வெனிசுலா அதிபரின் கைதும் முடிவுக்கு வரும் டாலர் ஆதிக்கமும்...
நாம் அறம் என்று சொல்வதுதான் நடைமுறையில் சர்வதேச அளவில் ‘Rule based International order’ எனப்படுகிறது. ஒருவரை ஒருவர் முடிந்த அளவு இடித்துக்கொள்ளாமல் அவரவர் இருக்க, வாணிபம் செய்ய, பயணம் செய்ய, தொழில் புரிய இந்த ஒழுங்கு இன்றி யமையாதது.நல்லதோ கெட்டதோ அந்தந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம் அவர்களுடையது. சர்வதேச எல்லைகளும், இறையாண்மையும் பரஸ்பர புனிதம் கொண்டது.
 ‘இந்த கோட்டை நானும் தாண்ட மாட்டேன்... நீயும் தாண்டக்கூடாது’ என்பதுதான் இந்த ஒழுங்கிற்கான அஸ்திவாரம். அதை பரோட்டா சூரி விளையாட்டு மாதிரி அமெரிக்கா தற்போது அழித்து விளையாடுகிறது. மிக ஆபத்தான விளையாட்டு. அமெரிக்கா, வெனிசுலா நாட்டைத் தாக்கி, அந்நாட்டு அதிபர் மடூரோவை நாடு கடத்தியிருப்பது எப்படிப் பார்த்தாலும சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது.
 சில மாதங்களாக இதற்கான அறிகுறிகள் வந்து கொண்டே இருந்தன. முதலில் வெனிசுலா நாட்டின் படகுகளை அமெரிக்கா போதை மருந்து கடத்தும் கும்பல் என்று சொல்லி நேரடியாக தாக்கி அழித்தது.
பின் இந்தத் தாக்குதல்கள் மெல்ல வெனிசுலாவின் எல்லைக்குள் நிகழ ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வெனிசுலாவின் எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்க படையினர் கைப்பற்றினர். அந்தக் கப்பல் - அதிலிருக்கும் கச்சா எண்ணெயும்தான்! - அமெரிக்காவுக்கே கொண்டு செல்லப்பட்டது. இப்போது நேரடியாகவே வெனிசுலா தலைநகரை தாக்கி ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலாவின் எண்ணெய் வளம் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் என்று சொல்லியிருப்பது அப்பட்டமான சர்வதேச வழிப்பறி. பல நாடுகளைப் போல வெனிசுலாவின் எண்ணெய் வளம் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டது. எந்த தனியார் கம்பெனியும் அதற்கு ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.
இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு ரஷ்யாவிடம் போய், ஆக்கிரமித்த உக்ரைன் நாட்டின் பகுதியிலிருந்து வெளியேறு என்று சொல்ல முடியும்? நாளையே சீனா தைவானை ரவுண்டு கட்டி அடித்தால் அதை தட்டிக் கேட்க என்ன தார்மீகம் உள்ளது?
அமெரிக்காவுக்கு தென் அமெரிக்காவில் இவ்வித ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்துவது என்பது புதிதல்ல. வெனிசுலாவிலே கூட இதே போன்ற ஒரு கவிழ்ப்பை முன்னர் முயன்றிருக்கிறது.
பின் சமீப காலங்களில் இப்படி நேரடியாக ஆட்சிக்கவிழ்ப்பு வகை தலையீடுகளை கணிசமாக குறைத்துக்கொண்டது. இதெல்லாம் அமெரிக்கர்களே மறக்க விரும்பும் ரத்தக்கறை படிந்த வரலாறு. இப்போது முன்னாள் குடிகாரன் முழு பாட்டிலை குடித்த கதையாக 50 வருடங்கள் பின்நோக்கி போயிருக்கிறது.
இது ஏதோ வெனிசுலா நாட்டை மட்டும் குறிவைக்கும் நடவடிக்கையாகத் தெரியவில்லை. இது கொலம்பியா, பனாமா, மெக்சிகோ, கனடா, கிரீன்லாந்து என்று எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது.
இந்த நாடுகள் அனைத்தின் மீதும் டிரம்ப் ஏதோ வகையில் புவிசார் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐநா சபைக்கு இந்த விவகாரம் போகும். ஆனால், அங்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ரஷ்யா, சீனா எல்லாம் வெந்தது போலவும் வேகாதது போலவும் அமுக்கமாக ஏதாவது அறிக்கை விடுவார்கள். இங்கிலாந்து, ஃபிரான்சு எல்லாம் பேசலாம். ஆனால், செயலில் எதையும் நகர்த்திவிட முடியாது.
முன்னர், ‘இதோ அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்... எனக்கு நோபல் பரிசு கொடு’ என்று டிரம்ப் கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது ‘மடூரோவை பிடித்து விட்டேன்... இப்பவாவது குடுங்கயா’ என்று கதறுவார். அவ்வளவே. அமெரிக்காவிலும் சீக்கிரம் இடைத்தேர்தல் வருகிறது. வெனிசுலா முக்கிய பேசுபொருளாகும்.
டிரம்பை தாண்டி, இதை அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் சார்ந்த மிகப்பெரிய ஒரு யூ-டர்னாக பார்க்கலாம்.
ஆசியாவை கிட்டத்தட்ட சீனாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது. ஐரோப்பாவை, நேட்டோவை ஏற்கனவே கைவிட்டுவிட்டது. இனி அவர்கள் பாடு ரஷ்யாவின் பாடு.
அமெரிக்கா இனி வட, தென் அமெரிக்க பிராந்தியங்களை மையப்படுத்தி தனது வெளியுறவு கொள்கையை வடிவமைக்கும் போல தெரிகிறது. மத்திய கிழக்கை, அதன் வளங்களை இஸ்ரேலை முன்வைத்து கட்டுப்படுத்தும்.
