கும்ப ராசியில் பிறந்த நீங்கள், கொடுத்து மகிழ்பவர்கள். பிறர் தேவைகளை எளிதாகப் புரிந்து கொள்பவர்கள். தன் கருத்தை நிலை நாட்டுவதில் வல்லவர்கள். சில நேரங்களில் ஏடாகூடமாகப் பேசி வம்பில் மாட்டுபவர்கள். ‘‘ஒரு நிமிஷம் இருங்க... நான் என்ன சொல்ல வர்றேன்னா... நாராயணா, நாராயணா, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்...’’ என்று அடிக்கடி குழப்பமாகப் பேசுவது உங்கள் இயல்பாக இருக்கும்.
உங்களின் குழந்தை பாக்கியத்தை தீர்மானிப்பவராக அதாவது பூர்வ புண்யாதிபதியாக மிதுன புதன் வருகிறார். மிதுனம் என்ற சொல்லுக்கே இரட்டை என்று பொருள். இந்த அர்த்தத்திற்கேற்ப இரட்டைப் பிள்ளைகள் அல்லது பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் தாய்மாமன் மற்றும் தாய்வழி உறவினர்களின் சாயலில் பிள்ளைகள் இருப்பார்கள். நீங்கள் பட்ட கஷ்டங்கள், கடந்து வந்த போராட்டப் பாதைகளை சொல்லிச் சொல்லியே வளர்ப்பீர்கள்.
அதேசமயம், ‘‘எல்லாம் உங்க இஷ்டம்தான். உங்க விஷயம் எதுலயும் நான் தலையிட மாட்டேன். ஆனா, தப்பு, தண்டான்னு போய் உங்க தலையில மண்ணை அள்ளிப் போட்டுக்காதீங்க’’ என்று யதார்த்தமாக எச்சரிக்கத் தயங்க மாட்டீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் புதன் கிரகம் கன்னியில் அமர்ந்திருந்தால் அதிபுத்திசாலியான பிள்ளைகள் பிறப்பார்கள். சனியுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தாலோ, இந்த இரண்டு கிரகங்களின் நட்சத்திரங்களில் இடம் பெற்றிருந்தாலோ பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். சி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. என ஏதேனும் ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். சிலர் திரைத்துறையில் மிளிர்பவர்களாகவும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரும் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். 5ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தால் பிள்ளைகள் முன்கோபிகளாக இருப்பார்கள். உங்களுக்கு விருப்பமில்லாத வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். இதே 5ம் இடத்தில் குரு இருந்தால் படிப்பு, உத்யோகம் என உங்களை விட்டு பிள்ளைகள் பிரிந்தே இருப்பார்கள். ஐந்தில் சூரியன் இருந்தால் குறை மாதத்தில் குழந்தை பிறக்கக்கூடும்.

குழந்தை பாக்கியத்திற்குரிய கிரகம் மிதுன புதனாக வருவதால், புதனை பலப்படுத்த சில பரிகாரங்கள் உள்ளன. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பழுதான பள்ளிக் கூடத்தை புதுப்பிக்க உதவுங்கள். சாலையோரத்தில் இலுப்பை மரக் கன்று நட்டு பராமரியுங்கள். ஏழை மாணவ, மாணவியருக்கு உதவுங்கள். நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி செய்யுங்கள். பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்கு உதவுங்கள். புதன் பலம் பெறும்.
கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரம் 3, 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 20 முதல் 36 வயது வரை குரு தசை நடைபெறுவதால் குழந்தை பாக்கியம் கொஞ்சம் தாமதமாகக் கிடைக்கும். இஷ்ட தெய்வத்திற்கு துலாபாரம் தந்தால், பிள்ளை பாக்கியம் உடனே கிடைக்கும். ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால் 24, 25 வயதிலேயே வாரிசு கிடைக்கும். பொதுவாக 33 வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. சிலருக்கு இரண்டாவது குழந்தை 8 முதல் 10 வருட இடைவெளிக்குப் பின்னர் பிறக்கலாம்.
சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏறக்குறைய 26 வயது வரை குரு தசை இருக்கும். அதன்பின் 19 வருடங்களுக்கு சனி மகாதசை. இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலருக்கும் குரு தசையின் இறுதியில்தான் திருமணம் நடைபெறுகிறது. பலருக்கு 29 முதல் 33 வயதுக்குள் குழந்தை கிடைக்கிறது.
பூரட்டாதி நட்சத்திரம் 1, 2, 3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 28 வயது வரை ராசிநாதன் சனியின் தசை நடைபெறுவதால், அதற்குள்ளேயே குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். சிலருக்கு அதனை அடுத்து 17 வருடங்கள் நடைபெறும் புதன் தசையில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் மேஷம், கடகம், மகரம் ராசிக் காரர்களை வாழ்க்கைத் துணை யாகத் தேர்ந் தெடுக்காமல் தவிர்ப்பது நல்லது.
உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மிதுன புதன் வருவதால் பெருமாள் தரிசனம் எப்போதும் நல்லது. உபதேசம் செய்த பெருமாளாக இருப்பின் இன்னும் சிறந்தது. அப்படிப்பட்ட பெருமாள் அருள்பாலிக்கும் தலமே நாச்சியார்கோயில் ஆகும். இத்தலத்து இறைவனான திருநறையூர் நம்பி, திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரங்களை அளித்து உபதேசித்தார். இப்படிப்பட்ட பெருமையினை கொண்ட நம்பியையும், இத்தலத்தின் பெரும் சிறப்பிற்குரியவரான கருடாழ்வாரையும், தாயாரையும் வணங்கி வாருங்கள். உங்கள் வீட்டில் விரைவில் தூளி கட்டுவீர்கள்.
மீன ராசியில் பிறந்த நீங்கள் கற்பனையிலும், கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் சுவைத்துப் பார்ப்பதிலும் வல்லவர்கள். எத்தனை வயதானாலும் குழந்தைகளோடு சேர்ந்து கும்மாளமிடுவதிலும் குறும்பு செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் பாலைக் கொட்டினாலும், பாத்திரத்தை உடைத்தாலும் ஒப்புக்கு ஒரு அதட்டல் போட்டுவிட்டு ரசிப்பீர்கள்.
உங்கள் பூர்வ புண்ணியாதிபதியாக சந்திரன் வருவதால், பிள்ளைகள் உங்களை விட சமயோசித புத்தி உள்ளவர்களாகவும், அழகாகவும், புகழ்மிக்கவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், குமரப் பருவம் என வளர்ச்சியை கண் கொட்டாமல் ரசித்து மகிழ்வீர்கள். பொரியல், கூட்டு, சாம்பாரை எல்லாம் பிள்ளைக்குத் தந்து விட்டு, மிச்சம் மீதி இருப்பதை வழித்துக் கொட்டி வெறும் ரசம் சாதத்தை சாப்பிட்டு சந்தோஷப்படும் தாய்மார்கள் மீன ராசியில் இன்றும் பலருண்டு. ‘‘ஏங்க... உங்களுக்கு ஏன் 600 ரூபாய்ல சட்டை எடுக்கறீங்க? பையனுக்கு காஸ்ட்லியா எடுப்போம், நமக்கென்ன இனிமேல்...’’ என்று கணவரை பின்னுக்குத் தள்ளி பிள்ளைகளை ரசிப்பீர்கள்.

உங்கள் சொந்த ஜாதகத்தில் கடகம், தனுசு, மகரம், மீனம் ராசியில் சந்திரன் இருந்தால் காந்த புத்தியுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள். குரு பார்வை, குரு சேர்க்கை பெற்ற வளர்பிறைச் சந்திரன் என்றால் கேட்கவே வேண்டாம். பிள்ளைகள் உலகப் புகழடைவார்கள். பேராசிரியர், மருத்துவர், கட்டிட, அழகுக்கலை நிபுணர்கள் என பல துறைகளில் மிளிர்வார்கள். சனி, ராகு, கேதுவுடன் சந்திரன் சம்பந்தப்பட்டிருந்தால் மூர்க்கமும், தான்தோன்றித்தனமும், ஊதாரித்தனமும் இருக்கும். சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் அதிகாரப் பதவியில் வலம் வருவார்கள்.
