தன்னுடைய துயரத்தின் ரணங்களை, பிறருக்குச் செய்யும் அர்த்தமுள்ள நன்மைகளால் ஆற்றிக்கொள்கிறார் சாந்தி ரங்கநாதன். அவரின் நினைவின் அலைகளில், செயல்களில் அழகான ஓவியமாகி இருக்கிறார் கணவர் ரங்கநாதன். குடியின் கோர தாண்டவம் வாழ்வைச் சூறையாடிய பிறகும், சோர்ந்து போகாத தன்னம்பிக்கையோடு பலரின் வாழ்வைக் குடியிலிருந்து மீட்டுத் தரும் தேவதையாகக் காட்சியளிக்கிறார் சாந்தி. குடியால் சீரழிந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வழிகாட்டும் தரமான டி.டி.கே. ரங்கநாதன் மருத்துவமனையை நடத்துகிற இவரின் அர்ப்பணிப்பும் சமூக அக்கறையும் நம் நன்றிக்குரியது. தன்னுடைய கஷ்டங்களை சமூகத்திற்கு வரமாக்கியதுதான் சாந்தியின் சாதனை.
‘‘படித்த குடும்பமே தவிர, வசதியான குடும்பம்னு சொல்ல முடியாது. அப்பா சட்டம் படித்துவிட்டு ‘லா ஜர்னல்’ நடத்திட்டிருந்தார். சமுதாயத்துக்குப் பயனுள்ள வேலை செய்த நிறைவுதான் பத்திரிகைத் தொழிலில் சாத்தியம். அம்மா இல்லத்தரசி. அந்தக் காலத்திலேயே காலேஜ் போய் படிச்சிருக்காங்க. ஆனாலும் வெளியுலகம் தெரியாதவர். கணவர், குழந்தைகளைப் பராமரிப்பதில் நிறைவு கண்டவர். எங்களுடைய வளர்ப்பும் அப்படியே இருந்தது. என்னையும் வீட்ல காலேஜ் அனுப்பி படிக்க வச்சாங்க.
ஏட்டுப் படிப்பைத் தவிர, வேறு எதையும் கற்றுக் கொள்ளவில்லை. சராசரி பெண்கள் எப்படி இருப்பாங்களோ அப்படியே வளர்ந்தேன். திருமணம் முடித்து, குழந்தைகளைப் பெற்று, கணவரைப் பராமரித்து சந்தோஷமா வாழணும்ங்கிறதுதான் என் ஆசையா இருந்தது. மத்தபடி, ‘கணவரா வரப்போறவர் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்’னு ஆசையோ, எதிர்பார்ப்போ இருந்ததில்லை. சின்ன வயசுல இருந்து கடவுள் பக்தி அதிகம். தினமும் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் நன்றி சொல்லுவேன். இப்போதுவரைக்கும் அந்த நம்பிக்கைதான் என்னை வழி நடத்துகிறது.
எனக்குத் திருமணம் செய்ய முடிவானது. நாங்கள் சாதாரண குடும்பமாக இருந்தாலும், பாரம்பரிய தொழில் பெருமை உள்ள டி.டி.கே குழுமத்தின் வீட்டில் மருமகளாக ஏற்றுக்கொண்டனர். ‘பெண்ணெடுக்கிற இடம் தங்களோட வசதிக்கு நிகரா இருக்கணும்னு நினைக்காம, எளிய குடும்பத்தில் நல்ல குணத்துடன் பெண் இருந்தால் போதும்’ என்கிற பக்குவமே என் மாமியாரின் பலம். டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரின் பேரன் ரங்கநாதனை திருமணம் செய்யப்போகிறோம் என்கிற விழிப்புணர்வோ, கோடிகளில் வர்த்தகம் செய்கிற குடும்பத்தில் வாழ்க்கைப்படுகிறேன் என்கிற பெருமிதமோ கொஞ்சமும் இல்லை. அப்பா கைநீட்டுகிற நபருக்கு கழுத்தை நீட்டத் தயாராக இருந்தேன். வீடு மட்டுமே உலகமா இருக்கிற பெண்களுக்கு, பெற்றோர் எடுக்கிற முடிவு சரியாகவே இருக்கும்.
