‘இது தினமும் நடப்பதுதான்.அம்மாவின் புலன்விசாரணை கண்வழியே வழியும்காலையில் போட்ட பின்னல் கலையாமல் உள்ளதாஅயர்ன் செய்து போட்ட தாவணி கசங்கியுள்ளதாபுத்தகப்பையில் புதிதாக ஏதேனும் சேர்ந்துள்ளதாஅம்மாவின் தேடல்கள் தொடரும்...மாற்றம் அடைந்த மகளின்மனதுக்குள் அவளால் நுழைய முடிந்ததில்லை என்றும்’ இப்படித்தான் வெளிப்படுகிறார் சுபமுகி. தெளிவின்மையும் குழப்பமும் மிகுந்த பருவத்தின் நெருக்கடிகளையும், தனிமையின் ஏக்கங்களையும் எழுத்தின் வழி வெளிப்படுத்தும் சுபமுகி, நவீன இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளான சுப்ரபாரதிமணியன் - சுகந்தி சுப்பிரமணியன் தம்பதியின் இளைய மகள். கவிதையில் தொடங்கி, சிறுகதை, நாவல், நாடகம், குறும்படம், மொழிபெயர்ப்பு என்று விரிகிறது சுபமுகியின் தளம். எழுத்தோடு நிற்காமல், ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரில் சிறுமிகளின் வாழ்க்கையைப் பறிக்கும் கொடூரத்துக்கு எதிராகக் களமாடுகிறார். குழந்தைகளுக்கான கதைசொல்லி நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்.

‘‘அனுபவம் மற்றும் மன எழுச்சியின் வெளிப்பாட்டுக்குத் தான் நான் கவிதை என்று பெயர் சூட்டுகிறேன். நவீன பெண்ணியப் படைப்பாளி களின் அதிர்வில் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
நூற்றாண்டுகளாக அடங்கிக் கிடந்த பெண், தனது உடல்சார்ந்த தனிமொழியை உருவாக்கி, அதையே ஆயுதமாக ஏந்தி அந்த அழுத்தத்தை உடைக்க முயல்கிறாள். அந்த மொழி ஏற்படுத்தும் வீச்சு உலகெங்கும் பேரெழுச்சியை உருவாக்கியிருக்கிறது. என் எழுத்தும் அதில் ஒரு அலையாக அடங்கும்...’’ என்று தன் படைப்புலகை அறிமுகம் செய்துகொள்ளும் சுபமுகி, ஈரோடு கொங்கு வேளாளர் கல்லூரியில் எம்.ஃபில் ஆங்கில இலக்கியம் படிக்கிறார்.
‘‘நான் அம்மாவின் கவிதைகளை வாசித்து வளர்ந்தவ. அவங்கதான் என் ஆதர்சம். ‘புதையுண்ட வாழ்க்கை’, ‘மீண்டெழுதலின் ரகசியம்’ போன்ற அவங்களோட கவிதைத் தொகுப்புகள் தமிழுக்கு பெண்ணுலகத்தோட புறப்பக்கத்தை அறிமுகப்படுத்தியவை. அம்மா இப்போ இல்லை.
அவங்க இருந்த காலத்தில வீடே இலக்கியக் கூட்டம் மாதிரிதான் இருக்கும். வீடு முழுக்க புத்தகங்கள்... அதனால சின்ன வயசுலயே வாசிக்கிற வாய்ப்பு. சுந்தர ராமசாமி, சுஜாதா, ஆண்டாள் பிரியதர்ஷினி, வாஸந்தி என தேடித்தேடி வாசிச்சேன். லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி படைப்புகளை வாசிச்சப்போ பெரும் குழப்பம் உருவாச்சு. குறிப்பா குட்டி ரேவதியின் கவிதைகள்! சரி எது, தப்பு எதுன்னு தெரியாம தவிச்சேன். ஆங்கில வழியில் உலக பெண்ணிய இலக்கியங்களை வாசிச்சபோதுதான், தமிழ்ப் பெண் படைப்புச் சூழல்ல உள்ள உக்கிரத்தை தெளிவா உள்வாங்க முடிஞ்சுது...’’ என்கிறார் சுபமுகி.
