ஏன் இந்த 105 வயது இளைஞர் கொண்டாடப்படுகிறார்?
‘மனது இளமையாக இருந்தால் மனிதர்களுக்கு வயதாவதில்லை’ என்னும் பொன்னான வாக்கியத்தை பலர் கேட்டிருப்போம். ஆனால், அப்படியான ஆப்த வாக்கியத்தைக் காதால் கேட்டவர்களில் பலர் 60 அல்லது 70 வயதையாவது தாண்டியிருப்பார்களா என்பது சந்தேகமே. இந்நிலையில் தென் கொரியாவில் வாழும் ஒருவர் இந்த வாக்கியத்தையும் இன்னும் சில ஆப்த வாக்கியங்களையும் தினந்தோறும் மனதில் நிறுத்தி வாழ்ந்ததால் இன்று 105 வயதையும் கடந்து வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?  நம்பித்தான் ஆகவேண்டும். இதற்காக கின்னஸ் விருதையும் கடந்த ஆண்டு வாங்கி கொரிய மக்களிடம் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். இவருக்கு கின்னஸ் விருது கிடைத்தது வயதுக்காக அல்ல என்பதுதான் முக்கியமான விஷயம்.‘105 வயது நிரம்பிய ஆண் எழுத்தாளர்களில் முதன்மையானவர்’ என்னும் பட்டத்துக்காகத்தான் கின்னஸ் விருது!
இந்த விருதுக்கு சொந்தக்காரர் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் யுங் சுக் (Kim Hyung Seuk). இவர் தென்கொரியாவின் ஒரு பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் கடந்த அரை நூற்றாண்டாக தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருவதுடன் சுமார் 60க்கும் மேற்பட்ட வாழும் கலை தொடர்பான புத்தகங்களை எழுதி கொரிய இளைஞர்களிடையே புகழ்பெற்றிருக்கிறார். விருது கிடைத்ததும் நம்ம ஊர் ஊடகங்கள் மாதிரியே கிம்மிடம் பேட்டி கண்டவர்கள் ‘உங்கள் இளமையின் ரகசசியம் என்ன?’ என்று கடலை போட்டிருக்கிறார்கள்.
இதற்கு அவர், ‘மனதை இளமையாக வைப்பது, நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பது, அதிலும் நம்பிக்கையில் தளர்வு இல்லாமல் இருந்தாலே இளமையாக இருக்கலாம்’ என்றிருக்கிறார்.
சரி. வேறு என்ன சொல்கிறார்?‘இதயத்தை வளர்க்கும்போது அந்த இதயம் முதிர்ச்சியாகி நம்மை இளமையாக வைத்துக்கொள்ளும். என்னுடைய நண்பர்கள் அனைவருமே என்னைப் போலவே 100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அவர்களும் நானும் இந்த இதய வளர்ச்சி பயிற்சிக்கு மூன்று முக்கியமான விஷயங்களைச் செய்தோம்.
ஒன்று, பிறர் பற்றி குறை கூறாமல் இருப்பது. இரண்டாவது, கோபப்படாமல் இருப்பது. மூன்றாவது, நமக்கு வயதாகிவிட்டது என நினைக்காமல் இருப்பது’ என கூலாகச் சொல்கிறார் கிம்.
கிம் பிறந்தது என்னவோ வடகொரியாவில். ஆனால், கொரியா இரண்டாகப் பிரியாமல் இருந்த 1900 வாக்கில் கொரியாவை ஜப்பான் ஆக்கிரமித்துக் கொண்டது.
இந்நேரத்தில் கிம் குடும்பத்துடன் சீனாவுக்கு தப்பி ஓடினார். சீனாவில் படித்த கிம், ஒரு கம்யூனிஸ்டாகவும் மாறியது அப்போதுதான்.
1945ம் ஆண்டு கொரியா ஜப்பானிடமிருந்து விடுதலை அடைந்தது. ஆனால், சில ஆண்டுகளில் கொரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது கொரியாவை ஆண்டது கம்யூனிஸ்ட் அரசுதான். கடுமையான ஆட்சி முறை.
கிம்மும் அப்போது கம்யூனிஸ்ட் ஆட்சி முறையை விமர்சனம் செய்தார். இதனால் கம்யூனிஸ்ட் ஆட்சி தன்னை உயிருடன் விடாது எனக் கருதி, இரண்டாகப் பிரிந்திருந்த கொரியாவின் தென் பகுதிக்கு - தென் கொரியாவுக்கு - குடி பெயர்ந்தார்.
தென்கொரியாவில்தான் அவருக்கு கல்விப் பணி எல்லாம் கிடைத்தது. சிறுவயதில் நோஞ்சானாக இருந்த கிம், 20 வயதிலேயே இறந்துவிடுவார் என நினைத்த தாயின் நினைப்புக்கு மாறாக 105 வயதிலும் தன் பிறந்தநாளைக் கோலாகலமாக இன்றும் கொண்டாடி வருவது ப்ளசன்ட் சர்ப்ரைஸ்.எது கேட்டாலும் மனிதர் இன்றைய இளைஞர்களின் அறிவையும் தாண்டி பதில் சொல்வது ஆச்சரியமானது.
உதாரணமாக ஏஐ பற்றி ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் கிம்.‘இயற்கை அறிவியல்கள், எஞ்சினியரிங் துறையில் ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும். ஏஐ-யும் இந்தமாதிரியான கேள்விக்கு ஒரு பதில் கொடுக்கலாம். ஆனால், சமூக அறிவியல்களின் கேள்விகளுக்கு பல பதில்கள் இருக்கும். கலைக்கு ஒரு பதில் போதாது!’
டி.ரஞ்சித்
|