கத்தியும் ரத்தமும் தெறிக்கும் கோலிவுட்டில் உணர்வுளைப் பேசும் ஒரு படம்!



ஒரு குடும்பப் புகைப்படம்... நால்வர் அடங்கிய போஸ்டர்... நால்வரில் மெல்லிய புன்னகை முகத்தில் தாங்கி நிற்கும் செல்வராகவன் மற்றும் கௌசல்யா. தலைப்பு ‘மனிதன் தெய்வமாகலாம்’.
ஏராளமான கேள்விகள் உதிக்க விளக்கமாக பதில் அளித்தார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். ‘டிரிப்’, ‘தூக்குதுரை’ உள்ளிட்ட இரண்டு படங்களுக்குப் பிறகு அவர் கொடுக்கும் மூன்றாவது படம் இது. 

‘மனிதன் தெய்வமாகலாம்’? 

‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...’ என்பது புகழ் பெற்ற பாடல் வரி. 1962ம் ஆண்டு வெளியான ‘சுமைதாங்கி’ படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி மியூசிக்கில் வெளியான பாட்டு. பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியிருப்பார். கண்ணதாசன் ஐயா வரிகள். ஒரே பாடலில் அவ்வளவு அர்த்தம் இருக்கும். அந்தப் பாடலுக்கே மிகப்பெரும் வரலாறு உண்டு. உண்மையான வரிகள், நாம நினைச்சால் யாருடைய வாழ்க்கைக்கும் நாம கடவுள் ஆக முடியும் என்பது.

அதுதான் இந்தப் படத்தின் கதைக்கரு. அதனால்தான் தலைப்பும் அதுவே. இதற்கு முன்னாடி நான் டைரக்ட் செய்த ரெண்டு படங்களுமே காமெடி, இளமை, கமர்ஷியல் என 
இருக்கும். முதல்படம் ‘சன் டிவி’யில் நல்ல சேனல் ரைட்ஸ்க்கு போனது.

இரண்டாம் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இங்கே நல்ல கதை, உணர்வுபூர்வமான திரைக்கதை சொன்னால்தான் நல்ல இயக்குநர் என்கிற பெயர் கிடைக்கும். அதை நோக்கிதான் இந்தப் படம். 

நமக்கு ஒரு பிரச்னை, அவசர உதவி தேவை. அந்த நேரத்தில் உதவி செய்கிறவர்களை ‘கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினீங்க!’ என்போம். அப்படி அமைதியாக இருக்கும் ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் எப்படி அந்த கிராமத்தை பாதிக்குது... அதைச் சரிசெய்ய போராடும் ஒரு எளிய மனிதன் எப்படி தெய்வமாகிறான் என்பதே கதை.

செல்வராகவன், கௌசல்யா... போஸ்டரில் நிற்கும் நால்வர் குறித்து சொல்லுங்கள்?

தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லும்போதே, செல்வராகவன் சார்தான் இந்தக் கதாபாத்திரம் செய்கிறார்னு சொன்னேன். தயாரிப்பாளருக்கும் அந்த சாய்ஸ் பிடிச்சிருந்தது. 
செல்வராகவன் சார்கிட்ட டைம் கேட்டேன். அதிர்ஷ்டவசமா என்னுடைய ‘டிரிப்’ படத்தை அவர் பார்த்திருக்கார். கதை சொன்னேன். பொறுமையாகக் கேட்டு உடனே பவுண்ட் ஸ்கிரிப்ட் கேட்டார். கொடுத்தேன். ஒவ்வொரு லைனாக படிச்சிட்டு ஓகே சொன்னார். 

இதுவரைக்கும் செல்வராகவன் சார் அவருடைய எப்போதுமான கெட்டப்பில்தான் நடிச்சிருப்பார். ஆனா, இந்தப் படத்தில் கேரக்டருக்காக எடை குறைச்சு, ஹேர்ஸ்டைல் எல்லாம் கூட மாற்றி யங் வெர்ஷனா நடிச்சிருக்கார். 

அடுத்து கௌசல்யா மேடம். கதை சொன்னேன். அவங்களுக்கும் ஓகே.  செல்வராகவன் சார் போலவே ஒரு அப்பாவி முகம்... அதே சமயம் பழகிய முகமாக இருக்கணும். அவருக்கு அக்கா கேரக்டர். எந்த எதிர்பார்ப்பும், கேள்வியும் இல்லாமல் நடிச்சாங்க. 

ஆர்.எஸ்.சதீஷ் சார், அவருடைய மனைவி விஜயா சதீஷ் மேடம் இருவரும் சேர்ந்துதான் படத்தைத் தயாரிக்கிறாங்க. கௌசல்யா மேடம் ஜோடியாக, செல்வராகவன் சார் மாமாவாக தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ் சார் நடிக்கிறார். இதற்கு முன்பு ரெண்டு, மூன்று படங்கள் நடிச்சிருக்கார். 

செல்வராகவன் சார் ஜோடியாக குஷி ரவி. கன்னடத்தில் வெளியான ‘தியா’ என்கிற படத்தைப் பார்த்து ஓகே செய்தோம். இவங்க நால்வரைத்தான் நீங்க போஸ்டரில் பார்க்கறீங்க. இவங்களோடு மைம் கோபி, ஒய். ஜி.மகேந்திரன், லீர்த்திகா நடிச்சிருக்காங்க. 
சமீப காலமாக மனிதன் மிருகமாகத்தான் மாறிக்கொண்டிருக்கிறான். இந்தச் சமயத்தில் இந்தப் படம் என்ன செய்யப் போகிறது?

ஒரு படம் முழுமையாக ஒரு சமூகத்தைத் திருத்துமான்னு கேட்டா அது சந்தேகம்தான். ஆனால், ஒரு சின்ன தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கத்தியும், ரத்தமுமாக நிற்கும் மனிதர்களை நாம் ஒரு படம் காட்டி எல்லாம் திருத்த முடியாது. 

அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. இந்தக் கதை ஒரு முக்கியமான சம்பவம்... செய்திகளில் நாம படித்த, அதே சமயம் கண்டுக்காம கடந்து போன கதை. அதை மையமாக வைத்துதான் திரைக்கதை அமைச்சிருக்கேன். உணர்வுபூர்வமான ஒரு தாக்கத்தை இந்தப் படம் உண்டாக்கும். 

என்னுடைய முந்தைய பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மாதான் இந்தப் படத்துக்கும் விஷுவல் செய்திருக்கார். காட்சிகள் ரொம்ப எதார்த்தமாக வந்திருக்கு. எடிட்டராக தீபக். ‘கதிர்’, ‘சிவகுமாரின் சபதம்’, ஹர்பஜன் சிங், அர்ஜுன் சார் நடிச்ச ‘ஃப்ரண்ட்ஷிப்’,  என்னுடைய ‘ ட்ரிப்’ உட்பட பல படங்களில் எடிட்டராக வேலை செய்தவர் தீபக்.இசையமைப்பாளராக ஏ.கே.பிரியன், இந்தப் படத்தில் அறிமுகம். பின்னணி இசை அருமையாக செய்திருக்கார். லைட் வெயிட்டா ஓர் உணர்வுபூர்வமான கதையாக ‘மனிதன் தெய்வமாகலாம்’ இருக்கும்.  

ஷாலினி நியூட்டன்