ஜெயலலிதா செய்யாததை மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்!



புதிய பென்சன் திட்டம்... மகிழ்ச்சியில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்

கடந்த வாரம் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால ஓய்வூதியக் கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது. அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய, ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (TAPS) செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பழைய ஓய்வூதியத் திட்டம் போலவே கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்’ எனத் தெரிவித்துள்ளது. 

இதனுடன், ‘50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வுபெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசனிடம் பேசினோம். 

‘‘இன்றைக்கு புதிய தாராளமயக் கொள்கை உலகம் முழுக்க வந்துவிட்டபிறகு, பென்சன் என்பது அரசின் பொறுப்பு இல்லை என்கிற நிலை இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு மாநில அரசு, ‘ஓய்வூதியம் நாங்கள் கொடுக்கிறோம். அது அரசின் பொறுப்பு. 

ஊழியர்களிடம் பத்து சதவீதம் வாங்குவோம். மீதி இடைவெளியை நாங்கள் நிரப்பிக் கொள்கிறோம்’ எனச் சொல்வதை ஒரு முன்னேற்றமான விஷயமாகப் பார்க்கிறோம். அதனாலேயே இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்...’’ என்றவர், பழைய, புதிய ஓய்வூதியத் திட்டங்கள் பற்றி விவரமாகப் பேசினார். 

‘‘2003ம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. இந்தப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசுக்கு ஊழியர்கள் எந்தப் பங்களிப்பும் கொடுக்க வேண்டியதில்லை.
ஒருவர் சர்வீஸிற்கு வந்து முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து ஓய்வுபெற்றார் என்றால் அவர் கடைசியாக வாங்குகிற சம்பளத்தில் 50 சதவீதம், அவர் இருக்கிறவரைக்கும் பென்ஷனாகக் கொடுப்பார்கள். 

அவர் இறந்துவிட்டார் என்றால் அதில் 30 சதவீதம் அவரின் மனைவி இறக்கும் வரை கிடைக்கும். இதுதான் பழைய ஓய்வூதியத் திட்டம். இதுதவிர, கிராஜுட்டி எனும் பணிக்கொடையும் கிடைக்கும்.அதாவது முப்பது ஆண்டுகள் வேலை செய்தார் என்றால் அதில் 15 மாதச் சம்பளம் கிராஜுட்டியாக கொடுப்பார்கள். இதுக்கு ஊழியர்கள் எந்த பங்களிப்பும் கொடுக்க வேண்டியதில்லை. இந்தத் திட்டம் 2003ம் ஆண்டு வரை இருந்தது. 

அதனால், இதற்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குள் வந்தனர். அதாவது 2002ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது, கர்நாடகா ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் பி.கே. பட்டாச்சார்யா தலைமையில் ஒரு கமிஷன் போடப்பட்டது. எதற்காக என்றால் ஓய்வூதியத் திட்டம் அரசுக்கு ஒருபெரிய சுமையாக இருக்கிறது என்றும், அதற்கு என்ன பண்ணலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்கவும் போடப்பட்டது.  

அப்போது இந்தக் கமிட்டி ஓய்வூதியத் திட்டத்தை, இனி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக மாற்றலாம் என்றது. அதுதான் பங்ளிப்பு ஓய்வூதியத் திட்டம். 
இந்தக் கமிட்டியின் பரிந்துரையை 1.1.2004ல் இருந்து இந்தியா முழுவதும் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்தனர். பிறகு மாநில அரசும் கொண்டு வரவேண்டும் 
என்றனர். 

அந்நேரம் தமிழ்நாட்டில் அதிமுக அரசு ஜெயலலிதா தலைமையில் இருந்தது. அவர்கள் இதனை 1.4.2003 எனத் தேதியிட்டு ஒன்பது மாதத்திற்கு முன்னாடியே அட்வான்ஸாக நடைமுறைப்படுத்தினார்கள். 

இதன்படி பத்து சதவீதம் ஊழியர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். பத்து சதவீதம் அரசு பங்களிப்பு செய்யும்.பின்னர் இது தேசிய ஓய்வூதியத் திட்டமாக மாறியது. அதாவது நேஷனல் பென்சன் ஸ்கீம் என இந்தியா முழுக்க அமலாக்கப்படுகிறது. இதன்பிறகு அரசு ஊழியர்கள் பத்து சதவீதம், ஒன்றிய அரசு 14 சதவீதம் பங்களிப்பு செய்தனர். 