அமெரிக்கா - ரஷ்யா- சீனா என்று மும்முனை வல்லரசுகளின் காலம் தொடங்கிவிட்டது. இவைகளுக்கு இடையேயான போட்டியும் பூசலும்தான் வருங்கால சர்வதேச அரசியலை வழிநடத்தும்.
ராணுவத்துக்கும் போர்க்கருவிகளுக்கும் செலவிடப்படும் தொகை கணிசமாக அதிகரிக்கும். பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தங்களின் ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்தச் செலவின் பளு கூடுதல் மறைமுக வரிகளாக மக்களின் தலையில்தான் விழும். இச்சூழலில் வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்புக்கான காரணமாக ஒரு விஷயத்தை சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கிறார்கள்.அதுதான் டாலர் ஆதிக்கத்திற்கான இறுதிப் போராட்டம்.வெனிசுலா மீது அமெரிக்கா படையெடுப்பதற்கான உண்மையான காரணம் 1974ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி கிசிஞ்சர், சவுதி அரேபியாவுடன் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தில் உள்ளது.
இது போதைப்பொருள் தடுப்புக்கோ, பயங்கரவாதத்தை ஒழிக்கவோ அல்லது ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டவோ அல்ல; இது அமெரிக்க டாலரின் இருப்பு குறித்த விஷயம்.
கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவை உலகின் பெரும் பொருளாதார சக்தியாக வைத்திருப்பது இந்த ‘பெட்ரோடாலர்’ (Petrodollar) முறைதான். வெனிசுலா இப்போது அதை முடிவுக்குக் கொண்டுவரத் துணிந்ததுதான், அந்நாட்டுக்குள் புகுந்து அவர்களது அதிபரை கைது செய்ததற்கான காரணம் என்கிறார்கள்.
வெனிசுலாவிடம் 303 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இது பூமியிலேயே அதிகப்படியான அளவு. சவுதி அரேபியாவை விட அதிகம்.
வெனிசுலா தனது எண்ணெயை டாலருக்குப் பதில் சீனாவின் யுவான் (Yuan) நாணயத்தில் விற்கத் தொடங்கியது.2018ல் ‘டாலரிடமிருந்து விடுதலை’ பெறுவதாக வெனிசுலா அறிவித்தது. ‘யுவான், யூரோ, ரூபிள் என எதை வேண்டுமானாலும் ஏற்போம்...
ஆனால், டாலரை ஏற்கமாட்டோம்’ என்று செயல்பட்டது.1974ம் ஆண்டு ஒப்பந்தப்படி, உலகில் விற்கப்படும் அனைத்து கச்சா எண்ணெயும் அமெரிக்க டாலரில் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்குப் பதிலாக சவுதிக்கு அமெரிக்கா ராணுவப் பாதுகாப்பு அளிக்கும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் எண்ணெய் வாங்க டாலரைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அமெரிக்கா தாராளமாகப் பணம் அச்சிடவும், தனது ராணுவ மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவியது.
இந்த முறையை எதிர்த்தவர்களுக்கு என்ன ஆனது?
மரணம்தான். 2000ம் ஆண்டு அன்றைய ஈராக் அதிபர் சதாம் உசேன், எண்ணெயை யூரோவில் விற்பதாக அறிவித்தார். 2003ல் ஈராக் மீது படையெடுப்பு நடந்தது; அவர் கொல்லப்பட்டார்; எண்ணெய் மீண்டும் டாலருக்கு மாறியது.2009ம் ஆண்டு லிபியா நாட்டின் அதிபரான கடாஃபி, ஆப்பிரிக்காவிற்கென ‘தங்க தினார்’ (Gold Dinar) என்ற நாணயத்தை முன்மொழிந்தார். 2011ல் நேட்டோ படைகள் லிபியாவைத் தாக்கின; கடாஃபி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.இப்போது வெனிசுலா அதிபர் மடூரோ.
சதாம் மற்றும் கடாஃபியை விட 5 மடங்கு அதிக எண்ணெய் வைத்திருக்கும் வெனிசுலா நாட்டின் அதிபரான மடூரோ, சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து டாலருக்கு மாற்றான பொருளாதார முறையைக் கட்டமைத்தார். அதன் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறார்.
டாலரின் ஆதிக்கத்தை எதிர்த்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.என்றாலும் டாலரின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் ரஷ்யா ஏற்கனவே ரூபிள் மற்றும் யுவானில் வர்த்தகம் செய்கிறது. சவுதி அரேபியா, தங்கள் நாணயமான யுவான் குறித்துப் பேசி வருகிறது. சீனா தனது சொந்த பணப்பரிவர்த்தனை முறையான CIPSஐ வலுப்படுத்தியுள்ளது. BRICS நாடுகள் டாலரைத் தவிர்க்கப் புதிய முறைகளை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில் வெனிசுலா BRICSஇல் இணைந்தால் இந்த மாற்றம் இன்னும் வேகமாக நடக்கும். அதைத் தடுக்கவே கடந்த ஜனவரி 3 அன்று அந்நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது. போதைப்பொருள் தடுப்பு என்பது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே.இதையெல்லாம் சுட்டிக்காட்டும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், இறுதியாக ஒன்றைச் சொல்கிறார்கள்.
உங்கள் நாணயத்தைப் பயன்படுத்தும்படி ஒரு நாட்டை நிர்ப்பந்திக்க நீங்கள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் நாணயம் ஏற்கனவே பலவீனமடைந்துவிட்டது என்று அர்த்தம். வெனிசுலா ஒரு தொடக்கமல்ல. அது டாலர் ஆதிக்கத்தின் விரக்தியான முடிவு.
கே.வி.
|