55 வயது களரி வீராங்கனை!



கேரளாவில் தோன்றிய முக்கியமான தற்காப்புக்கலை, களரிப்பயட்டு. 3000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய களரியைத் தற்காப்புக் கலைகளின் தாய் என்று புகழ்கின்றனர். இன்றும் கூட களரிப்பயட்டு உயிர்ப்புடன் இருப்பதே அதன் தனித்துவத்துக்கு சான்று. இத்தகைய களரிப்பயட்டில் சாம்பியனாக வலம் வருகிறார் சைலஜா. அவரைப் பற்றித்தான் கேரளாவில் களரிப்பயட்டு வட்டத்தில் ஹாட் டாக்.

யார் இந்த சைலஜா?

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பிறந்தவர், சைலஜா. சிறு வயதாக இருந்த போது, களரிப்பயட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த உன்னியார்ச்சா, தும்போலார்ச்சா, மதிலேரி கன்னி போன்ற வீராங்கனைகளின் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். அதனால் குழந்தைப்பருவத்திலேயே களரியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்தார். அவர் பெண் என்பதால் களரியைக் கற்றுக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. 

ஆம்; ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளாவில் பெண்கள் களரியைக் கற்றுக்கொள்வதற்கான சூழல் இல்லை. அதனால் அந்தக் கனவைத் தனக்குள் பூட்டி வைத்துக்கொண்டார் சைலஜா. 

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் படிப்பை முடித்த சைலஜாவுக்கு, தில்லி மாநகராட்சியில் வேலை கிடைத்தது. அங்கே தனியாக வாழ வேண்டும் என்ற சூழல். அதனால் தற்காப்புக்காக களரியைக் கற்றுக்கொள்ள விரும்பினார். 

தில்லி முழுவதும் களரியைக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சியாளர்களைத் தேடினார். அப்போது தில்லியில் யாருமே களரியைக் கற்றுக் கொடுக்கவில்லை. அதனால் களரிக்குப் பதிலாக கராத்தேவைக் கற்றுக்கொண்டார். 

இன்று தில்லி மாநகராட்சியில் அக்கவுண்ட் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார், சைலஜா. நான்கு வருடங்களுக்கு முன்புதான்களரியை முறைப்படி கற்றுக்கொண்டார். அலுவலக நேரம், வீட்டு வேலைகள் போக கிடைக்கும் நேரத்தில் களரியைக் கற்றுக்கொண்டிருக்கிறார். சைலஜாவின் களரிக் கனவுக்கு உறுதுணையாக அவரது கணவரும், குழந்தைகளும் இருந்திருக்கின்றனர். 

சமீபத்தில் தில்லி அளவில் ஒரு களரிப்பயட்டு போட்டி நடந்தது. அதில் கலந்து கொண்ட சைலஜா வெள்ளிப் பதக்கத்தை தன்வசமாக்கியிருக்கிறார். ‘‘உடலை மட்டுமல்லாமல், மனதையும் களரி வலுவாக்குகிறது...’’ என்கிற சைலஜாவுக்கு இப்போது வயது 55.

த.சக்திவேல்