ஜென் Z தலைமுறையிலிருந்து ஒரு நகராட்சித் தலைவர்!



இந்தியாவின் இளம் நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேரளாவைச் சேர்ந்த தியா பினு புலிக்காகண்டம். ஏற்கனவே இதே கேரளாவிலிருந்துதான் இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை திருவனந்தபுரத்தின் ஆர்யா ராஜேந்திரன் பெற்றிருந்தார். இப்போது தியா பினு.

யார் இந்த தியா பினு?

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கிறது பாலா நகராட்சி. இங்கே பிறந்து வளர்ந்தவர் தியா பினு. இவரின் தந்தை பினு புலிக்காகண்டம் பாலா நகராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். அதுமட்டுமல்ல, இவரின் மாமா பிஜு புலிக்காகண்டமும் நகராட்சி உறுப்பினர்தான். 

இதனால் பாலா நகராட்சியின் முழுப் பரப்பினையும் முற்றிலும் அறிந்தவர்களாக புலிக்காகண்டம் குடும்பத்தினர் இருந்தனர். இந்நிலையில் 2023ம் ஆண்டு கேரளா காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணியின் அழுத்தத்தால் நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து பினு புலிக்காகண்டம் நீக்கப்பட்டார். 

இச்சூழலில் சமீபத்தில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 26 உறுப்பினர்களைக் கொண்ட பாலா நகராட்சிக்கு அப்பா பினு, மாமா பிஜு ஆகியோருடன் தியாவும் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பிஏ பொருளாதாரப் பட்டம் முடித்தவர் தியா. பட்டம் பெற்ற கையுடன் தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அரசியலில் நுழைந்தார். அவர் பாலா நகராட்சியின் 15ஆவது வார்டில் சுயேச்சையாக நின்றார். பலகட்ட பிரசாரங்களை மேற்கொண்டார். இதனால் 131 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டினார். 

உண்மையில் சுயேச்சைகளாகப் போட்டியிடும் முடிவினை புலிக்காகண்டம் குடும்பத்தினர் எடுத்தபோது ஊரில் பலரும் அதனை எள்ளி நகையாடினர். ஆனால், தேர்தல் தீர்ப்பு அந்த நகைப்புக்கு எல்லாம் சவுக்கடி கொடுத்துள்ளது.  

இந்தத் தேர்தலில் அங்கே இடது ஜனநாயக முன்னணி (LDF) 12 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 10 இடங்களையும், சுயேச்சைகள் நான்கு இடங்களையும் வென்றனர். இதில் மூன்று சுயேச்சைகள் தியா, பினு, பிஜு என்பது குறிப்பிடத்தக்கது. 

நகராட்சித் தலைவராக வேண்டுமென்றால் 14 ஓட்டுக்கள் தேவை. இதில் புலிக்காகண்டத்தின் குடும்பத்தினர் தயவில்லாமல் யாராலும் நகராட்சித் தலைவராக முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

 இந்நிலையில் புலிக்காகண்டத்தின் குடும்பத்தினருக்கு நகராட்சித் தலைவர் பதவி அளிக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது ஆதரவை வழங்கியது. இதனால் இந்தியாவின் இளம் நகராட்சித் தலைவராக தியா பினு தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்ல, ஜென் இசட் தலைமுறையிலிருந்து நகராட்சித் தலைவராக ஆகியிருக்கும் முதல் நபர் தியா என்றால் அது மிகையல்ல. 

அத்துடன் அங்கே தியாவின் எழுச்சி, அரசியல் ரீதியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் மூன்றாவது பெரிய கூட்டாளியாக அங்கம் வகிக்கும் ஜோஸ் கே.மணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தலைவராகப் பதவியேற்ற பின்னர் தியா பினுவிடம் இந்தப் பகுதிக்கான உங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் என்ன எனக் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர், ‘‘பாலா, மாநிலத்தின் மிக முக்கியமான நகராட்சிகளில் ஒன்று. இருப்பினும், நிதிப் பற்றாக்குறை காரணமாக பல திட்டங்கள் முடங்கியுள்ளன அல்லது இன்னும் தொடங்கப்
படாமல் இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பாய்வு செய்து முடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இந்த முயற்சியில் பொது மருத்துவமனை மற்றும் நகராட்சி அரங்கத்தை நவீனமயமாக்குதல் ஆகியவை அடங்கும்.

அத்துடன் நகரத்தை அழகுபடுத்துவதோடு சுற்றுலா திறனையும் நாங்கள் ஆராய உள்ளோம். தவிர, பெண்களின் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் குறித்தும் பணிகள் செய்ய இருக்கிறோம்...’’ என முத்தாய்ப்பாகக் கூறியுள்ளார்.  

ஹரிகுகன்