‘‘என்னாகிவிட்டது என் மழைக்கு?என்னாகிவிட்டது என் இயற்கைக்கு?என்னாகிவிட்டது என் நிலவுக்கு?என்னாகிவிட்டது என் சூரியனுக்கு?என்னாகிவிட்டது பசுமையாக இருந்த என் பூமிக்கு?இதையெல்லாம் எப்போது நான் திரும்பப் பெறுவேன்?மனிதா!எப்போதாவது நீ திரும்பி நின்று பார்த்திருக்கிறாயா?வலியால் அலறும் பூமியைஅழ முடியாமல் விசும்பும் தீரங்களை’’ ‘எர்த் சாங்’ என்ற பாடலில் மைக்கேல் ஜாக்ஸன் ஒரு தெருப்பாடகனாக இப்படிக் கதறிக் கதறி அழுவான்.
காடுதான் பல்லுயிர்களுக்கும் தாய்மடி. பல்லுயிர் என்பது அங்குள்ள தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த உயிர்ச் சங்கிலியில் எந்தக் கண்ணியும் அறுந்துவிடக் கூடாது. பல்லுயிர்களும் இருந்தால்தான் காடு வாழ முடியும். அந்தக் காட்டில்தான் மேகங்கள் கர்ப்பம் தரிக்க முடியும். அம்மா இல்லாத பிள்ளைகள்; பிள்ளைகள் இல்லாத அம்மா... இரண்டுமே சோகம்தான். காடு செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும். நாம் வாழ்வுக்காகவும் வணிகத்துக்காகவும் உல்லாசத்துக்காகவும் காடுகளை அழித்துவிட்டு நாடு செழிப்பாக இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.
காலி பிளாஸ்டிக் குடங்களோடு பெண்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியல் செய்துகொண்டிருக்கிறார்கள். கட்டற்ற மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்து நிற்கிறார்கள். தாங்க முடியாத கோடை வெப்பத்தில் கொப்பளித்து நிற்கிறார்கள். இந்த முறையற்ற தவிப்புக்கும் போராட்டத்திற்கும் முரண்பட்ட தட்பவெப்ப நிலைக்கும் அழிக்கப்படும் காடுகள்தான் காரணம் என்பதை உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. வளர்ந்த நாடுகள் தங்கள் வசதிகளை தக்க வைத்துக்கொள்ளவும் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் நமது மலைகளையும் காடுகளையும் கடலையும் குறி வைத்து வேட்டையாடுகின்றன. நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கும் நமது அரசியல்வாதிகள், அடுத்த தேர்தலிலும் நமக்கு நோட்டு தர வேண்டும் என்பதற்காகவே நாட்டையும் காட்டையும் நல்ல விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்த்துக் கோபப்படும் ஒருவன் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு பாக்கெட் தண்ணீர் வாங்கிக் குடித்து சாந்தமாகலாம். அல்லது டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரஃபிக் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து ஆறுதல் அடையலாம்.
நமது சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தும் இயற்கையை சாட்சி வைத்தே எழுதப்பட்டவை. நமது மலை வளம், கடல் வளம், காட்டு வளம் அனைத்துமாக வரையப்பட்ட புவியியல் ஓவியங்கள் அவை. அகநானூற்றில் கபிலரின் ஒரு பாடலில் அமைந்த அழகான ஒரு நிலக்காட்சியைப் பாருங்கள்.

‘கொழுமையான இலைகளோடு பெரிய குலைகள் தள்ளிய வாழை மரங்கள்; அந்தக் குலைகளில் முறையாகப் பழுத்த பழங்கள், வாழைப் பழங்களை உண்ணுகிறவர்களை (மணத்தால்) தடுத்து நிறுத்தும் வகையில் மலைச்சரிவிலே பலாப்பழங்கள் இன்னொரு புறத்தில் உள்ளன. அந்தப் பலாவின் சுளைகளிலிருந்து வழிகிறது தேன். வாழைப்பழமும், தேன் வழியும் பலாச்சுளையும் கீழேயுள்ள பாறையில் அமைந்திருக்கும் சுனைகளில் விழுகின்றன. சுனை நீரும் பழச்சாறும் கலந்துவிட்டன. நாட்பட நாட்பட அந்தச் சுனை நீரே கள்ளாகிவிட்டது. இதனை அறியாத ஓர் ஆண் குரங்கு, அந்தச் சுனை நீர்த் தேறலைக் குடித்துவிட்டது. போதைக் களிப்பு ஏறிவிட்டது. மிளகுக்கொடி படர்ந்து வளர்கின்ற சந்தன மரத்தின் மீது போதைத் தடுமாற்றத்தோடு அந்தக் கடுவன் ஏறிப்பார்க்கிறது. முடியவில்லை. கீழே விழுந்துவிடுகிறது. தரையில் பல வகை மலர்கள் உதிர்ந்து பரவியிருப்பதால் குரங்குக்கு நல்ல மலர்ப்படுக்கை கிடைத்தது. போதையோடு தூக்கக் கலக்கமும் சேர்ந்து குரங்கு இனிமையாகத் தூங்குகிறது...’’ என்று நீள்கிறது பாடல்.
