விசாரணைக் கைதிக்கும், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் ஆயுதப் படை காவலருக்குமிடையே உள்ள பயணம்தான் ‘சிறை’!
‘டாணாக்காரன்’ வெற்றிக்குப் பிறகு போலீஸ் கதையாக வெளியாக உள்ள ‘சிறை’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இதன் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் சினிமா பயின்றவர். விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இயக்குநரிடம் பேசினோம். கைதியின் வாழ்க்கையை சொல்லும் படமா?
விசாரணைக் கைதிக்கும், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் ஆயுதப் படை காவலருக்குமிடையே உள்ள பயணம்தான் ‘சிறை’. அந்தப் பயணத்தில் கைதியின் காதல், காவலரின் குடும்பம், காவல்துறைக்கும், கைதிகளுக்குமிடையே உள்ள முரண்பாடுகள் என எல்லாம் திணிப்பாக இல்லாமல் கதையோடு கலந்திருக்கும்.
முதல் பட இயக்குநர்கள் காதல் அல்லது ஆக்ஷன் படங்கள் செய்வார்கள். நீங்கள் எப்படி அழுத்தமான கதையை தேர்வு செய்தீர்கள்?
இந்த மாதிரி கதைகள்தான் ஜெயிக்கும் அல்லது கவனிக்கப்படும் என்று கணித்து சொல்ல முடியாது. இதன் கதைக்கு சொந்தக்காரர் ‘டாணாக்காரன்’ தமிழ். அவரிடம் இந்தக் கதை இருந்ததோடு, தயாரிப்பாளரும் இருந்தார்.
தமிழ் அவருடைய ‘மார்ஷல்’ படத்தை இயக்குவதில் பிசியாக இருந்தார். இயக்குநர் வெற்றி மாறனிடம் நானும், தமிழும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். அந்த நட்பின் அடிப்படையில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு இது. படம் கமிட்டானதும் இருவரும் சேர்ந்து திரைக்கதையை மெருகேற்றினோம். போலீஸ் கதைகளில் ஹீரோக்கள் ஆபீசராக நடிக்க விரும்புவார்கள். விக்ரம்பிரபு காவலர் வேடம் செய்ய எப்படி முன்வந்தார்?
இயக்குநர் தமிழின் கதைமீது அவருக்கு நம்பிக்கை இருந்துச்சு. இது போலீஸ் கதையாக இருந்தாலும், சொல்லப்படாத கதைகள் நிறையவே இருக்கு. இது நிஜமான கதைபோல் தெரிந்தாலும் சினிமாவுக்கான சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ள கதை. அந்த அம்சங்கள் அவருக்குப் பிடிச்சது. ஏற்கனவே இந்தப் படத்தோட ஒன் லைன் அவருக்குத் தெரியும். முழு ஸ்கிரிப்ட் ரெடியானதும், பிடிச்சுப்போய் பண்ணினார்.
முதல் பட இயக்குநர்களுக்கு விக்ரம் பிரபு சார் படம் கிடைத்தால் அது பெரிய கிஃப்ட். தன்னுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாதவர். இயக்குநர் சொல்வதைக் கேட்டு பெஸ்ட் இன்புட் கொடுப்பார்.
காவல்துறையில் சில வருஷங்கள் சர்வீஸ் முடித்த காவலர்கள் தங்கள் துறையை அணுகும்விதம் வித்தியாசமாக இருக்கும். டிபார்ட்மெண்ட்டில் சேரும்போது அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். நடையில் கம்பீரம் தெரியும். பேசும்போது உற்சாகம் அருவியாகக் கொட்டும். நாளடைவில் அந்த வைராக்யம் தளர்ந்து, உடல் எடை கூடி இருக்கும். நடையில் லேசான தளர்வு இருக்கும். அப்படி நிஜ போலீஸுக்கான அத்தனை உடல் மொழியையும் அழகாக திரையில் கொண்டு வந்தார். அந்த வகையில் விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படம் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.
கைதி வேடத்தில் யார் நடிக்கிறார்?
புதுமுகம் அக்ஷய்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா வர்றாங்க. புதுமுகங்கள் அனைவருக்கும் ஆக்டிங் கோச் சூரி என்பவர் பயிற்சி கொடுத்தார். கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த இடத்திலேயே அனைவருக்கும் பயிற்சி கொடுத்தோம்.விக்ரம் பிரபு ஜோடியாக மலையாள நடிகை அனந்தா நடிக்கிறார்.
இந்தக் கதைக்கு போலீஸ் லுக் உள்ள ஹீரோயின் தேவைப்பட்டுச்சு. அதற்கு அனந்தா சரியாக இருந்தார். வுமன் போலீஸ் ஸ்டைல் எப்படி இருக்கும் என்று சொன்னதும் அதைப்பிடிச்சு சிறப்பாக பண்ணினார். கேமரா அனுபவம் இருந்தாலும் அவரும் ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்டார்.
இவர்களுடன் ‘மூணார்’ ரமேஷ், ‘விசாரணை’ சந்திரன், பி.எல்.தேனப்பன், ரம்யா சுரேஷ், பூவிதா, தவமணி, ஹரீஷ், ‘ஜிகர்தண்டா’ செந்தில், இசக்கி ரகு, இஸ்மத் பானு ஆகியோர் இருக்கிறார்கள்.
