ஜவ்வரிசி அப்பளம்!
‘‘ஏங்க... கிடைக்கிற கேப்ல ஓடிப்போய் ஜவ்வரிசியும் , அப்பளக்கட்டும் வாங்கிட்டு வந்துடுறீங்களா?” என்றார் அம்மணி.கேள்வியாகப் பார்த்தேன். “அப்படியே சாமிக்கு பூ, இலை எல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க...” என்றார். மறுபடியும் கேள்வியாகப் பார்த்தேன். “இன்னிக்கு நியூ இயர்ல... அப்பளம், பாயாசம் செஞ்சி சாமி கும்பிட போறேன்...” என்றார்.“அது சித்திரை ஒண்ணுக்குதான செய்வோம்..? இது ஆங்கிலப் புத்தாண்டு. நாம இதுக்கெல்லாம் இப்படி பண்ண மாட்டோமே...” என்று மறத்தமிழனாக முப்பாட்டன்களின் வழித்தோன்றலாக நின்று எடுத்து இயம்பினேன். “ஓ... அது அந்த வருஷப் பொறப்பா..?” என்று அசடு வழிய சொல்லிவிட்டு, “ஆமா... சித்திரை எப்போ வரும்..? இப்போதான் மார்கழி ஆவுதா...” என்றார் அம்மணி. அதாவது, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது..! நான் இன்னிக்கு பாயாசம் சாப்பிட முடிவு பண்ணிட்டேன். முடிஞ்சா தமிழ்ப்புத்தாண்டை இன்னிக்கே வரச்சொல்லுங்க...’ ரேஞ்சில் அம்மணியின் தோரணைகள் இருந்தன.
‘சரி விடு, ஏதோ இன்னிக்கு ஒரு மூட்... வீடெல்லாம் மாப் போட்டு க்ளீன் வேற பண்ணியிருக்கார். அதுக்காகவாவது பாயாசம் செஞ்சி கொண்டாடிக்கட்டும்’ என்றெண்ணி கடைக்குச் சென்று, விற்பனை பிரதிநிதியிடம், “ஏங்க ஜவ்வரிசி அப்பளம் எல்லாம் எங்க இருக்கு...” என்றேன்.“ஜவ்வரிசி அப்பளம் எல்லாம் இப்போ வர்றதில்ல சார்... ரொம்ப நாளாவே வரதில்ல...” என்றார் அந்தப் பெண்மணி.“இது என்னடா புதுக் கதையா இருக்கு...” என்று குழம்பி, அந்த பல்பொருள் அங்காடிக்குள் சுற்றி வந்தேன்.
பார்த்தால் ஒரு ரேக் முழுக்க அப்பளக் கட்டுகள் இருந்தன. அந்த லேடியைப் பார்த்து மைண்ட் வாய்ஸைப் போட்டுவிட்டு, அப்பளக் கட்டை எடுத்துக் கொண்டு, பக்கத்தில் நின்ற மற்றொரு விற்பனைப் பிரதிநிதியிடம், ‘‘ஜவ்வரிசி எங்கே இருக்கு?” என்றேன். இப்போது அந்த முதல் பிரதிநிதி எட்டிப்பார்த்து, “ஜவ்வரிசி இங்கே இருக்கு... வாங்க சார்...” என்றார். “இப்பதான் இல்லன்னீங்க... அப்பளக்கட்டும் இல்லன்னீங்க... இதோ அவ்வளவு இருக்கே...” என்றேன்.
‘‘சார்... நீங்க ஜவ்வரிசி அப்பளம்தானே கேட்டீங்க?”
”ஆமா...”“அதான் இல்லன்னேன்... ஜவ்வரிசி இருக்கு...” என்றார்.“அப்பளமும்தான் இருக்கே..?” என்றேன்.“சார், நீங்க ஜவ்வரிசி அப்பளம்னு சொன்னீங்களா அதான் இல்லன்னேன்...” என்றார். அப்போதுதான் எனக்கு பல்ப் எரிந்தது, ‘ஜவ்வரிசி அப்பளம்’னு ஒண்ணு இருக்கு என்று.
நீதி: எழுதும்போது மட்டுமல்ல, பேசும்போதும் கமா போட்டு பேசவேண்டும்!
அ.பாரி
|