வெப் சீரிஸ் எப்படி உலகப் புகழ் அடைகின்றன..?
ஒரு மார்க்கெட்டிங் அனாலிஸிஸ்
உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் வெப் தொடர்களை உருவாக்குவது எப்படி? குறிப்பிட்ட வெப் தொடருக்காக ஒரு வருட காலம் ரசிகர்களைக் காத்திருக்க வைப்பது எப்படி? வெப் சீரிஸின் மார்க்கெட்டிங் யுக்தி என்ன? தியேட்டர் ரிலீஸ், விநியோக நெருக்கடி, இப்படி எவ்வித சிக்கலும் இல்லாமல் வெப் தொடர்களால் எப்படி மில்லியன் மற்றும் பில்லியன்களில் வருமானம் ஈட்ட முடிகிறது? எப்படி இவர்கள் தங்களது வெப் தொடர்களை வெறித்தனமாக ரசிகர்களை பார்க்க வைக்கிறார்கள்?
 தேதி அறிவிப்பு
இந்தியாவில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் பான் இந்தியா படங்கள் கூட சமீப காலமாக பத்து நாட்களுக்கு முன்புதான் ரிலீஸ் தேதியையே அறிவிக்கின்றன அல்லது நமக்குத் தெரிய வருகிறது. அதிலும் அந்த ஒரே தேதியில் நான்கைந்து பெரிய படங்கள் வெளியாகிறது என்றால் சின்னப் படங்கள் வெளியாவது தள்ளிப்போகும் அல்லது ரிலீஸானாலும் வந்த அறிகுறி கூட தெரியாமல் காணாமல் போய்விடும்.  வெப் தொடர்கள் அப்படி கிடையாது. ஒரு வருடம் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்து விடுகிறார்கள். அந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ஸ் துவங்கி ஸ்னிக் பீக், டீஸர் 1, டீஸர் 2, டீஸர் 3... என அந்த ஒரு வருட காலமும் அவர்களின் ப்ரொமோஷன் அந்த வெப் தொடர்தான். ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் அல்லது பேச வைத்துக்கொண்டே இருப்பார்கள். இதற்கு ஆயுதமாக முந்தைய பாகத்தின் காட்சிகள், மாஸ் மொமெண்டுகள் என அனைத்தையும் வெளியிட்டு பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள்.  இப்படித்தான் ஒரு காலத்தில் நம் சினிமா துறையும் இயங்கியது. சுமார் ஆறு மாதங்கள் முன்பே ஒரு படத்திற்கான ப்ரொமோஷன்கள் ஆரம்பித்துவிடும். ஆனால், இப்போது திரைத்துறை அப்படியில்லை. இதனால்தான் மக்களும் வரவிருக்கும் படங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியவில்லை. வெப் தொடர்களின் இந்த ரிலீஸ் தேதி யுக்தியை சினிமாக்களும் பின்பற்றினால் நிச்சயம் லாபம் அடையாவிட்டாலும் குறைந்தபட்சம் நஷ்டத்தில் இருந்தாவது தப்பிக்கலாம். சினிமா தொழிலும் ஆரோக்கியமாக இயங்கும். பிராண்டிங்
இன்னொரு நுணுக்கம் பிராண்டிங். வெப் சீரிஸின் தலைப்பு முதல் அதில் பயன்படுத்தப்படும் நடிகர்களின் காலணி வரை அத்தனையும் பிராண்ட். அதாவது அவர்களின் வெப் தொடரும் ஒரு உலக பிராண்ட். அதனுடன் இணைந்த உலக டாப் பிராண்டுகள் என்கையில் இரட்டிப்பு பிரபலம் கிடைக்கும். உதாரணத்திற்கு சமீபத்தில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெப் தொடருக்காக Nike, Adidas, BMW, American Polo, Macdonalds உட்பட அத்தனை பிராண்டுகளையும் அந்த வெப் தொடரின் காட்சிகளில் பார்க்கலாம்.
அதுமட்டுமல்ல... எந்தெந்த டாப் பிராண்டுகள் குறிப்பிட்ட வெப் சீரிஸுடன் கொலாபரேஷன் செய்திருக்கிறார்களோ அந்த பிராண்ட் நிறுவனங்களும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இந்த வெப் தொடரை பகிர்ந்து ப்ரமோட் செய்யத் தொடங்குகிறார்கள்; தொடர்வார்கள்.