சுபமுகி ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுகிறார்.
‘‘கீட்ஸ், ராபர்ட் ப்ராஸ்ட், விக்ரம் சேத், ராமானுஜம், ஜான் மில்டன் படைப்புகள்ல நமக்கு அறிமுகமில்லாத வேறு உலகத்தை தரிசிக்கலாம். அந்த படைப்புகளின் பாதிப்புதான் என்னையும் எழுதத் தூண்டுச்சு. தமிழைவிட ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவது மொழிச் சவால்’’ என்கிறார் சுபமுகி.
பள்ளியில் படித்தபோது, நிலத்தடி நீர் பற்றி ஆய்வுசெய்து அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் ‘குழந்தை விஞ்ஞானி’ விருது வாங்கியிருக்கும் சுபமுகி, திருப்பூரின் சுற்றுச்சூழல் பற்றியும், குழந்தைத் தொழிலாளர்கள் நிலை பற்றியும் கவலையோடு பேசுகிறார்.
‘‘நொய்யல் நதி பத்தி அப்பா நிறைய கதை சொல்வார். இன்னைக்கு நதிக்குரிய எந்த அடையாளமும் நொய்யல்ல இல்லை. நகரக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் எல்லாம் அதிலதான் கலக்குது. சாக்கடை கால்வாய் ஆயிடுச்சு. கண் முன்னாடி ஒரு நதி செத்துப்போறதை பாத்துக்கிட்டு அமைதியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ‘சுமங்கலித் திட்டம்’ங்கிற பேர்ல தமிழ்நாடு முழுதும் ஆசைவார்த்தை காட்டி டீன்ஏஜ்ல இருக்கிற சிறுமிகளை வேலைக்கு அழைச்சுக்கிட்டு வர்றாங்க. கடினமான வேலைகள், அடக்குமுறை, பாலியல் வன்முறைன்னு அவங்கமேல உச்சபட்ச வன்முறை திணிக்கப்படுது. ஆயிரக்கணக்கான பெண்கள் அந்த வலையில சிக்கித் தவிக்கிறாங்க. இந்த திட்டத்தை கைவிடக் கோரி திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பா போராட்டங்கள், பிரசாரங்கள் நடத்துறோம்...’’ என்கிற சுபமுகி, அந்தக் கொடுமைகளை விவரிக்கும் ‘சுமங்கலி’ என்ற குறும்படத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தும் இருக்கிறார்.
‘‘தாத்தா, பாட்டி மடியில உக்காந்து கதை கேக்கிற வாய்ப்பு இன்னைக்குள்ள குழந்தைகளுக்குக் கிடைக்கல. பாட்டிகள் முதியோர் இல்லத்தில இருக்காங்க. குழந்தைகள் டிவி முன்னாடி உலகத்தைக் கத்துக்கிறாங்க. கதை சொல்ற மரபு அழிஞ்சுக்கிட்டே வருது. அதை மீட்டெடுக்கவும், குழந்தைகள் மத்தியில கதை சொல்ற பழக்கத்தை உருவாக்கவும் ‘கதைசொல்லி’ நிகழ்ச்சியை மாதமொருமுறை நடத்துறோம்...’’ என்கிற சுபமுகி, மொழிபெயர்ப்பு வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
‘‘குழந்தைகளுக்கான இலக்கியம், பெண்ணியக் குரல்கள் தோய்ந்த படைப்புகள்தான் என் எதிர்கால லட்சியம்’’ என்று கூறும் சுபமுகி, ‘ரசாயனப் பொடிக்கோலம்’ கவிதைத் தொகுப்பின் மூலம் வெகுவாக கவனிக்கப்பட்டிருக்கிறார்.
- வெ.நீலகண்டன்
படங்கள்:செந்தில்குமார்