வீடே களை கட்டியிருந்தது. வடிவேலு வந்திருந்தான். அதே பளபளா மேக்கப்; கைகளில், கழுத்தில் தங்கம் என்று வழக்கம் போலத்தான் இருந்தான். ஆனால் கடந்த முறை வந்தபோது அவனுக்குள் இருந்த தயக்கம் இந்த முறை இல்லை.
உரிமையாக அடுக்களை வரையில் வந்து, ‘‘என்ன அத்தை... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?’’ என்றான். அம்மா சிரிப்பும் திகைப்புமாக அவனை வரவேற்றாள். ‘‘மத்தியானத்துக்கு காரக்கத்தரிக்காய் குழம்பும் உருளைக்கிழங்கு பொரியலும் பண்ணலாம்னு இருக்கேன். உங்களுக்கு வேணா வேற எதுவும் செய்யட்டுமா..?’’ என்றாள்.
‘‘நீங்க உங்க வழக்கப்படி செய்யுங்க... சாப்பாடா முக்கியம்? ஆனா, எலும்புக் குழம்பு, கறி பெரட்டல், தலைக்கறி வறுவல், ரத்தப் பொரியல்னு இருந்தால்ல சாப்பாடு நல்லாயிருக்கும். எங்கே சீதா..?’’ என்றான்.
என்ன சமையல் என்பதைவிட சீதாவைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவன் திட்டமாக இருந்தது. சீதாவுக்கும் அவனது உள்நோக்கம் புரிந்திருந்தது. அடுக்களை வரை வந்தவன், அதே உரிமையோடு உள் அறைக்கும் வந்தால் தனது நிலைமை சங்கடமாகிவிடும் என்பதை உணர்ந்தாள். அவன் அதைச் செய்வதற்குமுன் தான் கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தவள், அப்படியே வெளியேறி பின் வாசலுக்கு வந்தாள்.
‘‘அசைவம் சாப்பிடற ஆளுதான் நானும்... ஆனா, ரத்தப் பொரியல், தலைக்கறின்னு கர்ணகொடூரமா சாப்பிடுறதை நினைச்சா குமட்டிக்கிட்டு வருது...’’ என்றபடி கிணற்றடியில் வந்து உட்கார்ந்தாள் சீதா. பின்னாலேயே வந்தாள் விஜயா.
‘‘என்ன சீதா... படிக்கற வேலை எதுவும் இல்லையா... இங்கே வந்து உட்கார்ந்துட்டே?’’ என்றபடி அருகில் வந்து உட்கார்ந்த விஜயா, ஆறுதலாக சீதாவின் தோளைத் தொட்டாள்.
‘‘அக்கா... நீ என்னதான் சொன்னாலும் எனக்கு மனசு ஆறலை. உனக்கு முன்னாலே கல்யாணம் பண்ணிக்கறதைக் கூட நீ சொல்ற கணக்கில் எடுத்துக்குவேன். ஆனா, இப்படி ஒரு மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டறதை நினைச்சாத்தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. சாப்பாடு விஷயத்திலேயே இவ்வளவு வித்தியாசம் இருக்கு... வாழ்க்கையின் ருசி சாப்பாட்டில் இருந்துதானே ஆரம்பிக்குது... இன்னும் என்னென்ன விஷயங்கள் ஒத்துப் போகாம தவிக்கப் போறேனோ தெரியலை’’ என்று தோளில் சாய்ந்த சீதாவைப் பார்த்தபோது ஒருகணம் விஜயாவுக்கு நினைவலைகளில் ஈஸ்வரியின் முகம் வந்துபோனது. அவளும் இப்படித்தானே புலம்பிக் கொண்டிருக்கிறாள்...
‘‘சீதா... இதெல்லாம் சின்ன விஷயம். வடிவேலை மாதிரி சாப்பாட்டு மேல பிரியமா இருக்கறவங்களை வளைக்கறது ரொம்ப ஈஸி. வாய்க்கு ருசியா சமைச்சுக் கொடுத்தா நம்ம வழிக்கு வந்திடுவாங்க... அப்புறம் நீ சொல்ற பேச்சுக்கு எல்லாம் தலையாட்டற ஆளா அவரை மாத்திடலாம். அதோட கல்யாணம்ங்கறது, வெறுமனே ஒரு ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ற விஷயமில்லை. ரெண்டு குடும்பங்கள் ஒன்று சேரும் விஷயம். அதனால் நம்முடைய தனிப்பட்ட ஆசாபாசங்களைவிட குடும்பத்தின் சந்தோஷம்தான் முக்கியம்னு நினைக்கணும். வீட்டிலே பெரியவங்க பேசி எடுக்கும் முடிவுகளில் நிறைய அர்த்தங்கள் இருக்கும்...’’ என்றாள்.

