இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட்... இப்படி எல்லாவற்றுக்கும் பொருத்தமான, பிரமாதமான சைட் டிஷ் ஜாமும், சாஸும். காய்கறி சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கும், இந்த இரண்டையும் கொடுத்து தைரியமாக சமாளிக்கலாம். ‘குழந்தைங்களுக்கு ஓ.கே. பெரியவங்களுக்கு... தினம் ஒரே டேஸ்ட்டுல அதையே எப்படி சாப்பிடறது?’ என அலுத்துக் கொள்வோருக்கு வழி சொல்கிறார் சென்னை, அடையாறைச் சேர்ந்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி. இவர் விதம் விதமான ஜாம் மற்றும் சாஸ் தயாரிப்பதில் நிபுணி.
‘‘கிட்டத்தட்ட 32 வருஷங்களா உணவுப் பொருட்கள் தயாரிக்கிற பிசினஸ்ல இருக்கேன். மசாலா பொடி, இன்ஸ்டன்ட் மிக்ஸ், கஞ்சி மாவு, ஊறுகாய்கள், ஐஸ்கிரீம் வகைகள்னு எல்லாம் செய்வேன். அதுல ஜாமும், சாஸும் ரொம்ப ஸ்பெஷல்னு சொல்லலாம். வெளில மிக்சட் ஃப்ரூட் ஜாம்தான் அதிகம் கிடைக்கும். ஆனா நான் நெல்லிக்காய், அன்னாசி, ஆப்பிள், கிரீன் ஆப்பிள், திராட்சை, மாம்பழம், மிக்சட் ஃப்ரூட்னு விதம் விதமா செய்யறேன். செயற்கையான பொருள் எதுவுமே கிடையாது. தரமான பழங்களோட கூழை எடுத்துப் பண்றேன். நிறைய கடைகளுக்கு சப்ளை பண்றேன்’’ என்கிற லட்சுமி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘அகலமான, அடி கனமான அலுமினியப் பாத்திரம், மரக் கரண்டி, தேவையான பழங்கள், சர்க்கரை, எசென்ஸ் மற்றும் பிரிசர்வேட்டிவ் (விருப்பப்பட்டால்), தக்காளி, வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா, பூண்டு, உப்பு, காலி பாட்டில்கள். மொத்த முதலீடு ஆயிரம் முதல் ஆயிரத்தைநூறு ரூபாய்.’’
என்ன ஸ்பெஷல்?‘‘யாருக்கு என்ன பழம் பிடிக்குமோ முழுக்க அதை வச்சே ஜாம் பண்ணலாம். நெல்லிக்காய்ல வைட்டமின் சி அதிகம். நோய் எதிர்ப்பு சக்திக்கு அது ரொம்ப அவசியம். பழங்களை வச்சு பண்ற ஜாம் பிடிக்காதவங்களுக்கும் இந்த நெல்லிக்காய் ஜாம் நிச்சயம் பிடிக்கும். கிரீன் ஆப்பிள் ஜாம், திராட்சை ஜாமெல்லாம் அட்டகாசமான சுவையோட இருக்கும். கடைகள்ல விற்கறப்ப, வருஷக்கணக்கானாலும் கெட்டுப் போகாமலிருக்க செயற்கையான விஷயங்கள் நிறைய சேர்ப்பாங்க. ஆனா நான் அளவான பிரிசர்வேட்டிவ் போட்டுப் பண்றேன்.’’
ஒரு நாளைக்கு எத்தனை?விற்பனை வாய்ப்பு?‘‘50 பாட்டில் ஜாமும், 20 பாட்டில் சாஸும் பண்ணலாம். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வெரைட்டி பண்றது சுலபம். மொத்தமா கிளறி, ஆறினதும், ஸ்டெரிலைஸ் செய்த பாட்டில்கள்ல அடைச்சு, விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். 500 கிராம் அளவுள்ள பாட்டிலை 50 முதல் 80 ரூபாய் வரைக்கும் விற்கலாம். கடைகள், அக்கம் பக்கத்து வீடுகள்லயே வித்துடலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 500 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்