இந்தியாவின் ஏரி மனிதன்..!
‘லேக்மேன் ஆஃப் இந்தியா’ - இப்படிதான் அழைக்கப்படுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த நிமல் ராகவன். ஒன்றல்ல, இரண்டல்ல... இந்தியா முழுவதும் 275க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுத்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதனால், 90 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
 யார் இந்த நிமல் ராகவன்..?
‘‘சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி. அப்பா ராகவன் விவசாயி. எங்கக் குடும்பமே பெரிய விவசாயக் குடும்பம். நான் பி.இ முடிச்சதும் வேலைக்காகத் துபாய் போயிட்டேன். லீவுக்கு ஊருக்கு வரும்போது கஜா புயல். அப்ப ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் நிறைஞ்சு இருந்தது. யார்கிட்டயும் நம்பிக்கையில்ல. எங்க ஊர்ல தென்னை மரங்கள் அதிகம். ஒரு ஏக்கர் தென்னை மரத்துல வர்ற வருமானமும், ஐந்து ஏக்கர் நெல்லுல வர்ற வருமானமும் ஒண்ணு. இதனால, எங்க மக்கள் எல்லோரும் தென்னை விவசாயம் செய்தாங்க.  கஜா புயல்ல 80 சதவீத மரங்கள் விழுந்திடுச்சு. இந்நேரம் வாழ்வாதாரமே இல்லாம தவிச்சாங்க. இனி ஒரு தென்னங்கன்றை வளர்த்து விளைச்சல் எடுக்கணும்னா குறைஞ்சது ஐந்தாண்டுகளாகும். அதுவரை என்ன பண்றது? அப்பதான் இவங்கள அரிசி, கரும்பு எல்லாம் பயிரிட வைப்போம்னு நினைச்சேன். ஆனா, தண்ணீர் பெரிய பிரச்னையா இருந்துச்சு. அங்கிருந்து ஆரம்பிச்சது நீர்நிலைகளை மீட்கும் பணி...’’ என்கிற நிமல் தொடர்ந்தார்.
‘‘முதல்ல ஊர் பசங்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். என் அப்பாவும், அம்மாவும் நிறைய சப்போர்ட் பண்ணினாங்க. அப்புறம், நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியைக் கையிலெடுத்தோம். இதுக்காக, ‘கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்’னு ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.
சுருக்கமா இதன்பெயர் ‘கைஃபா’ (KAIFA). இதை நானும், என் பள்ளி சீனியர் நவீன் ஆனந்தன் அண்ணனும் சேர்ந்து ஆரம்பிச்சோம். பிறகு, இன்னும் பலர் இணைந்து பெரிய குழுவா மாறினோம். முதல்ல எங்க பேராவூரணி பெரிய குளத்தையே எடுத்தோம். பேராவூரணி ஊருக்கான பெயர் காரணமே அந்தப் பெரிய ஊரணிதான்.
ஆனா, தூர்வாரப்படாமல் மோசமாகக் கிடந்தது. 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளத்ைத சீரமைக்கிற பணியைத் துவக்கினோம். கிட்டத்தட்ட 107 நாட்கள் வேலை பார்த்தோம். அடுத்த ரெண்டு மாசத்துல தண்ணீர் நிரம்பிடுச்சு.
முப்பது ஆண்டுகள் எந்தப் பணியும் செய்யாமல் கிடந்த ஒரு குளம் நாலு மாச வேலையில் மாறுச்சு. எல்லோரும் பாராட்டினாங்க. அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு ஊராகப் பண்ண ஆரம்பிச்சோம். தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டைனு ஐந்து மாவட்டங்கள்ல BounceBackDelta என்கிற ஹேஷ்டேக்ல பண்ணினோம். இப்படியாக நிறைய நீர்நிலைகளை தூர்வாரி, கால்வாய்களை மறுசீரமைப்பு செய்து தண்ணீர் கொண்டு வந்தோம். நாங்க பணி செய்த முக்கால்வாசி நீர்நிலைகள் இன்னைக்கு மழையால் நிரம்பிக் காட்சியளிப்பது சந்தோஷமாக இருக்கு...’’ என உற்சாகம்பொங்க பேசும் நிமல் ராகவன், இதுவரை 275க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுத்துள்ளார்.