இவர்களின் இன்னொரு பிராண்டிங், ரீஜனல் - அதாவது உள்ளூர் பிராண்டிங். உலக பிராண்டுகள் கூட இந்த வைரல் ட்ரெண்டிற்கு மாறிவிட்டன. இதனடிப்படையில் உள்ளூர் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டிற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்; கொள்வார்கள். எடுத்துக்காட்டாக நமது உள்ளூர் அண்ணாச்சி கடை வரை ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’, ‘வெட்ன ஸ் டே’, ‘மணி ஹீஸ்ட்’ உள்ளிட்ட தொடர்களின் கேரக்டர்களில் தங்களின் ப்ராடக்ட்களை AI தொழில் நட்பம் மூலம் பயன்படுத்தி வீடியோக்களாகவும் ரீல்ஸ்களாகவும் பகிர்ந்ததை சொல்லலாம்.ஆனால், நம்மூரில் உருவாகி நம்மூரிலேயே வெளியாகும் ஒரு படத்திற்கு இப்படியான ப்ரொமோஷன்ஸ் நடைபெறுவதில்லை என்பதுதான் சோகம்.
உண்மையில் இப்படிச் செய்வது வியாபார யுக்திதான். உலகம் முழுக்க, எல்லா தேசங்களிலும் மொழியைக் கடந்து தங்கள் ப்ராடக்ட்டைப் பற்றி பேச வைக்க இது ஒரு நல்ல வழி.
இப்படியான ஒரு பிராண்ட் சங்கிலியை உருவாக்கினால் மட்டும்தான் இந்த டிஜிட்டல் யுகத்தில் படமோ, வெப் தொடரோ அல்லது பொருளோ டிரெண்டாகும்.
மக்களின் மனதில் அதுகுறித்து பதியும். மேலும் 2கே மற்றும் மில்லனியல்கள்தான் இன்று சினிமாவோ வெப் சீரிஸோ அல்லது ப்ராடக்டுக்கோ நுகர்வோர் என்கையில் அவர்களைக் கவர ஒரே தளம் டிஜிட்டல்தான். டிஜிட்டல் ப்ரொமோஷன்
‘மணி ஹீஸ்ட்’, ‘வெட்னஸ்டே’, ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’, ‘ஸ்குவிட் கேம்’ உள்ளிட்ட வெப் தொடர்கள் தங்கள் ஊரில் அல்லது தங்கள் நாட்டில் ப்ரொமோஷன் செய்வதுடன் நிறுத்தவில்லை.
எந்தெந்த நாடுகளில் அதிக மக்கள் தொகை உள்ளனரோ அந்த நாட்டைச் சேர்ந்த டிஜிட்டல் பிரபலங்களை ப்ரமோஷனுக்கு பயன்படுத்தினார்கள். உதாரணத்திற்கு ‘ஸ்குவிட் கேம்’ தொடரின் ப்ரொமோஷனுக்கு நம்மூரில் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களை ஒன்றிணைத்து வீடியோ மற்றும் டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்திருந்தனர். இப்போது ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ என்ன செய்கிறார்கள்? இந்திய டாப் டிஜிட்டல் தளங்களில் தங்களது கதாபாத்திரங்களை பேச வைத்திருக்கிறார்கள்.
இதுதான் அவர்களின் டிஜிட்டல் ப்ரொமோஷன் . முதலில் எந்த ப்ராடக்டாக இருந்தாலும் அதைக் குறித்து பேச வைப்பதன் மூலமாகவே ஒரு விஷயத்தை மக்களிடம் சேர்க்க முடியும். அனைத்துக்கும் மேலாக வெப் தொடர்கள் வெளியாகிவிட்டன... இனி நம் வேலையை நாம் பார்க்கலாம் என சம்பந்தப்பட்ட வெப் சீரிஸ் நினைப்பதில்லை. அதனை தொடர்ந்து பூஸ்ட் செய்கிறார்கள். இதுவும் இன்னொரு ப்ரொமோஷன் முறைதான்.
ஏதாவது ஒரு களத்தில் அல்லது தளத்தில் இந்த வெப் தொடர்பு குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அல்லது இதற்கான ப்ரொமோஷனை செய்துகொண்டே இருப்பார்கள்.
வெப் தொடர் வெளியானபிறகு அதிலிருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் அல்லது மாஸ் காட்சிகளை டிஜிட்டலில் வெளியிட்டு அதுகுறித்து பேச வைப்பார்கள். மேலும் வீடியோ மீம், போட்டோ மீம் என எங்கும் எதிலும் இதுகுறித்த டாபிக் இருந்து கொண்டே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.
‘இப்படி ஒரு வெப் தொடர் வெளியாகியிருக்கிறது... நீ இன்னும் பார்க்கவில்லையா’ அல்லது ‘நாம இன்னும் பார்க்கவில்லையே’ என்கிற குற்ற உணர்ச்சிக்கு மக்களை ஆளாக்கும் செயலை செய்வன திருந்தச் செய்கிறார்கள்.இதெல்லாம்தான் இவர்கள் வெப் தொடர்கள் பூமியிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடர்களாக மாறுவதற்குக் காரணம்.