‘வானகமே இளவெயிலே மரச்செறிவே... நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ’ என்று பாரதி பாடியது போல மாறிவிட்டன காட்சிகள். தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்காக இருந்த காடுகள், இன்று ஆறில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. இது பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கு. இந்தியாவில் காடுகள் அதிகமுள்ள மாநிலங்களில் 13ம் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
விவசாயிகள் மரபு சாராத வேளாண்மை முறையினால் நிலங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து களையும் ரசாயன உரங்களையும் போடுகிறார்கள். நிலம் தற்காலிகமாக அதிக விளைச்சல் கொடுத்தாலும், அதன் பிறகு அந்த மண் சக்தியிழந்து செத்துப்போய்விடுகிறது. அடுத்து அவர்கள் தங்கள் நிலங்களைக் காடுகளை நோக்கியோ மலையடிவாரங்களை நோக்கியோ நீட்டிக்கிறார்கள். காடு அழியத் தொடங்குகிறது.
கிராமங்களில் பெருகிவரும் மக்கள்தொகைக்குப் போதுமான எரிபொருள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் ஏழைகளுக்கு எட்டும் விலையில் இல்லை. விறகுகளுக்காக காடு அழியத் தொடங்குகிறது.
தொழிற்சாலைக்கு மூலப்பொருள்கள் தேவைப்படுகின்றன. காடு அழியத்தொடங்குகிறது.
மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தோடு காடுகளுக்குள் பெரிய பெரிய அணைகள் உருவாகின்றன. காடு அழியத் தொடங்குகிறது.
நமது காட்டுப் பகுதிகளின் அழகையும் அமைதியையும் சூழலையும் காதலிக்கும் வெள்ளைக்காரர்கள் அடிக்கடி வருகிறார்கள். அவர்களுக்காக உல்லாச விடுதிகள் கட்டப்படுகின்றன. காடு அழியத் தொடங்குகிறது.
ஊழல்மயமான வனக்காவலர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மரங்களையும் மிருகங்களையும் வேட்டையாடுபவர்களுக்குத் தஞ்சம் தருகிறார்கள். காடு அழியத் தொடங்குகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு தொழில்களுக்காகவும் கனிமச் சுரங்கங்கள் தோண்டவும் மக்களையும் மலைவாசிகளையும் பழங்குடிகளையும் துரத்தியடித்து மண்ணை ஆக்கிரமிக்கிறார்கள். காடு அழியத் தொடங்குகிறது.
தாவரங்களையும் விலங்குகளையும் பறவையினங்களையும் மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுவதற்காக 1970ம் ஆண்டு யுனெஸ்கோ ‘மனிதரும் உயிர் மண்டலமும்’ என்று ஒரு திட்டத்தை வகுத்தது. அதன்படி, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உயிர் மண்டலக் காப்பகங்கள் தொடங்கப்பட்டன. இன்று தமிழ்நாட்டில் நீலகிரி, அகத்தியர் மலை உட்பட மூன்று இடங்களில் உயிர் மண்டலக் காப்பகங்கள் உள்ளன. இவை தவிர 5 தேசிய பூங்காக்கள், 5 வனவிலங்கு சரணாலயங்கள், 12 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
இவற்றை பாது காப்பதும் பல்லுயிர்ச் சங்கிலியைக் காப்பாற்றுவதும் தான் இன்று சூழலியலில் மிக முக்கியமாக நாம் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த, பிரமாண்டமான, அதி நவீன தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம் ‘அவதார்’. இந்தப் படத்தின் மையக்கரு காதலோ, செக்ஸோ, குடும்பமோ அல்ல. ஒரு கூட்டம் பேராசையால் பூமி முழுதும் உள்ள காடுகளை அழித்து ஒழித்து, அடுத்த கிரகத்திற்குச் சென்றும் அதையே செய்கிறது. பூமியின் பரிதாப நிலையை உணர்ந்த மனிதன், அந்த கிரகத்திற்குச் சென்று, வேற்றுக்கிரகவாசிகளின் உதவியோடு, காடுகளை அழிப்பவர்களைத் துரத்துவதுதான் கதை.
இந்தப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், படம் எடுத்ததோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் 50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நமது எழுத்தாளர்களும் கலைஞர்களும் கூட இயற்கைக்காக, பூமியைப் பாதுகாப்பதற்காக இப்படி ஆக்கபூர்வமாக கைகோர்த்து நிற்க வேண்டும்.
அரசாங்கத்துக்கும் பொறுப்பு வேண்டும். வனப்பகுதிகளில் பெரிய பெரிய சாலைகளை அமைக்கக்கூடாது, உல்லாச விடுதிகள் கட்ட அனுமதிக்கக் கூடாது. பெரிய அணைகள், கனிமச் சுரங்கங்கள் கூடாது. கேன்சர் நோயாளியாக இருக்கும் பூமியைக் காப்பாற்றி நலம் வாழ வைக்க வேண்டும்.
இயற்கைக்கு எதிரான வாழ்க்கை கூடாது. இல்லையென்றால், மைக்கேல் ஜாக்ஸன் பாடலில் கதறி அழுததைப்போல உண்மையிலேயே நாம் ரோட்டில் கதறி அழுது கண்ணீர் விட வேண்டியிருக்கும்.
(சலசலக்கும்...)
பழநிபாரதி