 

பேருந்து, ரயிலில் இந்த ஆலயத்துக்குச் செல்லலாம். ஏன், விமானத்தில் பறந்தும் கண்குளிர வண்டி கருப்பரைக் காணலாம். ஏனெனில் விமான நிலையத்துக்கு அருகில்தான் இவ்வூரும் ஆலயமும் அமைந்துள்ளன. நாள்தோறும் இக்கோயிலில் பூஜை நடக்கிறது. ஆடி மாதம் முக்கிய மாதம். திருவிழா களைகட்டும். மூலவரைச் சந்திக்க பெண்களுக்கு அனுமதியில்லை. மாறாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் மகனாக, சகோதரராக, தந்தையாக, கணவராக, மாமனாராக, தாய் மாமனாக, சித்தப்பா, பெரியப்பாவாக, மாமாவாக கருப்பண்ணசாமியே இருக்கிறார். எனவே வெளிப்புற மண்டபத்திலிருந்தே கருப்பரை தரிசிக்கிறார்கள்.

ஏழு வருடங்களுக்கு ஒருமுறை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏழு கிராம மக்களும் இணைந்து குதிரையெடுப்பு திருவிழா நடத்துவது இக்கோயிலின் சிறப்பு. இந்த குதிரை திருவிழாவின்போது, ​​பக்தர்கள் ‘ஈடு சுமத்துதல்’ என்று அழைக்கப்படும் களிமண் குதிரைகளை இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். 

தமிழில் ‘வண்டி’ என்றால் வாகனங்கள் என்று பொருள். இந்தக் கோயிலில் உள்ள கருப்பசாமி இந்தப் பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாதுகாவலர் என்பதால் மக்கள் செல்லமாக இவரை ‘வண்டி கருப்பர்’ என்றழைக்கத் தொடங்கி அதுவே நிலைபெற்றுவிட்டது.

பிரமாண்டமான கோயில் கிடையாது. சிறிய கோயில்தான். ஆனால், எப்போதும் பக்தர்கள் கருப்பரை கூட்டமாக சூழ்ந்திருப்பதைக் காணலாம்.பசு, குதிரை, ஆடு, யானை... என அந்தக் கால வாகனங்களின் நினைவாக இவற்றின் உருவங்கள் பொறித்த களிமண் சிலைகளைச் செய்து, அவற்றை கருப்பருக்கு மக்கள் காணிக்கையாக வழங்குகிறார்கள்.

செய்வினை, சூனியத்திலிருந்து இக்கருப்பர் பாதுகாப்பார்... தீராத நோய்களை தீர்த்து வைப்பார், உடல்நலக் குறைவை சரிசெய்வார்... என மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். இவர் முன்னால் பொய் சொல்லக் கூடாது... பொய் சத்தியம் செய்யக் கூடாது... என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சேர நாட்டிலிருந்து மதுரைக்குச் சென்ற வணிகர்களும் பயணிகளும் இப்பகுதியைக் கடந்தபோது திடீரென்று அவர்கள் பயணம் செய்த மாட்டு வண்டி நின்றுவிட்டது.நகரவேயில்லை.

இறங்கிப் பார்த்தபோது வண்டியின் கீழ் கல் ஒன்று இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். வண்டியை நகர்த்துவதற்காக அக்கல்லை அப்புறப்படுத்த முயன்றார்கள்.
முடியவில்லை.
நகர்த்த முயன்றார்கள்.
கல் நகரவேயில்லை.
தள்ள முயன்றார்கள்.
அசைக்கவே இயலவில்லை.

செய்வதறியாமல் அவர்கள் திகைத்தபோது அந்த வழியாக ஒரு முதியவர் வருவதைப் பார்த்தார்கள். அவர் அருகில் வந்ததும் அவரிடம் தங்கள் பிரச்னையை சொன்னார்கள்.
முதியவர் சிரித்தார். 

‘‘இது கல் அல்ல. எங்கள்... ஏன், உங்கள்... ஆம், நம் கருப்பர். இவரை அசைக்கவோ அகற்றவோ இதுவரை யாரும் பிறக்கவுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. உங்கள் வண்டி நகராததற்குக் காரணம் இக்கல் அல்ல... இந்தக் கருப்பர்தான். இந்த இடத்தைக் கடக்கும்போது வழித்துணையாக, பாதுகாவலனாக வரும் கருப்பரை வணங்க வேண்டும். பிரார்த்தனை செய்து உடன் வருவதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நீங்கள் அப்படி எதுவும் செய்திருக்க மாட்டீர்கள். உங்களால்தான் வண்டி நகர்கிறது... உங்கள் வீரம்தான் உங்களுக்குப் பாதுகாப்பு என இறுமாப்புடன் இருந்திருப்பீர்கள்.
அந்த ஆணவத்தை அடக்கத்தான் கருப்பர் உங்கள் வண்டியை நகராதபடி பார்வைக்குத் தட்டுப்படாத கயிற்றால் கட்டி வைத்திருக்கிறார். உங்கள் அகம்பாவத்தை விட்டொழித்துவிட்டு கருப்பர் முன் மண்டியிடுங்கள். 

சரணாகதி அடையுங்கள். வண்டி நகரும். கருப்பர் உங்களுக்கு என்றும் துணையிருப்பார்...’’சொல்லிவிட்டு முதியவர் அகன்றார். வண்டியில் வந்த எல்லோரும் மீண்டும் அந்தக் கல்லைப் பார்த்தார்கள். திரும்பி முதியவர் சென்ற திசையை நோக்கினார்கள். அங்கு முதியவர் ஒருவர் சென்றதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

சட்டென்று அனைவருக்கும் உண்மை புரிந்தது. வந்தது ஏதோ ஒரு முதியவர் அல்ல. வயதான தோற்றத்தில் நம்முடன் பேசியவர் சாட்சாத் கருப்பர்தான்.

உடலெல்லாம் சிலிர்க்க அனைவரும் அக்கல்லின் முன்னால் விழுந்து வணங்கினார்கள்.அந்தக் கல்லே இன்றும் ஆலயத்தில் வண்டி கருப்பர் உருவமாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். 

வண்டி கருப்பசாமி கோயில் என்பது, மத அடையாளமல்ல. அது திண்டுக்கல் சமூகத்தின் நினைவகம்.  

ஓம் கருப்பண்ணசாமியே நமஹ:
(கருப்பர் வருவார்)

 - கே.என்.சிவராமன்