ஆல்கஹால் அருந்தாமலேயே போதையூட்டுகிறது லக்ஷ்மி ராயின் அழகு. ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடிக்க, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னக மொழி அத்தனையிலும் ஆஃபர்கள் குவிகிறது. ‘இந்தப் பூரிப்பில் குண்டடித்திருப்பாரே’ என்று யோசித்தால், ஜீரோ சைஸை நெருங்கி மயங்கச் செய்கிறார்.
கார்த்தி, ஜீவா படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை உதறித் தள்ளினார்... த்ரிஷாவுக்கும் இவருக்கும் இடையே டிஷ்யூம் டிஷ்யூம் என்று கிறுகிறு செய்திகள் லக்ஷ்மி ராயைச் சுற்றி ரவுண்டடிக்கின்றன. அவருடன் பேசினோம்...
‘‘சும்மா பில்டப்புக்காக சொல்லலீங்க... நிஜமாவே நான் இப்போ ரொம்ப பிஸி! தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம், கன்னடத்தில் உபேந்திராவுடன் ‘காஞ்சனா’ ரீமேக், மலையாளத்தில் திலீப்புடன் ‘மிஸ் மாயா மோகினி’ன்னு கால்ஷீட் ரொம்ப டைட்டா இருக்கு. ஃபிளைட், அதை விட்டு இறங்கினா ஷூட்டிங்னு பரபரப்பா அலையறதால புது படங்களை கமிட் பண்ண முடியல. பொதுவா எல்லாரும் ஆரம்பத்தில ‘ஃப்ளாப்’ கொடுத்து அப்புறம்தான் ஹிட் கொடுத்திருக்காங்க. என்னோட கேரியரும் அப்படித்தான் ஸ்டார்ட் ஆனது. இப்பதான் நல்ல நேரம் ஆரம்பமாகியிருக்கு. இந்த நேரத்தில் நான் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமா இருக்கணும். அதனாலதான் சில படங்கள் ஒத்துக்கல...’’
அதுக்காக லட்டு மாதிரி வந்த கார்த்தி, ஜீவா படங்களையுமா வேண்டாம்னு சொல்வீங்க?‘‘கார்த்தி படத்தோட கதை கேட்டேன். அதுல என் கேரக்டருக்கு அவ்வளவா முக்கியத்துவம் இல்லாதது போல தோணுச்சு. தவிர, அனுஷ்காவும் அந்தப் படத்துல இருக்காங்க. வேண்டாம்னு மனசுல பட்டதால, ‘நான் நடிக்கல சார்’னு வெளிப்படையா சொல்லிட்டேன். இதுல எந்தத் தப்பும் இருக்கறதா எனக்குத் தெரியல. ஒரு படத்துல எத்தனை சீன்ல நான் வர்றேன்ங்கறது முக்கியமில்ல. ஆறு, ஏழு சீன்ல வந்தாலும் என் கேரக்டர் பேசப்படணும். அடுத்து ஒரு கார்த்தி பட வாய்ப்பு கிடைச்சு, எனக்கும் முக்கியத்துவம் இருந்தால், சம்பளத்தைக்கூட பொருட்படுத்தாமல் நடிக்க நான் ரெடி!’’
ஜீவா படத்தில் என்ன பிரச்னை?
‘‘ஒரு பிரச்னை யும் இல்ல. ‘வாமனன்’ அஹ்மது சார், ஜீவாவை வச்சு பண்ற படத்தோட கதையைச் சொன்னார். தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர் வருவதுபோல தோணிச்சு. அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன். அவரும், ‘சரி... அடுத்த படத்தில சேர்ந்து பண்ணுவோம்’னு சொல்லிட்டார். அவ்வளவுதான் நடந்தது. மற்றபடி தேவையில்லாமல் கிளம்புகிற வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.’’
