இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!



பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல். 
‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘அனலி’ படத்தை தயாரித்து நடித்துள்ளார். பட வெளியீட்டுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம்.

அமெரிக்கா டூ சென்னை டிராவல் பற்றி சொல்லுங்க..?

கலிஃபோர்னியாவில் நாங்கள் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் டாக்டர், என்ஜினியர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், என்னுடைய கவனம் சினிமா பக்கம் போயிடுச்சு. அதற்காக படிப்பு ஏறலையான்னு கேட்காதீங்க. நான் படிப்ஸ் பொண்ணு. தற்போது பன்னாட்டு கம்பெனியில் இயக்குனராகவும் வேலை பார்க்கிறேன். 
தொழில் முனைவராக பல புதிய நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். டிரேடிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னுடைய 10 வயசுலேயே பாக்கெட் மணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்.

குழந்தைகளுக்கு பண நிர்வாகம் பற்றி சின்ன வயசுலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்ற எண்ணம் உருவாகும். அந்த வகையில் என்னைப்பற்றி நானே நிறைய சொல்லக்கூடாது. இன்ஸ்ட்டா பக்கம் வந்தீங்கன்னா எனக்கு எத்தனை முகம் இருக்குன்னு தெரிஞ்சுடும். 

சினிமாவுக்கு வர யார் இன்ஸ்பிரேஷன்?

எனக்கு எந்தவித சினிமா பேக்ரவுண்டும் கிடையாது. சின்ன வயசுல பாடல் போட்டி, மோனோ ஆக்டிங் என எல்லா போட்டிகளிலும் ஆர்வமாக கலந்துகொள்வேன். அப்படிதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. 

ரொம்ப அழகாக தமிழ் பேசுறீங்க?

எனக்கு தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலம், ஸ்பானீஷ், ஃபிரெஞ்சு உட்பட பல மொழிகள் தெரியும். என்னுடைய தாய் மொழி எது என்று கேட்டால் ஆங்கிலம் என்று சொல்வேன்.  
எங்கள் பூர்விகம் கோயமுத்தூர். தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் மொழியை நாங்கள் மறக்கவில்லை. வீட்டில் எல்லோரும் தமிழில் பேசுவோம். அந்த தொடர் பழக்கம் இருந்ததால்தான் என்னால் சரளமாக தமிழில் பேச முடிகிறது.

இளையராஜா இசையில் பாடுவதற்காகவே நீங்கள் படம் தயாரித்ததாக சொல்கிறார்களே?

3 வருஷத்துக்கு முன்பு சினிமாவில் பாடவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று நடைமுறையைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு விஷயம் நடக்கணும்னு தொடர்ந்து நெனைக்கும்போது ஒருநாள் அது தன்னால் நடக்கும். அப்படி முப்பொழுதும் ராஜா சாரை சந்திச்சு, அவர் இசையில் பாடணும் என்பதுதான் என்னுடைய முழுநேர சிந்தனையாக இருந்துச்சு. 

அப்படி ஒரு முறை அதிர்ஷ்டவசமாக இளையராஜா சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது அவருடைய சில பாடல்களை அவர் முன்பு பாடிக் காட்டினேன். ராஜா சார், தன்னுடைய பாடல்களை தமிழ் அல்லாத ஒரு பெண் சிறப்பாக பாடுகிறாரே என்று ஆச்சயர்ப்பட்டார். ‘உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா என்று தவிக்கும் பல கோடி ரசிகர், ரசிகைகளில் நானும் ஒருத்தி சார்.அதைத்தான் நீங்க இப்போது பார்க்கிறீங்க’ என்று சொன்னதும் சந்தோஷப்பட்டார். 

இளையராஜாவுடன் சேர்ந்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?

இளையராஜா சார் இசையில் பாட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்துச்சு. ‘வர்ணாஸ்ரமம்’ படத்தைத் தொடர்ந்து ‘தினசரி’ படத்தை தயாரித்து நடித்தேன். அந்தப் படத்துக்கு ராஜா சார் இசையமைத்தார். 

அந்தப் படத்தில்தான் என் கனவு நிறைவேறுச்சுன்னு சொல்லலாம். அந்தப் படத்துக்காக ஐந்து பாடல்கள் எழுதி, இசையமைத்தார் ராஜா சார். 

