வாராரு வாராரு கருப்பரு வாராரு...



16. 18 சித்தர்களையும் பாதுகாக்கும் பிலாவடி கருப்பசாமி 

ஆம்... ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 18 சித்தர்களை கம்பீரமாக பாதுகாக்கிறார் நம் கருப்பண்ணசாமி.

எங்கு தெரியுமா?
சதுரகிரியில்!

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலையை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். 
அதனாலேயே இன்றும் சித்த மருத்துவர்கள் பலர் குறிப்பிட்ட நட்சத்திரம், திதி கொண்ட சுபமுகூர்த்த நாளில் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்துச் செல்கின்றனர்.மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியிலிருந்து செல்வது எளிமையான பாதை. இங்கு மலைக்கோயிலில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என இரண்டு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. 

மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று ஒன்றும் இங்குள்ளது. அதற்கு ‘சஞ்சீவி மலை’ என்று பெயர். அத்துடன் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோயில் உள்ளது.
இந்த வனப் பகுதியில் 18 சித்தர்களும் தவம் செய்ததாகவும், இன்றும் சித்தர்கள் அங்கு சூட்சும ரூபத்தில் உலா வருவதாகவும் கூறப்படுகிறது. 
சுமார் 4500 அடி உயரத்தில் சதுரகிரி மலைக் கோயில் அமைந்துள்ளது. ‘தென் கயிலை’ என சிறப்பாகப் போற்றப்படும் சதுரகிரியில் மூலவர் சுந்தர மகாலிங்கம், அம்மன் பெயர் ஆனந்தவல்லி. 

இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தியாக சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். சிவராத்திரி, மகாளய அமாவாசை, ஆடி, தை அமாவாசை மற்றும்  பௌர்ணமி நாட்களில் இங்கு அதிகக் கூட்டம் காணப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்கிறார்கள். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க என பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

திசைக்கு நான்கு மலைகள் வீதம் 16 மலைகள் சமமாக, சதுரமாக அமைந்துள்ள காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. இந்த மலை 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல் இம்மலை ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபொழுது செய்ததாக நம்பிக்கை.இங்குள்ள. ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்துவிட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் ஒளிரும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்தப் புல்லை உபயோகப்படுத்தியுள்ளனர். 

இங்கு அமாவாசை நாட்களில் தேனும் தினை மாவும் பிரசாதமாக தரப்படுகின்றன. மலையடிவாரத்தில் மலையேறும் முன்பு ஆசீர்வாத விநாயகரை வணங்கி யாத்திரையைத் தொடங்கவேண்டும். 

வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பண்ணசாமி கோயில்கள் உள்ளன.அத்ரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசித்து மேலே செல்ல வழியில் கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் காணப்படுகின்றன. 

பச்சரிப்பாறை, வனதுர்கை கோயில், பெரிய பசுக்கிடை பிலாவடி கருப்பு கோயிலை தரிசித்து விட்டு மகாலிங்கம் கோயிலை அடையலாம். இக்கோயில் தமிழக அரசு அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.

அகத்தியர் சதுரகிரி மலையில் தங்கி லிங்க வழிபாடு செய்து அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம். இங்கு அகத்தியர் தங்கி இருந்த குன்றை ‘கும்ப மலை’ என்று அழைக்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்ததால் இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது.

1950ம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவரும் சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து சற்று மேடான பகுதியில் ‘சந்தன மகாலிங்கம்’ கோயில் உள்ளது. இம்மலையில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து கோயில்கள் உள்ளன.

ஈசனின் உடலில் பாதியைக் கேட்டு பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்த அம்பாள் தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். இதனால் மகிழ்ந்த ஈசன், பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரரானார் என்று தல வரலாறு கூறுகிறது. தான் அமைத்த லிங்கத்திற்கு தினமும் அபிஷேகம் செய்ய ஆகாச கங்கையை வரவழைத்தாள். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். 

சந்தன மாரியம்மன் சன்னிதி, சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன் என இங்கு எல்லாமே சந்தன மயம்தான். இங்கு செண்பகப் பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

சதுரகிரி மலையில் பல அற்புதமான மூலிகைகள் உள்ளன. பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம், கருநெல்லி போன்ற அற்புதமான மரங்களும், மூலிகை செடிகளும் இங்கு நிறைந்துள்ளன. கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் சுனையும் ஒன்றுள்ளது. மிகுந்த மருத்துவ குணம் நிறைந்த இந்நீர் குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும்.

மலையேறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் உள்ளது. இதற்கு எதிரே இரட்டை லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்த ராமதேவ சித்தர் என்பவரின் குகை உள்ளது. 

