விஜயகாந்த்தை அப்பா குத்தினார்... இன்றைய நடிகர்களை நான் குத்த வைக்கிறேன்!



‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் ‘டிசி’, ஆக்‌ஷன் படமாக வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார் பி.சி.ஸ்டண்ட்ஸ். 
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள ‘சிறை’ படத்துக்கும் இவர்தான் சண்டை இயக்குநர். பனி விலகிய ஒரு மதிய வேளையில் பி.சி.ஸ்டண்ட்ஸிடம் பேசினோம்.

அது என்ன பி.சி.ஸ்டண்ட்ஸ்?

என்னுடைய இயற்பெயர் பிரபு. அப்பா பேர் சந்திரசேகர். பிரபு என்பது பொதுவான பேர் என்பதோடு சினிமாவில் அந்தப் பேரில் பலர் உள்ளனர். அதைத் தவிர்க்கவும், தனித்துவத்துக்காகவும் என்னுடைய பெயரையும், அப்பாவுடைய பெயரையும் சேர்த்து பி.சி.ஸ்டண்ட்ஸ் என்று வைத்துக் கொண்டேன்.

உங்களைப்பற்றியும், சினிமா மீதான உங்கள் ஆர்வம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்?

அப்பா சந்திரசேகர், ஃபைட்டராக இருக்கிறார். ‘ஊமை விழிகள்’, ‘பூந்தோட்டக் காவல்காரன்’, ‘உரிமைகீதம்’ உட்பட ஏராளமான படங்களில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் டீமில் ஒர்க் பண்ணியுள்ளார். விஜயகாந்த் சார், பிரபு சார் இவர்கள் படங்களில் ஹீரோவை குத்துவதாக இருந்தால் அப்பாவைத்தான் கூப்பிடுவார்கள். ‘தளபதி’ படத்தில் மம்மூட்டி சாரை குத்தியதும் அப்பாதான்.

அப்பாவுடைய ஷூட்டிங் அனுபவங்கள்தான் எனக்குள் சினிமா ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. ஸ்டண்ட் மீது ஆர்வம் என்பதைவிட சினிமா மீதுதான் ஆர்வம் இருந்துச்சு. அப்போது சூழ்நிலை காரணமாக ஸ்டண்ட் பக்கம் கவனம் திரும்புச்சு. ஏனெனில், சினிமாவில் ஸ்டண்ட் டிப்பார்ட்மெண்ட்டில்தான் வேலை முடிஞ்சதும் பேமண்ட் உடனே கிடைக்கும். வீட்டிலும் சப்போர்ட் இருந்ததால் ஸ்டண்ட் ப்ரொஃபஷனலாக மாறிடுச்சு.

யாரிடம் சினிமா கத்துக்கிட்டீங்க?

சூப்பர் சுப்பராயன், பெப்சி விஜயன், ஸ்டண்ட் சிவா, திலீப் சுப்பராயன், அன்பறிவ் என பல மாஸ்டர்களிடம் ஸ்டண்ட் சூட்சுமம் கத்துக்கிட்டேன். சூப்பர் மாஸ்டரிடம் ஆக்‌ஷன் தெறிக்கும்படி இருந்தாலும் எல்லாமே சினிமா ஃபைட் மாதிரியும், சிவா மாஸ்டரிடம் ரியாலிட்டியாக எப்படி ஸ்டண்ட் கோரியோ பண்ண முடியும் என்பதையும் தெரிஞ்சுகிட்டேன். 
அன்பறிவ் மாஸ்டர் பற்றி சொல்வதாக இருந்தால் அவர்கள்தான் நான் பிஸி சண்டை இயக்குநர் எனுமளவுக்கு மாற காரணமாக இருந்தார்கள்.

முதல் சினிமா?

மலையாளத்தில் ‘கப்பேல்லா’ என்ற படம். தமிழில் ‘பென்குயின்’, ‘கூர்கா’, ‘காட்பாதர்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘பாட்டில் ராதா’, ‘ஜே.பேபி’, ‘தண்டகாரண்யம்’ உட்பட பல படங்கள்.இதற்கிடையே மலையாளத்தில் மம்மூட்டி சார், பிருத்விராஜ் சார் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் செய்தேன். சமீபத்தில் வெளியான ‘முர்ரா’ பெரியளவில் பேசப்பட்டது. 

தற்போது மலையாளத்தில் ‘தோட்டம்’, தமிழில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’, சசிகுமாரின் ‘மைலார்ட்’ உட்பட பல படங்கள் கைவசம் உள்ளன.

‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?

தயாரிப்பாளர் லலித்குமார் சாருடன் ஏற்கனவே அறிமுகம் உண்டு. எடிட்டர் பிலோமின் ராஜ் ‘சிறை’ படம் பற்றி சொன்னார். ஏற்கனவே ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், நடிகராக நடித்த ‘பகலும் பதிரவும்’ என்ற மலையாளப் படத்தில் ஒர்க் பண்ணியிருந்தேன். இந்த லிங்க்தான் ‘சிறை’ படத்தில் என்னை சேர்த்துச்சு.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி முழு ஸ்கிரிப்ட் சொல்லி சண்டைக் காட்சிக்கான ஐடியாவை சொல்லியிருந்தார். காஸ்டிங் டைரக்டர் சூரி பல நடிகர்களின் எக்ஸ்பிரஷன்ஸ் எப்படி இருக்கும் என்று சில இன்புட்ஸ் கொடுத்திருந்தார்.