ஆக்ஷன் கதையில் மெலடி பாடல்கள்... எப்படி?
கதையில் அதற்கான ஸ்பேஸ் இருந்துச்சு. அதை எங்க இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அழகா பயன்படுத்தினார். ‘மன்னிச்சிரு...’ பாடலுக்கு மில்லியன் கணக்கில் வரவேற்பு கிடைச்சிருக்கு. மீதமுள்ள இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து வெளியிட உள்ளோம். எல்லாமே கதையோட கனெக்ட்டாகி இருக்கும். ஜஸ்டின் பற்றி சொல்வதாக இருந்தால் அவரிடம் நமக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்கத் தயங்க மாட்டார். துளியும் உற்சாகம் குறையாது. ஃப்ரெண்ட்லியா பழகுவார்.
ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம். நாங்கள் இருவரும் கவின் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். மாதேஷ் திறமையான டெக்னீஷியன். ‘அயோத்தி’, ‘பி.டி.சார்’, ‘ஆண் பாவம் பொல்லாதது’ போன்றபடங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். எடிட்டிங் பிலோமின்ராஜ்.
பல பெரிய பட்ஜெட் படங்கள் செய்தவர். கதை பிடிச்சிருந்தால் அந்தப் படங்களையும் செய்யத் தயங்காதவர்.‘பார்க்கிங்’, ‘மண்டேலா’ போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்தப் படத்திலும் அவருடைய ஒர்க் பேசப்படும் என்று நம்புகிறோம். இவர்களைப் போலவே ஆர்ட் டைரக்டர், காஸ்டியூமர் என ஒவ்வொருவரும் தங்கள் பெஸ்ட் கொடுத்தார்கள். எல்லோரும் ஒரே அலை வரிசையில் வேலை செய்தார்கள்.
அதற்கு காரணம், என்னுடைய டெக்னீஷியன்கள் அனைவருக்கும் ஸ்கிரிப்ட் கொடுத்துவிடுவேன்.
கதைக்கு என்ன தேவையோ அதை முழுவதுமாக தயார் செய்துவிட்டு, படப்பிடிப்புக்கு வருவார்கள். இயக்குநராக நான் கொஞ்சம் ஃபைன் டியூன் பண்ணினால் போதும். அந்த அளவுக்கு அனைத்தும் துல்லியமாக இருக்கும். தயாரிப்பாளர் லலித்குமார் சார் பெரிய சப்போர்ட்டாக இருந்தார். அவர் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளார். அவர் நினைத்திருந்தால் பெரிய இயக்குநரிடமோ அல்லது சாக்லேட்பாய் லுக் கதைகளையோ செலக்ட் பண்ணியிருக்கலாம். அவருக்கு இந்தக் கதை மீது நம்பிக்கை இருந்ததால் தயாரிக்க முன்வந்ததோடு, முழு சுதந்திரம் கொடுத்தார். உங்கள் பெயருக்கு பக்கத்தில் இருக்கும் ராஜகுமாரி யார்?
எனக்கு சொந்த ஊர் சென்னை. கல்லூரி படிக்கும் போது அப்பா காலமாகிவிட்டார். அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். வீட்ல யாருக்கும் சினிமாவைப் பற்றித் தெரியாது. எல்லோரும் தங்கள் பசங்களை வேலை கிடைக்கிற மாதிரி படிக்க வைப்பாங்க.
அம்மாவுக்கு என் மீது நம்பிக்கை இருந்ததால் நான் விரும்பியபடி கவின் கல்லூரியில் சேர்ந்தேன். அம்மா என்மீது வெச்ச நம்பிக்கையைக் காப்பாத்த அம்மா பேரை என் பெயருடன் சேர்த்துக்கொண்டேன். வெற்றிமாறன் சாரிடம் ‘விசாரணை’ முதல் ‘விடுதலை’ முதல் பாகம் வரை வேலை செய்தேன்.
வெற்றிமாறன் படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?
எங்கள் இயக்குநர் வெளிப்படையாக பேசக்கூடியவர். படம் பார்த்துவிட்டு ‘நல்லாயிருக்கு’னு சொன்னார்.
ரசிகர்களுக்கு என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?
இந்தப் படம் ரசிகர்கள் மனசுல சிறு அழுத்தம் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. ஆனால், அது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. காவலர்கள் சக மனிதர்களை எப்படி பார்க்கணும் என்பதைச் சொல்லி உள்ளோம்.எளிய மக்களிடம் அதிகாரம் முரட்டுத்தனத்தோடும், வசதி படைத்தவர்களிடம் நெகிழ்வாகவும் நடந்துகொள்ளும் போக்கு சமூகத்தில் இருக்கு.
எங்கு முரட்டுத்தனம் வேண்டும், எங்கு நெகிழ்வு வேண்டும் என்ற புரிதல் முக்கியம். அப்படி யாருக்கு உதவி வேண்டும் என்பதைப் பேசி உள்ளோம். அது பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
-எஸ்.ராஜா
|