சதுரகிரி மலையில் உள்ள கல்லால மரம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
சிவனைப் போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாகத் தங்கி அருள வேண்டும் என்று விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்ததைக் கண்டு, ‘ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்துடன் அம்மன் லிங்க வடிவில் சுந்தர மகாலிங்கம் சன்னிதிக்கு பின்புறம் எழுந்தருளி அருள்புரிகிறாள். 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சதுரகிரி மலையை ஏறுவதற்கு முன் நம் கருப்பரை சந்திக்க வேண்டும். மலை ஏற அவரிடம் அனுமதி பெற்று துணைக்கு வரும்படி வேண்டுகோள் வைத்துவிட்டு மலை மீது ஏற வேண்டும்.சதுரகிரி மலையைக் காக்கும் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு இங்கு ‘பிலாவடி கருப்பசாமி’ என்று பெயர்.பலா மரத்தடியில் கோயில் கொண்டிருப்பதால், பிலாவடி கருப்பசாமி எனப்படுகிறார். இந்த மரத்தில் ஒரு பலாக்காய் விழுந்த பிறகே, அடுத்த காய் காய்க்கும் என்பது ஒரு முக்கிய நம்பிக்கை.

சாதாரண மனிதர்களின் தெய்வமாக கருப்பண்ணசாமி இருப்பதால், எப்பொழுதும் இவருக்கான கோயில் பிரம்மாண்டமாக இருக்காது. வெட்ட வெளி அல்லது மரத்தடியில் வீற்றிருப்பார்.
அப்படித்தான் பிலாவடி கருப்பசாமியும் பார்ப்பதற்கு ஊர் பேருந்து நிலையம் போலிருக்கும் சின்னஞ் சிறு மண்டபத்தில் இருக்கிறார். இதுதான் அவரது கோயில். இங்கிருந்தபடிதான் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரி மலையை காவல் காக்கிறார்.

பாறையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் இரு கைகளுடன் நின்ற கோலத்தில் கருப்பசாமியின் சிற்பம் அமைந்துள்ளது. இடுப்பில் கங்கு வைத்து இறுக்கிக் கட்டிய கச்சையுடன், அகலத் திறந்த விழிகள், முறுக்கு மீசையுடன் காணப்படும் இச்சிற்பத்தின் இரண்டு கைகளுள் வலது கை ஓங்கிய வீச்சரிவாளை ஏந்தியவாறும், இடது கை கதை மற்றும் சங்கு ஏந்தியவாறும் காட்டப்பட்டுள்ளனபிலாவடி கருப்பசாமி கோயில் அருகில் உள்ள தீர்த்த கிணறு மிகமிக சக்தி வாய்ந்தது. இதற்கு தைலக் கிணறு என்று பெயர். இந்த கிணற்றினுள் செம்பை தங்கமாக்கும் மூலிகை இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு. 

பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களின் சேர்க்கையால் செம்பை தங்கமாக உருவாக்க முடியும் என்பது நம்பிக்கை. சித்தர்கள் அப்படிச் செய்ததாக குறிப்புகள் பல உண்டு.
மிக மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் இந்த வித்தையைக் கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும், பொருளையும் இழந்தவர்கள் பலர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை. பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும்தான் இது சாத்தியமாகும். 

சதுரகிரியிலிருந்து மூலிகை மற்றும் சரியான மந்திரங்களைப் பயன்படுத்தி சாதாரண உலோகத் துண்டுகளை தங்கமாக மாற்றும் அரிய திறனை காலங்கநாதர் என்ற சித்தர் பெற்றதாக புராணம் கூறுகிறது. 

அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது சொந்த ஊரில் ஒரு கோயில் கட்ட உதவுவதற்காக ஒரு முழு தங்கப் பையை உருவாக்கிய பிறகும், காலங்கநாதரிடம் இன்னும் சில தங்கம் தயாரிக்கும் சாரம், தங்கத் துண்டுகள் மற்றும் மூலிகைகள் இருந்தன. 

அவற்றை தன்னுடனேயே வைத்திருக்க அவர் விரும்பவில்லை. அவர் தைலக்கிணறு என்ற ஆழமான கிணற்றைத் தோண்டி, விலைமதிப்பற்ற பொருட்களை அதனுள் மறைத்து வைத்தார்.
 
சதுரகிரி மலையைப் பாதுகாத்து வரும் பிலாவடி கருப்பசாமியிடமே இந்த தைலக் கிணறை கண்காணிக்கும் பொறுப்பையும் காலங்கநாதர் ஒப்படைத்திருக்கிறார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் இயற்றிய ‘போகர் ஜெனன சாகரம்’ என்னும் நூலில் இந்தத் தைலக் கிணற்றின் அமைப்பு குறித்து விவரிக்கும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப் பாறையொன்று
ஆமென்ற பாறையிலே குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா மூடினேனே
மூனேன் கருப்பனையங் காவல்வைத்து...

இப்பாடலுக்கான விளக்கம் என்ன தெரியுமா? ‘கப்பல் போன்று காணப்படும் பெரிய பாறை இங்குள்ளது. இந்தப் பெரிய பாறையிலுள்ள குழியில் மிகவும் அரிதான தைலத்தைக் கொட்டி மூடினேன். இந்தக் குழிக்கு கருப்பனைக் காவலாக வைத்துள்ளேன்...’ என்று இப்பாடலில் போகர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.பிலாவடி கருப்பசாமியை வணங்கினால் 18 சித்தர்களின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை அல்ல; உண்மை.

ஓம் கருப்பண்ணசாமியே நம:

(கருப்பர் வருவார்)

 - கே.என்.சிவராமன்