சீதா கண்களில் வழிந்த நீரைத் துடைக்கக் கூட தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
‘‘இதிலே உனக்கு வேற என்ன சங்கடம் இருக்கு? என் கல்யாணம்தானே... அதையும் நான் அப்பாகிட்டே பேசிட்டேன். நல்ல ஜோசியராப் பார்த்து பரிகாரம் செய்யலாம்னு அப்பா சொல்லியிருக்காங்க. அதைச் செய்து முடிச்சதும் நானும் கல்யாணம் கட்டிக்கப் போறேன்... ஒருவேளை அது உன் கல்யாணத்துக்கு முன்னாடியேகூட நடந்திடலாம்... கவலைப்படாதே!’’ என்றாள்.
வீட்டுக்குள் கசகசவென்று சத்தம் கேட்க, இருவரும் எழுந்து உள்ளே வந்தார்கள். வடிவேலு வந்திருந்த தகவல் கேள்விப்பட்டு அப்பா கடையிலிருந்து அவசரமாக வந்திருந்தார். ‘‘சாப்பிட்டுட்டுத்தான் போகணும்’’ என அப்பா வடிவேலுவிடம் சொல்லிக் கொண்டிருக்க, ‘‘இல்லை... வேண்டாம்! காலையில லேட்டாத்தான் சாப்பிட்டேன். இன்னும் பசிக்கவே இல்லை’’ என்ற சம்பிரதாயமாக மறுத்துக் கொண்டிருந்தான் வடிவேலு.
கடைசியில் வடிவேலு, ‘‘இன்னொரு நாள் விருந்துக்கே வர்றேன்... இப்போ அப்பா குறிச்சுக் கொடுத்த நாளில் ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணிச் சொல்லுங்க...’’ என்று சொல்லிவிட்டுச் சென்றான். போகும்போது சீதாவை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
விஜயா அவசரம் அவசரமாக கிளம்பி பள்ளிக்கூடம் நோக்கி நடந்தாள். இன்றைக்கு வீட்டிலிருந்து கிளம்பியதே கொஞ்சம் லேட்! பெரும்பாலும் திங்கள்கிழமைகளில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. ஞாயிற்றுக்கிழமையின் சோம்பல் மறுநாளும் தொடர்ந்து, சீக்கிரம் படுக்கையிலிருந்து எழ விடாமல் செய்துவிடுகிறது.
என்னதான் லேட்டானாலும் கடலைப் பொட்டலத்தை அவள் மறந்ததில்லை. இன்றும் அப்படித்தான்! வேக நடை போட்டாலும் பின்னால் யாரோ வருவது போலத் தோன்ற... திரும்பிப் பார்த்தால் சுகுமார் பைக்கை தள்ளியபடி வந்துகொண்டிருந்தான்.
நின்று சிரித்த விஜயா, ‘‘என்னங்க... அதான் சம்பந்தம் பேசியாச்சே... இன்னும் என்ன தயக்கம்?’’ என்றாள்.
அசட்டுச் சிரிப்போடு நெருங்கி வந்த சுகுமார், ‘‘அதெல்லாம் இல்லைங்க... வண்டி பஞ்ச்சர். நானே ஓட்டணும்னு நினைச்சாலும் முடியாது. சொல்லப் போனா நீங்க கூப்பிட்ட பிறகுதான் உங்களை நான் கவனிக்கவே செய்தேன். அப்புறம்... நேத்து மாமா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. நாள் குறிக்கச் சொல்லி சொன்னாங்க. உங்களுக்கு அலையன்ஸ் செட் ஆகிடுச்சான்னு கேட்டேன். அவர் பதில் எதுவும் சொல்லலை... என்னங்க விஷயம்?’’ என்றான்.
விஜயா பதில் ஏதும் சொல்லாமல் நடந்தாள்.
‘‘ஸாரி... பிரச்னைன்னா சொல்ல வேண்டாம். நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என்னால எதுவும் உதவி செய்ய முடியுமான்னு பார்த்தேன்...’’ என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்த விஜயா, ‘‘பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லை... அதுவும் சீக்கிரம் முடிஞ்சுடும். அந்த நல்ல விஷயத்தையும் அப்பாவே வந்து சொல்வாரு’’ என்றாள்.
கொஞ்ச நேரம் இரண்டு பேரும் எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தார்கள். அந்த மௌனத்தை உடைக்க விரும்பிய விஜயா, ‘‘உங்க விஷயம் என்ன ஆச்சு? நாள் குறிச்சாச்சா... மாப்பிள்ளைன்னு வந்து பார்த்துட்டுப் போயிட்டு முடிவு பண்ணாம இருந்தால் அக்கம்பக்கத்துல பதில் சொல்லமுடியாது. அதனால்தான் அப்பா வந்து நாள் பார்க்கச் சொல்லியிருப்பாங்க. நீங்க நல்ல ஜோசியரா பார்த்துச் சொல்லுங்க... எனக்கு ஸ்கூலுக்கு இப்பவே கொஞ்சம் லேட் ஆகிருச்சு. நான் வர்றேன்...’’ என்றபடி வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
‘‘சார்! உங்ககிட்டே பழைய ஃபுட் பால், வாலி பால், பேஸ்கட் பால் ஏதாவது இருக்குமா...’’ என்றபடி தயக்கமாக அறைக்குள் நுழைந்த ஈஸ்வரியை நிமிர்ந்து பார்த்தார் கலைச்செல்வன்.