என்னை மருமகளாகப் பார்க்காமல், சொந்த மகளா பார்த்தார் மாமியார் பத்மா நரசிம்மன். திருமணத்திற்குப் பிறகு எனக்குப் புதிய புதிய வாசல்கள் திறந்தன. ஆன்மிக ஈடுபாடு அதிகமுள்ள மாமியார், முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் வாழ்க்கையை அணுக சொல்லிக் கொடுத்தார். பெண்கள் தங்களுடைய திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை உடையவர் அவர். அவருக்குக் கிடைக்காத வாய்ப்புகளையும் எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். ஆளுமைத் திறனோடு நான் இருப்பதாக என்னைப் பாராட்டினால், அந்தப் பெருமை மாமியாரையே சேரும். என் வழிகாட்டியாக, குருவாக, துணையாக அவர் இருந்தார்.

என்னைச் சுற்றி இருந்த எல்லாமே எனக்கு அதிகமானதாகவே பட்டது. அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்வது எப்படின்னு தெரியலை. பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் பெரிய வித்தியாசம். கணவர் ரங்கநாதன் திறமையும் ஆற்றலும் உடையவர். அந்தக் காலத்திலேயே வெளிநாடு போய் படித்தவர். அவருக்கு ‘சோஷியல் டிரிங்கிங்’ பழக்கம் இருந்தது. பிசினஸ் நிமித்தமாக நண்பர்கள் கூடும் இடத்தில் குடிப்பார்கள். அவர் இருந்த சூழலில் அது தவறான விஷயமாக இல்லாமல், தேவையான விஷயமாக பார்க்கப்பட்டது. என்னுடைய வளர்ப்பில், குடித்திருக்கிற ஒருவரிடம் ஒரு வார்த்தையும் பேசியது இல்லை. கணவருக்குக் குடிப்பழக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருந்தது.
எல்லா சூழலையும் எதிர்கொள்ள நான் பழக வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார் மாமியார். அது பாகிஸ்தானிடமிருந்து வங்க தேசத்திற்கு விடுதலை வாங்கித் தர போர் நடந்த நேரம். யாரோ ஒருவர் பத்திரிகையில் விளம்பரம் தந்திருந்தார். ‘துணிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பயன்பாட்டுப் பொருள்கள் எதுவாக இருந்தாலும் ராணுவ வீரர்களுக்குக் கொடுத்து உதவலாம்’ என்கிற விளம்பரத்தைப் பார்த்ததும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதுதான் எனக்குள் விழுந்த முதல் விதை. நண்பர்கள், உறவினர்களிடம் பேசி நானே சோப்பு, சீப்பிலிருந்து உடைகள், உணவுப் பொருட்கள் என அனைத்தையும் சேகரித்துக் கொண்டுபோய் ஒப்படைத்தேன். அதுதான் என் முதல் தன்முனைப்பு முயற்சி. இதைக் கவனித்த மாமியார், என்னை எம்.ஏ. சோஷியல் ஒர்க் படிக்க அனுப்பினார்.
தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ‘தன்னார்வ ரத்த தானம்’ என்கிற ஒன்று இல்லை. காசுக்கு ரத்தத்தை வழங்குவார்கள். ரத்த தானம் செய்தால் செய்பவருக்கும் நன்மை, பெறுபவருக்கும் நன்மை என்பதை எடுத்துச் சொல்லி, பரிசோதனை செய்யப்பட்ட ரத்தத்தைச் சேகரிக்கும் ரத்த வங்கியை நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கினேன். அவசரத்திற்கு ரத்தம் கிடைக்காமல் அல்லாடுகிற அனுபவம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும். அதனால் ‘ப்ளட் பேங்க்’ முயற்சிக்கு நல்ல ஆதரவு இருந்தது. அறிமுகமானவர்களிடமும் பேசத் தயங்கியபடி வளர்ந்த நான், வெளியே சென்று கூட்டத்தில் எல்லாம் பேச ஆரம்பித்தேன். ‘மெட்ராஸ் வாலன்டரி ப்ளட் பேங்க்’ மூலம் மனிதாபிமானத்தை வளர்க்க முடிந்தது.