குழந்தை பாக்கியத்தைத் தரும் கிரகமாக சந்திரன் வருவதால், சந்திரனை பலப்படுத்த நீர் நிலையில் விளையும் ரத்தினங்களான முத்து, பவழத்தை நீங்கள் அணியலாம். மாதுர்காரகன் என்கிற தாய்க்கு உரியவராக சந்திரன் வருவதால், தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தாயிற் சிறந்த கோயில் இல்லை என்பதை உணர்ந்து அம்மாவை நேசியுங்கள். பூப்படைந்த ஏழைப் பெண்ணுக்கு வெள்ளி அணிகலன்கள் வாங்கிக் கொடுங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு உதவுங்கள். மூங்கில் அல்லது புன்னை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள்.
மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 21 வயது முதல் 38 வரை புதன் தசை நடைபெறுவதாலும், புதன் உங்களுக்கு பாதகாதிபதியாக வருவதாலும் திருமணம் தடைபட்டு முடியும். திருமணம் சீக்கிரம் முடிந்தாலும், குழந்தை பாக்கியம் தாமதமாகக் கிடைக்கும். சிலருக்கு சற்றே மனவளம் குன்றிய குழந்தை பிறக்கக்கூடும். அதனால் பாதகாதிபதி தசை இல்லாத சுகாதிபதி, லக்னாதிபதி என யோக தசை நடைமுறையில் இருக்கிற வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தல் நல்லது. பொதுவாக பூரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒழுக்கமுள்ள பிள்ளைகள் பிறக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஏறக்குறைய 27 வயது வரை புதன் தசை நடைபெறுவதாலும், சனியின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு புதன் நட்பாக வருவதாலும் 24 வயது முதல் 27க்குள்ளேயே குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். சிலருக்கு கேது தசையில் 30 முதல் 33 வயதுக்குள் குழந்தை கிடைக்கும். உங்களுக்கு அதிக உயரமும், விளையாட்டு ஆர்வமும், அரசியல் ஈடுபாடும் உள்ள பிள்ளைகள் பிறப்பார்கள்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் பலருக்கு திருமணமும், குழந்தை பாக்கியமும் சீக்கிரமே கிடைக்கும். ஏறக்குறைய 17 வயது முதல் 37 வயது வரை சுக்கிர தசை நடைமுறையில் இருப்பதால் எல்லாம் எளிதாக அமையும். ஆனால் சுக்கிரன் வலுவிழந்திருந்தால் மறுமணம் செய்யக் கூடிய நிலையும் உண்டாகும். பொதுவாக ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உற்றார், உறவினர்கள் வியக்கும் அளவிற்கு அற்புதமான குழந்தை பிறக்கும்.
மீன ராசிக்காரர்கள் மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்களை வாழ்க்கைத்துணையாக ஏற்காமல் இருப்பது நல்லது.
உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கிரகமாக சந்திரன் வருகிறது. சந்திரன் என்றாலே அழகும், அருளும் பொங்கும் அம்பாள்தான் நினைவுக்கு வரும். பூரண அழகு நிறைந்த குங்குமம் மணக்கும் அம்பாளான புதுக்கோட்டை புவனேஸ்வரியை வணங்குங்கள். மீன ராசியின் அதிபதியாக குரு வருவதால் மகான்கள் ஆராதித்த அம்பாள் எனில் இன்னும் அதிக சிறப்பு. அப்படி மகான்களால் ஆராதிக்கப்பட்டவள்தான் புவனேஸ்வரி. இவளை தரிசியுங்கள். அரிசிப் பல்லோடு கூடிய அழகுக் குழந்தை பிறக்கும்... பாருங்கள்!
‘வாழ்க்கைத்துணை ஒத்து வருவதுடன் வாழ்க்கைத்துணையைப் பெற்றவர்களும் உறுதுணையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம். அந்த பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? ‘‘எனக்கு அவங்க மாமனார் மாமியார் இல்லை. என் அம்மா அப்பா மாதிரி’’ என்று எல்லோராலும் சொல்ல முடியுமா என்பதை இனி பார்ப்போம்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்