சண்டை இயக்குநராக காட்சியை ‘க்ரிப்’பாக கம்போஸ் பண்ணியிருந்தேன். அதில் இயக்குநர் குறிப்பிட்ட ஸ்டைலை லாக் பண்ணிய பிறகு அதுதான் படத்தில் வந்துச்சு.
அப்படி டீமாக சேர்ந்து பண்ணியதால் ஃபைட் சீன்ஸ் எமோஷனலாக  இருந்ததோடு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைச்சது.சவால் என்றால் பஸ் சேஸிங் காட்சியை சொல்லலாம். 

அந்த சீனைப் பொறுத்தவரை அதில் பல சவால்கள். பீரி யட் படம் என்பதால் இப்போதுள்ள பஸ், அவைலபிள் லைட்ஸ் என எதையும் யூஸ் பண்ண முடியாது. இப்போது எங்கும் எல்ஈடி லைட்ஸ் வந்தாச்சே! தவிர இரண்டு வழி சாலைகள் இன்று பயன்பாட்டில் உள்ளது.

எங்களுக்கோ டெட் லைன் ரோடு தேவைப்பட்டுச்சு. அந்தக் காட்சிக்காக பழைய பஸ் வாங்கி ரெடி பண்ணினோம். அந்த இரவுக் காட்சியை ஹெலிகேம்ல ஷூட்  பண்ண முடிவு பண்ணினோம்.

இந்தத் தருணத்தில் கேமராமேன் மாதேஷ் மாணிக்கம் பங்களிப்பையும் சொல்ல வேண்டும். பஸ்ஸை முந்திச் சென்று லாக் பண்ணும் காட்சியில் டெக்னிக்கலாக பெரிய சவால் இருந்துச்சு. அதை கேமராமேன் அழகாக டீல் பண்ணினார். படம் பார்த்துவிட்டு விக்ரம் பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் என ஏராளமான ஆளுமைகள்‌ பாராட்டினார்கள்.

அதிகளவில் வாழ்வியல் சார்ந்த படங்கள் செய்துள்ளீர்கள். அந்தப் படங்களில் சண்டை இயக்குநருக்கான தேவை எந்தளவுக்கு இருக்கும்?

‘சிறை’, ‘ரெட்ட தல’ இரண்டு படங்களும் நான் ஒர்க் பண்ணியவை. கிரிஷ் திருக்குமரன் இயக்கிய ‘ரெட்ட தல’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் கமர்ஷியலாக இருக்கும்.
பொதுவாக இயக்குநர் படத்தோட ஐடியாவை சொல்லும்போதே மனசுக்குள் சண்டைக் காட்சியை ஃபிரேம் பண்ண ஆரம்பிச்சுடுவேன்.

அருண் விஜய் சார் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார் என்றால் இமேஜினேஷன் வேற மாதிரி இருக்கும். என்னைப் பொறுத்தவரை எந்த ஜானர் படமாக இருந்தாலும் கதைக்குள் சண்டை இருக்கும்படி பிளான் பண்ணுவேன்.ஒரு ஆர்ட்டிஸ்ட் எவ்வளவு அடிக்க முடியும் என்று ஒவ்வொருவருக்குமான நம்பகத்தன்மை மாறுபடும். அதற்குள் பண்ணினால்தான் சண்டை பேசப்படும்.

‘கப்பேல்லா’ படத்தில் ரூமுக்குள் ஒரு ஃபைட் சீன் கம்போஸ் பண்ணியிருப்பேன். அது பேசப்பட்டது. கதைக்குத் தேவையில்லாமல் ஜம்பிங், அருகில் இருக்கும் மேசை, நாற்காலியைத் தூக்கி வீசும்போது அது சண்டைக்காட்சிக்காக ஒர்க் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.ஃபைட் இல்லையென்றாலும் இயக்குநருக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டும். அதுதான் சண்டை இயக்குநருக்கு பேர் வாங்கிக்கொடுக்கும். ‘சிறை’ அந்தமாதிரி படம்.

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘டிசி’ பட வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீங்க?

என்னுடைய அடுத்த கட்ட நகர்வாக பார்க்கிறேன். ‘சன் பிக்சர்ஸ்’ பொறுத்தவரை என்ன வசதிகள் கேட்டாலும் செய்து கொடுத்து விடுவார்கள். லோகேஷ் சார் பெரிய நடிகர்களை வெச்சு படம் செய்திருந்தாலும் ஸ்பாட்டுக்கு நடிகராக மட்டுமே வருவார். ‘மாஸ்டர் நீங்க என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன்...’ என்று அவரிடமிருந்து பெரிய ஒத்துழைப்பு கிடைச்சது. 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சார் படங்களில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் இருக்கும்.

ஒரு கதையில் சண்டைக் காட்சியை எப்படி உருவாக்குகிறீர்கள்?  

‘முர்ரா’ மலையாளப் படத்தில் ஏழெட்டு ஃபைட் சீன் இருக்கும். வழக்கமாக சண்டைக் காட்சி முடிந்ததும் ஹாஸ்பிட்டல் சீன் வரும். மலையாளப் படத்தில் ஹாஸ்பிட்டல் காட்சிக்கு பதில் ரிவெஞ்ஜ் சீன் வெச்சா பேசப்படும் என்று சொன்னேன். ஏனெனில் அடி வாங்கியவர்கள் திருப்பி அடிக்கத் தான் யோசிப்பாங்க.

அப்படி இயக்குநரிடம் சண்டை முடிஞ்சதும் ஹாஸ்பிட்டல் சீன் வெச்சா சூடு குறைஞ்சுடும்னு சொன்னதும் அதை இயக்குநர் ஒப்புக்கொண்டார். இப்படி சிச்சுவேஷனுக்கு ஏற்ப ஒர்க்கிங் ஸ்டைல் மாறுபடும். மற்றபடி இயக்குநர் எடுப்பதுதான் இறுதி முடிவு. 

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்