‘‘நீ ங்கள் செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று ஆண்கள் சொன்னால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அழகாக, கவரும் விதமாக இருக்கிறீர்கள் என்றுதான் அதற்கு அர்த்தம். எனவே அதை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளுங்கள்..!’’இப்படிச் சொன்னவர் சாதாரண ஆளில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி மம்தா சர்மா. ஜெய்ப்பூரில் கடந்த வாரம் ஒரு பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில்தான் மம்தா இப்படிச் சொன்னார். மம்தாவின் இந்தக் கருத்துக்கு பெண்ணியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிலர் ஆதரிக்கவும் செய்கிறார்கள். தேசிய அளவில் இந்த விவகாரம் அனல் கிளப்பிவரும் நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய செயலாளர் உ.வாசுகியும், கவிஞர் குட்டிரேவதியும் நடத்தும் கருத்து யுத்தம்...

மம்தா சர்மாவின் பேச்சு மகளிர் ஆணையத்தின் நோக்கத்துக்கு முரணானது. 1997ல் விஸாகா க்ஷிs ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பாலியல் துன்புறுத்தல்கள், சீண்டல்கள் என்றால் என்ன என்று தெளிவாகக் கூறப்படுகிறது. எந்த ஒரு செயலும் விரும்பத்தகாத வகையில் இருந்தால் அதை பாலியல் துன்புறுத்தலாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது அந்தத் தீர்ப்பு. ஒரு வார்த்தையை, சொல்கிறவர் என்ன உணர்வில் சொல்கிறார் என்பதை விட, கேட்பவர் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதுதான் முக்கியமானது.
‘செக்ஸியாக இருக்கிறாய்’ என்று சொல்வதை சில பெண்கள் ரசித்து ஏற்றுக்கொள்ளலாம். சிலர் அமைதியாக இருக்கலாம். அதேநேரத்தில் ஒருபெண் அதைப் பாலியல் சீண்டலாகவும் கருத உரிமை இருக்கிறது. அந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வது என்பதை சம்பந்தப்பட்ட பெண்தான் தீர்மானிப்பாள். எனவே அதை சகஜமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவும் தேவையில்லை; கொதித்தெழுந்து போராடுங்கள் என்று சொல்லவும் அவசியமில்லை.
பாலியல் துன்புறுத்தல்கள், சீண்டல்கள், வன்முறைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில், அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டிய மகளிர் ஆணையத்தின் தலைவியே ‘அதை சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது கேலிக்குரியது. தான் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக நாளை ஒரு பெண் மகளிர் ஆணையத்தில் புகார் செய்தால் மம்தா எப்படி விசாரணை நடத்துவார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
மகளிர் ஆணையம் என்பது பலம் வாய்ந்த அமைப்பு. அரசாங்க கொள்கை முடிவுகளில் பெண்களுக்கு எதிரான விளைவுகள் இருந்தால், அதைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்தும் அதிகாரம் அதற்கு இருக்கிறது. ஆனால் மகளிர் ஆணையத்தின் நிர்வாகிகளாக குறைந்தபட்சத் தகுதிகூட இல்லாத அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. பெண்ணியம் சார்ந்த எந்த புரிதலும் இல்லாத மம்தா போன்றவர்கள் அந்த அமைப்பின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். பாலின சமத்துவம் முழுமையடையாத நம் நாட்டில் இதுபோன்ற விஷயங்களை நுணுக்கமாக அணுகி, ஆராய்ந்து பேச வேண்டும்.
குட்டி ரேவதி
பெண்கள் அமைப்புகள் பழமையில் ஊறித் திளைத்த அமைப்புகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம். அவர்கள் இலக்கும், அவர்கள் பேசுகிற பெண்ணுரிமை, பெண் விடுதலை போன்றவற்றின் வரையறைகளும் எனக்கு விளங்கவில்லை. சுதந்திரம் என்பதும், விடுதலை என்பதும் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் ஆதிக்கவாதிகள் அமர்ந்திருப்பதே பிற்போக்குத் தனத்துக்குக் காரணம் என்று நான் கருதுகிறேன்.
மகளிர் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பல்வேறு நாடுகளின் பெண்ணியச் சூழல்களையும் உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு பெற்றவர். அவருக்கு உலகளாவிய அறிவு உண்டு. உலகில் வேறெந்த நாட்டிலும் மரபின் பெயரில் பெண்களை இந்த அளவுக்கு ஒடுக்குவதில்லை. அதையெல்லாம் உணர்ந்தே அவர், ‘செக்ஸி என்ற வார்த்தையை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார். இது சாதாரண விஷயம்.
ஆண்களும் பெண்களும் தோழமை உணர்வோடு செயல்படும் காலம் இது. இரவு, பகல் பார்க்காமல் ஒரே அலுவலகத்தில் சம அதிகாரத்தில் பணி புரிகிறார்கள்; சம ஊதியம் பெறுகிறார்கள். செயலை, வெற்றியை ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பாராட்டிக் கொள்கிறார்கள். அந்த அடிப்படையில், ஒரு ஆண் தன் தோழியைப் பார்த்து ‘நீ இன்னைக்கு அழகா இருக்கே’ என்று பாராட்டுவது உன்னதமான உரையாடல் வெளிப்பாடுதான். ஆபாசத் தொனியில் சொல்வதையும், உண்மையிலேயே பாராட்டுவதையும் பெண் புரிந்து கொள்ளத் திராணியற்றவள் இல்லை.
ஒரு சொல்லை வைத்துக் கொண்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் பெண்ணிய அமைப்புகளைக் கேட்கிறேன்... சட்டமும், நீதியும் பரவலாகியுள்ள இக்காலத்தில் எந்த அச்சமும் இல்லாமல் 4 இருளர் சமூகப் பெண்களை வன்புணர்வு செய்து கொடுமைக்கு உள்ளாக்கிய காவலர்களுக்கு எதிராக இந்த பெண்ணிய இயக்கங்கள் எதைக் கிழித்தார்கள்..? இந்தியா முழுவதும் தலித், விளிம்பு நிலைப் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு வன்முறை நிகழ்கிறது. அதையெல்லாம் தட்டிக் கேட்க இந்த பெண்ணிய இயக்கங்களுக்கு நேரமில்லை. ஒரேயொரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு காகித யுத்தம் செய்வதன்றி இவர்கள் செய்தது ஒன்றுமில்லை. சமூக மாற்றங்களையும், வாழ்வியல் சிக்கல்களையும், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் புரிந்துகொண்டு பெண்ணியவாதிகள் களத்துக்கு வரவேண்டும். அதை விடுத்து இப்படி வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருந்தால், பெண்ணிய போராட்ட நகர்வுகள் திசை திரும்பிவிடும்.
வெ.நீலகண்டன்