‘‘வாங்க மேடம்... பழைய பந்துகளை வெச்சு என்ன பண்ணப் போறீங்க... புதுசையே எடுத்துக்கிட்டுப் போங்க...’’ என்றார்.

‘‘வேணாம் சார்! பசங்களுக்கு கோளம்னா எப்படி இருக்கும்னு காட்டணும்... அதிலே பேப்பர் ஒட்டி உலக உருண்டை செய்யலாம்னு ஒரு ஐடியா... அதுக்குத்தான் பழசா இருந்தா நல்லாயிருக்கும்னு பார்த்தேன். க்ளோப் வாங்கித் தாங்கனு நானும் ஹெட் மாஸ்டர்கிட்டே பல தடவை கேட்டுட்டேன்... கிடைக்க மாட்டேங்குது’’ என்றாள்.
கலைச்செல்வன் பந்துகளைப் போட்டு வைத்திருந்த பெரிய பெட்டியில் தேடிக் கொண்டிருந்தபோது, ‘‘அப்புறம் சார்... வீட்டுல அம்மா, தங்கை எல்லாம் எப்படி இருக்காங்க... தங்கைக்கு வரன் அமைஞ்சுதா..?’’ என்றாள் ஈஸ்வரி.
‘‘எல்லாம் நல்லாயிருக்காங்க மேடம்... அவளுக்குத்தான் பார்த்துக்கிட்டே இருக்கோம்... ஒண்ணும் பொருத்தமா செட் ஆகமாட்டேங்குது. வர்றவன் நல்லவனா இருக்கணுமேன்னு கவலையா இருக்கு. அதான் தரகர்கள்கிட்ட கூட சொல்லாம, சொந்தக்காரங்ககிட்ட சொல்லியே நிறைய விசாரிச்சுக்கிட்டு இருக்கோம்...’’ என்றார்.
‘‘அது ரொம்ப முக்கியம் சார்... பல வீடுகள்ல சுமை குறைஞ்சாப் போதும்னு தள்ளி விட்டுடறாங்க... அதுக்குப் பிறகு காலத்துக்கும் பொம்பளைப் பிள்ளைக அங்க போய் கண்ணைக் கசக்கிக்கிட்டு கிடக்கும். தப்பா போட்டுட்டோம்னு நினைச்சு அழிக்கறதுக்கு, போர்டுல எழுதின கணக்கு இல்லை சார் கல்யாணம்! பொம்பளைங்க பாடு ரொம்பக் கஷ்டம்...’’ என்று சொல்லும்போதே ஈஸ்வரிக்கு குரல் கம்மியது. சமாளித்துக் கொண்டவள், ‘‘இந்த பேஸ்கட் பால் நல்லாயிருக்கு சார்...’’ என்று பெட்டியில் காட்டினாள்.
கலைச்செல்வன் அந்தப் பந்தை எடுத்து அவள் கையில் கொடுத்தபோது பிரேயருக்கான முதல் மணி அடித்தது.
‘‘சார்... பிரேயருக்கு டைம் ஆகிடுச்சு. நான் அப்புறமா பசங்களை அனுப்பி இதை வாங்கிக்கறேன்... தேங்க்ஸ் சார்!’’ என்று சொல்லிவிட்டு கலைச்செல்வன் அறையைவிட்டு வெளியே வந்தபோது, பியூன் அரக்கப் பரக்க ஓடிவந்தார்.
‘‘மேடம்... உங்களைத்தான் எல்லா இடத்துலயும் தேடிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு போன்... ஏதோ முக்கியமான தகவல்னு சொன்னாங்க... ஹெட் மாஸ்டர் ஐயா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு...’’ என்றார்.
குழப்பமும் பதற்றமுமாக ஹெட் மாஸ்டர் அறைக்கு ஓடினாள் ஈஸ்வரி. கலைச்செல்வனும் பின்னாலேயே போனார். போனைக் கையில் எடுத்த ஈஸ்வரி, ‘‘என்ன... எங்கே... எப்போ..? இதோ வந்துட்டேன்...’’ என்றபடி போனை வைத்துவிட்டு ஹெட் மாஸ்டரிடம், ‘‘சார்... எங்க வீட்டுக்காரர் போன பஸ்ஸும் ஒரு லாரியும் மோதிடுச்சாம்... அவருக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்காங்களாம்... நான் புறப்படுறேன் சார்...!’’ என்று சொல்லிவிட்டு அப்படியே ஓடினாள்.
அப்போதுதான் பள்ளிக்குள் நுழைந்த விஜயாவுக்கு ஈஸ்வரியின் பதற்றத்தைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ஒரு கணம் நின்ற ஈஸ்வரி, ‘‘அவரு... ஆக்ஸிடென்ட்...’’ என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடினாள். விஜயா என்ன ஏதென்றுகூட கேட்கத் தோன்றாமல் அப்படியே நின்றாள்.
(தொடரும்)
மெட்டி ஒலி திருமுருகன்
படங்கள்: புதூர் சரவணன்