இதன்படி ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தில் 60 சதவீதத்தை ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுத்துவிட்டு, மீதியுள்ள 40 சதவீதத்தை கார்பஸ் ஃபண்டாக வைத்து ஒரு ஓய்வூதியம் தந்தனர். இது தேசிய ஓய்வூதிய திட்டம். ஆனால், இதில் ஓய்வூதியமே இல்லாத நிலைமை மாதிரியாக இருந்தது. கிட்டத்தட்ட ரூ.2000, ரூ.3000, ரூ.5000 எனக் கொடுத்தார்கள். இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து இயக்கங்கள் நடந்துகொண்டே இருந்தன. 

தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்றால் ஊழியர்களிடம் இருந்து பத்து சதவீதம் பிடித்தார்கள். ஆனால், ஒன்றிய அரசு போட்டிருந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரவில்லை. இங்கே இருக்கிறவர்களுக்கு ஓய்வூதியமும் கொடுக்கவில்லை. எதையும் முறையாக பராமரிக்காமல் அப்படியே 13 ஆண்டுகள் கடந்தது. பின்னர், 2016ம் ஆண்டு ஜெயலலிதா அரசு இருக்கும்போது மறுபடியும் ஒரு பெரிய போராட்டம் நடத்தினோம். 

இதனால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பத்து சதவீதம் கட்டினால், அந்த பத்து சதவீதம் ப்ளஸ் வட்டி, அதுக்கு சமமாக பத்து சதவீதம் அரசின் பங்களிப்பு, அதற்குரிய வட்டி என இந்த நான்கையும் ஒரே பில்லில் கொடுத்து இனிமேல் மேற்கொண்டு கிளைம் பண்ணக்கூடாது எனச் சொல்லப்பட்டது.இதில் கிராஜுட்டியை நிறுத்திவிட்டார்கள். அதனால் தமிழ்நாட்டில் கிராஜுட்டியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து நாங்கள் பழையபடி ஓய்வூதியம் வேண்டும் எனக் கேட்டோம். 

தற்போது 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் 50 சதவீதம் ஊழியர்களுக்கு ஓய்வூதியமாகக் கிடைக்கும். அவர் இறந்துவிட்டால் அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்பத்திற்குக் கிடைக்கும். இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம்தான் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அதனால், இப்போது தமிழ்நாடு அரசு புதியதாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டதை அறிவித்துள்ளது.

இதன்படி 50 சதவீதம் ஓய்வூதியம், அதற்கான அகவிலைப்படி கொடுத்துவிடுகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. ஊழியர் இறந்துவிட்டால் அவர் மனைவிக்கு அதிலிருந்து 60 சதவீதம் கொடுத்துவிடுகிறோம்.டெத் கம் ரிட்டயர்மென்ட் கிராஜுட்டி, அதாவது பணிக் காலத்தில் இறந்தால் கிராஜுட்டி அல்லது ஓய்வுபெறும் போது கிராஜுட்டி கொடுத்துவிடுகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. முன்பு இதில் சம்பந்தப்பட்ட ஆறேமுக்கால் லட்சம் பேர்களுக்கு கிராஜுட்டியே இல்லாமல் இருந்தது. இப்போது இந்த ஆறே முக்கால் லட்சம் பேர்களும் கிராஜுட்டியைப் பெறுவார்கள்.  

இதன்மூலம் கடந்த 23 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட கிராஜுட்டி மீண்டும் வந்திருக்கிறது. பென்ஷனே இல்லாமல் இருந்த சூழ்நிலையில 50 சதவீதம் பென்ஷன் வந்திருக்கிறது. அதுவும் டி.ஏ.வுடன் வந்திருக்கிறது. குடும்பத்திற்கும் பென்ஷன் வந்திருக்கிறது. இது ஊழியர்களுக்கு ஒரு மினிமம் கியாரண்டி என நினைக்கிறோம். அதனாலேயே இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்...’’ என்கிறார் என்.வெங்கடேசன்.   

இதுகுறித்து செஞ்சி  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரான கே.கே.தேவதாஸ், ‘‘இந்தத் திட்டத்தை ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்கிறோம். இந்தத் திட்டம் நீண்டகாலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இருந்தும் பங்களிப்பு தொகை பத்து சதவீதம் என்பதை 5 சதவீதமாக குறைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, ஒருவருக்கு பத்து சதவீதம் என பத்தாயிரம் ரூபாய் பிடிக்கிறார்கள் என்றால், சம்பள உயர்வு ஏற்படும்போது 5 சதவீதம் பிடித்தாலே இதே பத்தாயிரம் ரூபாய் பங்களிப்பு செய்யும்படி இருக்கும்.  தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும் ஜிஎஸ்டியும் வந்துவிட்டது. வருமான வரி கட்டவேண்டியிருக்கிறது. வருமானத்தில் பல செலவுகள் வரியாகவே போகிறது. அதனால், இந்தப் பங்களிப்பை 5 சதவீதமாகக் குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும்...’’ என்கிறார் கே.கே.தேவதாஸ்.

பேராச்சி கண்ணன்