கணவன் - மனைவி உறவில் கள்ளக் காதல் என்ற பெயரில் மூன்றாம் நபர் ஒருவர் நுழைவது தற்போது அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தம்பதிகளுக்கு மூன்றே வருடங்களில் திருமண வாழ்வு திகட்ட ஆரம்பிக்கிறது.
கணவன் - மனைவி இடையேயான மன நெருக்கம் தற்போது மிகமிகக் குறைந்துள்ளது.
கள்ளக் காதலுக்கு செக்ஸ் மட்டுமே காரணம் இல்லை. தாங்கள் விரும்பும் மன நெருக்கம் வேறொருவரிடம் கிடைப்பதே மிக முக்கியக் காரணம்.
உடன் வேலை பார்க்கும் நபருடனே பெரும்பாலும் கள்ளக்காதல் முளைக்கிறது.
- இப்படி பல அதிர்ச்சி வெடிகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் பிரபல மனநல நிபுணர் விஜய் நாகசாமி. ஆயிரக்கணக்கான தம்பதிகளின் உறவுச் சிக்கலைத் தீர்த்துவைத்து, இனிய குடும்ப வாழ்க்கையை உறுதிசெய்த விஜய் நாகசாமி, ‘‘சமீப ஆண்டுகளாக என்னிடம் ஆலோசனைக்கு வந்த பெரும்பாலானவர்களின் பிரச்னையாக கள்ளக்காதலே இருந்தது. ஏன் இப்படி இந்த விஷயம் தறிகெட்ட வேகத்தில் அதிகரித்து இருக்கிறது என ஆராய்ந்தேன்’’ என்கிறார். அந்த ஆராய்ச்சியின் விளைவே ‘3’s ACROWD’ என்ற புத்தகம்.
‘‘எந்திரகதியான வாழ்க்கையில் வேலைப்பளு அதிகம். யாருக்கும் ஓய்வாக உட்கார்ந்து பேச நேரம் இல்லை. கணவன் - மனைவி இணைந்திருக்கும் நேரம் குறைந்துவிட்டது. வார விடுமுறைகளில் கூட மனம்விட்டுப் பேசிக் கொள்ள வாய்ப்புக் கிடைப்பதில்லை. இருவருமே வேலைக்குப் போகும் இன்றைய சூழலில் வீட்டை விட அலுவலகத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
அப்போது உடன் பணிபுரிபவருடன் அதிகம் பேசிப் பழக வாய்ப்பி ருக்கிறது. வேலை விஷயமாக வெளியூர் போகும் போது அவருடன் நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பம் அமைகிறது. செக்ஸ் என்பதைத் தாண்டி, இப்படி மனம்விட்டுப் பேசும்போது, அவர்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான். அதுவே நாளடைவில் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது. குடும்பத்தில் மூன்றாவது நபர் நுழையாமல் இருக்க வேண்டுமானால், கணவன் - மனைவி இருவருமே தங்களுக்குள் பேசிக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் விஜய் நாகசாமி.
‘உணவு, உடை விஷயங்களைப் போல இதிலும் நம்மவர்கள் மேற்கத்திய நாடுகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டதன் அறிகுறியா இது’ என்றால் மறுக்கிறார் அவர். ‘‘அந்தக் காலத்திலேயே நம் ஊரில் சின்ன வீடு வைத்துக்கொண்டிருந்த நிலை இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டது. காரணம், பொருளாதாரம். இந்தக் காலத்தில் இரண்டு குடும்பங்களை நடத்துவது என்பது சிரமமான விஷயம். அப்போது சின்ன வீடு என்பது செக்ஸ் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இருந்தது. ஆனால், இன்று செக்ஸுக்காக மட்டும் வேறொரு துணையைத் தேடிப் போவதில்லை. மன நெருக்கத்தை விரும்பியே செல்கிறார்கள். சிலருக்கு செக்ஸே பிரச்னையாகவும் இருக்கலாம். அப்படியே இருந்தாலும் கூட, மனரீதியிலான நெருக்கத்தால் அதை முறியடிக்க முடியும். அன்பு, மரியாதை, நம்பிக்கை, மனநெருக்கம் இந்த நான்கும் பரஸ்பரம் இருந்தாலே கணவனோ, மனைவியோ இன்னொரு துணை தேட மனசே வராது’’ என்கிறார் அவர்.
‘தனது துணை வேறொரு உறவைத் தேடுகிறார் என்பதை கணவன், மனைவி எப்படி அறிந்துகொள்வது?’
‘‘இது ஒன்றும் பெரிய காரியமே இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே மிக எளிதாகக் காட்டிக் கொடுத்து விடுகிறார்கள். இரவு நீண்ட நேரம் சாட்டிங் செய்வது, யாருக்கும் கேட்காதபடி போனில் குரல் தாழ்த்திப் பேசுவது, அல்லது வெளியே போய் பேசுவது... இதிலேயே தெரிந்துவிடும். இப்படியான செயல்களே சந்தேக எண்ணத்தையும் அதிகப்படுத்துகிறது. இந்த சந்தேக குணமும், குடும்பத்தைப் பிரித்துவிடும் சகுனியாக இருக்கிறது. குடிப்பழக்கத்தினாலும் கணவன் - மனைவிக்குள் பிரச்னை வெடித்து பிரிவில் முடிகிறது.’’

‘வேறொரு துணை தேடுவதை அதிகம் விரும்புவது ஆண்களா பெண்களா?’
‘‘ஒரு ஆண் துணை தேடும்போது அவனுடன் இருப்பது பெண்தானே? ஒரு பெண் துணை தேடும்போது அவளுடன் இணைவது ஆண்தானே? ஆக, சதவீதங்கள் பார்க்க முடியாது. பொதுவாகவே இங்கே ஆண் பெண் உறவில் இருந்த நேர்த்தி மாறியிருக்கிறது. கணவன் சம்மதத்துடன் மனைவியும், மனைவி சம்மதத்துடன் கணவனும் வேறொரு நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது மேலை நாடுகளில் அதிகம். இப்போது இங்கும் நடக்கிறது.
‘அலைபாயுதே’ பாணியில் பெற்றோருக்குத் தெரியாமலேயே திருமணம் செய்து வாழ்க்கை நடத்துபவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். பெற்றோர்களின் மனப்பான்மை மாறாததே இதற்கு காரணம். தங்கள் பிள்ளைகளை கோ-எஜுகேஷன் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். மொபைல் வாங்கித் தருகிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு சக மாணவனுடன் பழகுவதையோ, பேசுவதையோ விரும்புவதில்லை. அப்படி அடக்கி வைக்க முற்படும்போது தான் அவசரத் திருமணம், அதன் பிறகு அவஸ்தை போன்ற சிக்கல்களில் விழுகிறார்கள். இதனால்தான் இன்றைய காதல்களிலும் பிரிவு, தோல்வி அதிகரித்து விட்டது. ஆணோ, பெண்ணோ காதல் திருமணத்திற்கு அவசரப்படக்கூடாது. திருமணத்திற்கு சரியான பருவம் 26 வயதிலிருந்து 29க்குள்தான். அந்த வயதில்தான் மனது பக்குவம் அடைகிறது. பிரச்னை இல்லாத இல்லறத்துக்கு அந்தப் பக்குவம் தேவை! திருமணத்தை வெறும் கடமையாக நினைக்காமல், அந்த உறவில் நம்பிக்கை கொள்ள வேண்டும்’’ என்று முடிக்கிறார் விஜய் நாகசாமி.
- அமலன்
படம்: ஆர்.சந்திரசேகர்