இதன்பிறகு மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் அவரை அழைக்க, இந்திய ராணுவத்துடன் சேர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல ஒரு நீர்நிலையை சரிசெய்தார். அப்படியாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார். இதற்கு கிரவுட் ஃபண்டிங் மற்றும் விவசாயிகளின் உதவிகள் மூலம் செய்கிறார்.
இதன்பிறகு வறண்ட பூமியாகக் காட்சியளிக்கும் ஆப்ரிக்காவிலும் நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக கென்யா மக்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார் நிமல் ராகவன். காரணம், அங்குள்ள ஆறு, ஏரிகளை புதுப்பித்துள்ளார்.
இதனால் அங்குள்ள மக்கள் அவரை ‘வா முவா’ அதாவது மழையின் மகன் என அழைக்கின்றனர். அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நிமல் ராகவனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அத்துடன் அவர் 2025ம் ஆண்டின் தமிழக முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருதும் பெற்றார்.
‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்க எல்லா பணிகளையும் பொதுப்பணித்துறையுடன் இணைஞ்சே செய்றோம். அவங்க எப்படி செய்யணும்னு சொல்வாங்க. அதன்படி செய்வோம். சில இடங்கள்ல ஆக்கிரமிப்புகள் இருக்கும். அதை நாம் எடுக்கும்போது பிரச்னைகள் வரும். அதனால, அவர்களிடம் கேட்டு வேலைகளை ஆரம்பிக்கிறோம்.
எங்க பணி ஏரிக்கு நீர் வருகிற வரத்து வாய்க்காலை சரி செய்றதும், ஏரியை தூர்வார்றதும், கரைகள் அமைக்கிறதும், உள்ளே உள்ள மண்ணை ஒரு கைப்பிடி அளவுகூட வெளியில் போகாமல் அதனைக்கொண்டே ஏரியின் நடுவில் குறுங்காடுகள் அமைக்கிறதும்தான். ஏரியின் கரைகள் பலமாக இருக்க வெட்டிவேர்களை வைப்போம். பிறகு, பனை விதைகளை தூவுவோம்.
நடுவில் குறுங்காடுகள் அமைக்கக் காரணம், தூர்வாரும் போது மண் வெளியே போகாது. ரெண்டாவது, அங்க பலவகை மரக்கன்றுகள் நடுறதால பறவைகள் நிறைய வரும். அதில் பல்லுயிர் பெருக்கம் நடக்கும்.புங்கன், வேம்புனு 80 வகையான நாட்டு மரக்கன்றுகள் மண்அரிப்பை தடுக்கும்.
கீேழ மழைநீரை சேர்த்து வைக்கும். இதுல நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு. அப்புறம், மரக்கன்று வளர்க்க பாதுகாப்பான இடமும் கூட. ஆடு, மாடுகளால் போகவும் முடியாது...’’ என்கிற நிமல் ராகவனின் லட்சியம் தமிழகத்தை முப்போகம் விளையும் பூமியாக்க வேண்டும் என்பதுதான்.
‘‘ஒருகாலத்துல முப்போகம் விளைஞ்ச பூமி இதுனு நம்ம பெரியவங்க சொல்லிக் கேட்டிருப்போம். அதுமாதிரி முப்போக விவசாயம் இங்க நடக்கணும்னு ஆசைப்படுறேன். அப்புறம், தண்ணீரை யாரும் காசு கொடுத்து வாங்கக் கூடாது. எல்லோரும் நிலத்தடி நீரைப் பெருக்கணும்.எங்க ஊர் பக்கம் ஆயிரம் அடியில் போர்வெல் போட்ட இடங்களெல்லாம் இப்ப மாறியிருக்கு. காரணம், எங்க பணிகளால் நிலத்தடி நீர் அதிகரிச்சிருப்பதுதான்.
தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் இதுபோலான பணிகளை முன்னெடுக்கும்போது நிலத்தடி நீர் அதிகரிச்சு எதிர்காலம் சிறப்பானதாக மாறும். நாமும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமா பயன்படுத்தணும். அரசை குற்றம் சொல்லக் கூடாது.கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏரி, குளங்களை சீரமைக்க முன்வரலாம்...’’ என்கிறார் நிமல் ராகவன்.
பேராச்சி கண்ணன்
|