உங்களுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே என்ன நடக்குது?‘‘த்ரிஷாவும் நானும் ‘மங்காத்தா’வுல சேர்ந்து நடிச்சோம். ‘படத்தில் லக்ஷ்மி ராய்தான் ஹீரோயின்’னு நிறைய விமர்சனங்கள்ல எழுதினாங்க. இதை அவங்களால தாங்கிக்க முடியல. பல ரிப்போர்ட்டர்களுக்கு போன் பண்ணி, ‘லக்ஷ்மி ராய்தான் ஹீரோயின்னு ஏன் எழுதுனீங்க’ன்னு த்ரிஷாவோட அம்மா பிரச்னை பண்ணியிருக்காங்க. ‘எனக்குதான் ‘மங்காத்தா’ படத்தில் முக்கியமான ரோல்’னு நான் பேட்டி கொடுத்ததாகவும் சொல்லி என்னை வம்புக்கு இழுக்கறாங்க. நான் அப்படி எதுவும் இதுவரை சொன்னதில்லை. நான் என் வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன். தேவையில்லாம என்னை சீண்டுறாங்க. சும்மா இருக்கும்போது இவங்களாவே பிரச்னையை கிரியேட் பண்றாங்க. வெங்கட்பிரபு சார் ரொம்ப டீசன்ட்டான ஆளு. அவர் பேரையும் இதில தேவையில்லாம இழுக்கறாங்க.
விஜய், விக்ரம்னு பெரிய பெரிய ஹீரோக்களோட நடிச்சவங்க த்ரிஷா. அவங்க ஏன் என்னை போட்டியா நினைக்கணும்? இதெல்லாம் ரொம்ப சில்லியான விஷயம். இதுக்கு முன்னாடி சொல்லல... இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க... ‘மங்காத்தா’வில் நிஜமாகவே த்ரிஷாவைவிட எனக்குத்தான் முக்கியத்துவம். சாதாரண ஆடியன்சுக்கும் இது தெரியும். த்ரிஷாவும் நானும் மீட் பண்ணினா நல்லாதான் பேசிக்கறோம். ஆனா அவங்க அம்மாதான் பின்னாடியிருந்து பிரச்னை பண்றாங்க. இனியாவது எங்கிட்ட சண்டை வேண்டாம்னு கேட்டுக்கிறேன்... ப்ளீஸ்!’’ என்று சூடானவரை திசை திருப்பினோம்.
டோனியுடன் நட்பு தொடர்கிறதா... கடைசியா எப்போ பேசினீங்க?‘‘ரொம்ப நாளாச்சுங்க. அவரும் என்கிட்ட பேசலை. ஃபிரண்டா இருந்தாக் கூட அவர் இப்போ ஃபேமிலிமேன் ஆகிட்டார். அதனால அளவோடதான் வச்சிக்கணும். நானும் இப்போ பிஸியா இருக்கிறதால. பேசுவதற்கான நேரமோ, சந்தர்ப்பமோ இல்லை.”
எஸ்.ஜே.சூர்யா படத்தில் நீங்கதான் ஹீரோயின்னு ஒரு செய்தி இருக்கே?‘‘அதுக்குள்ள தெரிஞ்சிடுச்சா? அப்பா... இந்த மீடியாக்காரங்க ரொம்ப ஃபாஸ்ட்டாதான் நியூஸ் பிடிக்கிறாங்க. அவர் எங்கிட்ட பேசியிருக்கார். நானும் கதை கேட்டிருக்கேன். மற்றபடி வேறெதுவும் இப்போதைக்கு சொல்லமுடியாது. பாலிவுட் ஆசை எனக்கும் இருக்கு. இப்போ ஒரு சான்ஸ் வந்திருக்கு. இந்தி ஃபீல்டுல ஸ்லிம் ஹீரோயினைத்தான் லைக் பண்ணுவாங்க. அதனால வெயிட் கம்மி பண்ணியிருக்கேன். போட்டோஸ் பாருங்க... நல்லா இருக்கேனா?’’ என்ற லக்ஷ்மி ராயிடம் சொல்லாமலா இருப்போம், சூ..........ப்பர்!
அமலன்