‘‘ரஜினி சார் படத்தலைப்பு எங்க படத்துக்கு பலம்தான். ஆனாலும் இந்தக்கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பா இருக்கும்...’’ என்றார் டாக்கிங் டைம்ஸின் ‘கழுகு’ பட ஹீரோ கிருஷ்ணா. மலைப்பகுதிகளின் கிடுகிடு பள்ளத்தாக்குகளில் விபத்தாகவோ, தற்கொலையின் காரணமாகவோ விழுந்து உயிரை விடுபவர்களின் சடலங்களை மீட்கும் கேரக்டரை இந்தப் படத்துக்காக ஏற்கும் கிருஷ்ணா தொடர்ந்தார்...
‘‘கழுகு பிணங்களைத் தேடித்தான் பறக்கும். இன்னொருபக்கம் தன் கூட்டத்தைப் பாதுகாப்பா வாழவைக்கும். அதைப் போலவே படத்துல எங்க கூட்டமும் இருக்கிறதால இந்த டைட்டில் பொருத்தமா அமைஞ்சது. எங்க கூட்டம்னு சொன்னா... இதுல என் கூட தம்பி ராமையா, கருணாஸ் இருக்காங்க. இவங்கள்ல தம்பி ராமையாவோட அனுபவங்கள் எங்க வேலைக்குக் கைகொடுக்கிறதா இருக்கும். இந்தக் களம் எப்படி சினிமாவுக்குப் புதுசா இருக்குமோ, அப்படியே இன்னொரு பக்கம் தேயிலை பேக்டரிகள்ல நடக்குற விஷயங்களும் புதுக்களமா இருக்கும்.
பிணங்களைக் கண்டுபிடிக்கிற எபிசோட்ல வர்ற நானும், தேயிலை பேக்டரி எபிசோடுகள்ல வர்ற பிந்து மாதவியும் எப்படி சந்திக்கிறோம், எப்படிக் காதல்ல விழறோம்ங்கிறது தனிக்கதை. மேலோட்டமா கேட்கிறதுக்கு கனமான கதை போலத் தெரிஞ்சாலும், படத்தோட முன்பகுதி சிரிக்க சிரிக்கப் போகும். பின்பாதிக் கதைலதான் டைரக்டர் சத்யசிவா தான் சொல்ல வர்றதை அழுத்தமா சொல்றார்...’’
வழக்கமாக சென்சாரில் ‘ஏ’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ்கள் கிடைத்துவிட்டால், வரிவிலக்குக்காகவும், குடும்பத்துடன் ரசிகர்களைத் தியேட்டருக்குக் கொண்டுவரும் முகமாகவும் போராடி ‘யு’ சான்றிதழ் வாங்குவார்கள். ஆனால் இந்தப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ் தர முன்வந்தும், போராடி ‘யு/ஏ’ பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் கே.கே.சேகர். அதைப் பற்றியும் விளக்கினார் கிருஷ்ணா.
‘‘யு சர்டிபிகேட்டுக்காக அவங்க வெட்டச் சொன்ன காட்சிகளை இழந்தா, படத்தோட கதை சேதாரமாகும். ‘யு’ கிடைக்கலேன்னா வரிவிலக்கைக் கூட இழக்க நேரிடும். ஆனாலும் கதை புரியலைன்னா அது வெற்றிப்படமா ஆகாது. அதனால கதையோட தன்மையைக் கருதி நாங்களா ‘யு/ஏ’ வாங்க வேண்டி வந்தது. படத்துல துருத்திக்கிட்டு எந்த செய்தியும் இல்லைன்னாலும், மரணத்தோட வலியைப் படம் சொல்லும். என்னதான் தற்கொலைக்கு ஒருத்தர் முயற்சி செய்தாலும், குதிக்கற கடைசி நொடியில வாழணும்ங்கிற ஆசை ஏற்பட்டு கைல கிடைக்கிற செடி, கொடிகளைப் பற்ற முயற்சிப்பாங்க. இறந்து கிடக்கும் பிணங்களோட மூடியிருக்க கைகள்ல தாவரங்கள் சிக்கியிருக்கிறதை காட்சியாக்கி இதை உணர்த்தியிருக்கோம். உயிர்களோட மதிப்பை உணரவைக்கிற படமா இது இருக்கும்.
படைப்புரீதியா படத்தைச் சொன்னா முதல் ஹீரோவா யுவனோட இசை இருக்கும். இரண்டாவது ஹீரோவா திரைக்கதையும், மூன்றாவது ஹீரோவா சத்யாவோட ஒளிப்பதிவும் இருக்கும். ஹீரோவா எனக்கு நாலாவது இடம்தான்..!’’
ஜி