இந்த ப்ரொமோஷன் ஆலோசனைகளை நம்மூரில் வெளியாகும் படங்களும் பின்பற்றினாலே வெளியாகும் 10 படங்களில் குறைந்தபட்சம் ஆறு படங்களாவது நல்ல லாபத்தில் வெற்றி பெறும்.
ஒன்லி மர்டர்ஸ் இன் த பில்டிங் (Only Murders in the Building) காமெடி, கிரைம் கதைச் சுருக்கம்: ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கொலை மர்மத்தை மூவர் விசாரிக்கிறார்கள். முக்கிய நடிகர்கள்: ஸ்டீவ் மார்ட்டின், மார்ட்டின் ஷார்ட், செலீனா கோமேஸ்.
பிரேக்கிங் பேட் (Breaking Bad) கிரைம் டிராமா, த்ரில்லர். இயக்கம்: வின்ஸ் கில்லிகன். கதைச் சுருக்கம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியர், குடும்பத்திற்காக போதைப்பொருள் தயாரிப்பாளராக மாறும் பயணம். முக்கிய நடிகர்கள்: பிரையன் கிரான்ஸ்டன், ஆரன் பால், அன்னா.
கேம் ஆப் த்ரான்ஸ் (Game of Thrones) ஃபேன்டசி, அரசியல், டிராமா. இயக்கம்: டேவிட் பெனியோஃப், D.B. கதைச் சுருக்கம்: வெஸ்டெராஸ் என்ற கற்பனை உலகில் பல அரச குடும்பங்கள் அரியாசனத்தை கைப்பற்ற நடக்கும் யுத்தம்தான் கதை. முக்கிய நடிகர்கள்: எமிலியா கிளார்க் (டேனெரிஸ்), பீட்டர் டின்க்லேஜ் (டிரியன்), கிட் ஹாரிங்டன் (ஜான் ஸ்னோ), லீனா ஹெடி (செர்சி).
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் (Stranger Things) சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர், மிஸ்டரி. இயக்கம் : டஃபர் சகோதரர்கள். கதைச் சுருக்கம்: 1980களில் ஒரு சிறுவன் காணாமல் போனதும், மறை உலக சக்திகள் வெளிப்படுகின்றன. முக்கிய நடிகர்கள்: மில்லி பாபி ப்ரவுன், வினோனா ரைடர், டேவிட் ஹார்பர்.
த பிக் பேங் தியரி (Big Bang Theory) காமெடி, சிட்காம் இயக்கம்: சக் லோரே, பில் பிராடி. கதைச் சுருக்கம்: விஞ்ஞானத்தில் மூழ்கிய நண்பர்களின் வாழ்க்கை, காதல் மற்றும் சமூக சிக்கல்கள். முக்கிய நடிகர்கள்: ஜிம் பார்சன்ஸ், கேலி குவோக்கோ, குனால் நய்யர்.
ஷெர்லாக் (Sherlock) கிரைம், மிஸ்டரி இயக்கம்: ஸ்டீவன் மொஃபாட், மார்க். கதைச் சுருக்கம்: லண்டனில் ஷெர்லாக் ஹோம்ஸ் விசாரணைகளை நோக்கிப் பயணிக்கும் கதை. முக்கிய நடிகர்கள்: பெனடிக்ட் கம்பர்பேட்ச், மார்ட்டின் ஃப்ரீமேன்.
த வாக்கிங் டெட் (The Walking Dead) ஹாரர், டிராமா இயக்கம்: ஃப்ராங்க் டாரபான்ட். கதைச் சுருக்கம்: ஸோம்பி தாக்குதலால் அழிந்த உலகில் மனிதர்கள் உயிர் வாழ போராடும் கதை. முக்கிய நடிகர்கள்: ஆண்ட்ரூ லிங்கன், நார்மன் ரீடஸ், மெலிசா மெக்பிரைடு.
ஃப்ரண்ட்ஸ் (Friends) காமெடி, சிட்காம் இயக்கம்: டேவிட் கிரேன், மார்டா. கதைச் சுருக்கம்: நியூயார்க் நகரில் வாழும் ஆறு நண்பர்களின் நட்பு, காதல், வாழ்க்கைப் போராட்டங்கள். முக்கிய நடிகர்கள்: ஜெனிபர் அனிஸ்டன், மாட் லெப்லாங், மேத்யூ பேரி, லிசா குட்ரோ.
டெக்ஸ்டர் (Dexter) கிரைம், த்ரில்லர் இயக்கம்: ஜேம்ஸ் மேனோஸ் Jr. கதைச் சுருக்கம்: பகலில் போலீஸ் விசாரணை நிபுணர்; இரவில் தொடர் கொலைகாரன் - இரட்டை வாழ்க்கை. முக்கிய நடிகர்கள்: மைக்கேல் C. ஹால், ஜெனிபர் கார்பென்டர்.
ஷாலினி நியூட்டன்
|