‘காதலிக்க பொய் சொல்லி...’ என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. ஆரம்பத்துல டிராக் மட்டுமே பாடினேன். ஃபைனல் ரிக்கார்டிங் டைமில் அமெரிக்காவில் இருந்ததால் அந்தப் பாடலை பவதாரிணி மேடம் பாடினார். என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால் அதுதான் பவதாரிணி மேடம் கடைசியாக பாடிய பாடலாக இருக்கும். 

ராஜா சாருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தற்போது காப்பிரைட் விஷயத்தில் ராஜா சார் பற்றி தவறான பிம்பம் உருவாக்கி வெச்சிருக்காங்க. நான் பார்த்தவரை ராஜா சார் பியூர் ஜென்டில்மேன். 

ஜெனூன் பெர்சன். பணம் மீது அவருக்கு பிடிப்பு கிடையாது. அவர் பணத்துக்குப் பின்னாடி போகக்கூடியவர் கிடையாது. நான்  வளர்ந்துவரும் தயாரிப்பாளர் என்பதால் ரொம்ப குறைவான பட்ஜெட்டில் செய்துகொடுத்தார். சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பார்க்கமாட்டார். யார் போனாலும் அவர்களுக்கு மதிப்பு தருவார். விரைவில் ராஜா சார் இசையில் முழுப் பாடலையும் பாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு. 

விஜயசாந்தி இடத்தைப் பிடிக்கப் போறீங்கன்னு சினிமா வட்டாரத்துல சொல்றாங்களே?

அதை நான் சொல்லவில்லை. சண்டை இயக்குநர் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர்தான் சொன்னார். ‘அனலி’ முழுமையான ஆக்‌ஷன் படம். அந்தப் படத்துல வேலை செய்யும்போது சூப்பர் மாஸ்டர், ‘30 வருஷங்களா விஜயசாந்தி மேடம் விட்டுவிட்டுப்போன் இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை நீதான் நிரப்பணும்’னு ஃபைட் சீன்ல ரொம்பவே உற்சாகப்படுத்தினார். 

படத்துல ஐந்து ஆக்‌ஷன் காட்சிகள். கிக் பாக்சிங், அந்தரத்தில் பறக்கும் காட்சி என பல ஸ்டைலில்  சண்டைக்காட்சியை படமாக்கினார். சக்திவாசு, இனியா என சக நடிகர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

தொடர்ந்து பாடப்போறீங்களா அல்லது நடிக்கப் போறீங்களா?

பாடுவதுதான் என்னுடைய முதல் சாய்ஸாக இருந்துச்சு. 3 படங்கள் நடித்தபிறகு நடிப்பு பக்கம் கவனம் திரும்பிடுச்சு. அதுமட்டுமல்ல அதிகளவில் ஆக்‌ஷன் படங்களில் நடிக்கணும். ஹீரோ, ஹீரோயின் யாராக இருந்தாலும் ஆக்‌ஷன் ரோல் பண்ணுகிறவர்கள்தான் மக்கள் மனசுல இடம் பிடிக்க முடியும். வெற்றி பெற்ற ஹீரோக்கள் யார் என்று லிஸ்ட் போட்டால் எல்லோரும் ஆக்‌ஷன் படங்கள் செய்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான ஹீரோயின்கள் ஆக்‌ஷன் பண்ணியதில்லை. ஹீரோயின் என்றால் கவர்ச்சிக்காக மட்டும் என்று நினைக்கிறார்கள். 

‘தினசரி’ படத்தில் நடிக்கும் போது ‘தமிழ் சினிமாவை மாத்திக்காட்டுறேன்’னு சொல்லியிருந்தேன். ஏனெனில் ஹாலிவுட் படங்களில் ஹீரோ, ஹீரோயின் யார் என்பதைவிட கதை முக்கியம். அதுமாதிரி தமிழ் சினிமாவை மாத்திக் காண்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். 

அதை ‘அனலி’ படத்தில் தொடங்கியிருக்கிறேன்.

மற்ற இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுள்ளீர்களா?

இல்லை. ஆனால், நான் அடுத்து தயாரிக்கவுள்ள படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வாய்ப்பு கிடைத்தால் அந்தப் படத்தில் பாடுவேன்.

எஸ்.ராஜா