இதற்கிடையே கணவர் நாளுக்கு நாள் குடிப்பதன் அளவு அதிகமானது. எப்போதாவது குடித்த நிலை மாறி, எப்போதும் குடிக்கத் தொடங்கினார்.
எனக்கு குழந்தை பெற்றுக் கொள்கிற பாக்கியமும் இல்லாமல் போனது. இந்த இரண்டுமே என்னை மனதளவில் பாதித்தது. மாமியார்தான் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்தார். ‘குழந்தை இல்லை என்பதால் வாழ்க்கை முடங்கிவிடாது’ என்று தேற்றினார். கணவரின் குடிப்பழக்கத்தை சரிசெய்ய முயற்சி எடுத்தார்.
குடிப்பழக்கம் அதிகமாகி, நாளடைவில் கணவரே எனக்குக் குழந்தையானார். தனக்காக இல்லாமல் போனாலும் எனக்காகவேனும் குடிப்பதை நிறுத்த முயற்சி செய்தார். ஒரு வாரம்கூட அவருடைய உறுதி நிலைக்காது. குடிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலை உருவானது. உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 28 வயதில் சர்க்கரை நோய்க்கு ஆளானார்.
குடிப்பழக்கம் தொடர்ந்ததால் எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை. அவரைக் குணப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தில், ‘குடியை நிறுத்த எங்கு சிகிச்சை தர்றாங்க’ எனத் தேடிப் பார்த்தேன். தமிழ்நாட்டில் ஒரு இடமும் இல்லை. இந்தியாவிலும் எங்கும் இல்லை. ஆசியக் கண்டத்திலேயே குடிப்பழக்கத்திற்கு சிகிச்சை அளிக்கிற சிறப்பு மருத்துவமனைகள் எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருப்பதை அறிந்து அங்கு அழைத்துப் போக முயற்சி எடுத்தேன். ‘குடி என்பது வெறும் பழக்கம் இல்லை, அது ஒரு நோய்’ என்று அங்குதான் எனக்குப் புரிந்தது. குடியை நிறுத்த முடியாதவர்களை ‘குடி நோயாளி’ என்றே டாக்டர்கள் அழைத்தனர்.
‘குடிக்கிறவர்கள் மீது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துவது தவறு. நோயாளிகள் மீது காட்டுகிற அக்கறையையும் பரிவையும் குடிப்பழக்கம் உள்ளவர்களிடமும் காட்ட வேண்டும்’ என்று புரிந்தது. அமெரிக்க மருத்துவமனையில் எனக்கும் சிறப்பு வகுப்புகள் எடுத்தனர். குடிப்பவர்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது. சிகிச்சை முடிந்த பிறகு எக்காரணம் கொண்டும் அவர்கள் மீண்டும் குடிக்கக்கூடாது. தொடர்ந்த சிகிச்சையினால், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதிய மனிதரானார் கணவர். வசதி இருந்ததால் அமெரிக்கா வந்து சிகிச்சை பெற முடிந்தது. அவதிப்படுகிற அடித்தட்டு மக்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லையே என்று உறுத்த ஆரம்பித்தது.
சென்னை வந்தபிறகு கணவரால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திரும்பவும் குடிக்க ஆரம்பித்தார். சில மாதங்களிலேயே உடல்நிலை மோசமானது. மீண்டும் அமெரிக்கா சென்றும், சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். இனி காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். நேசத்திற்குரிய கணவரை மரணம் துரத்திக் கொண்டு வருவதை அருகிலிருந்து பார்ப்பது மிகவும் கொடுமையான துயரம்.
ஒவ்வொரு மனிதனும் அஞ்சுவது மரணத்துக்குத்தான். ஆனால், வாழ்நாள் எண்ணப்படுகிறது என்று தெரிந்த பிறகும் கணவரால் குடியை நிறுத்த முடியவில்லை. எந்த அளவு அந்த நோய் அவரைப் பாதித்திருந்தது என்பதை பக்கத்தில் இருந்து தினமும் பார்த்திருக்கிறேன். நான் பார்க்க... பார்க்க... இறந்தே போனார் என் கணவர். அப்போது எனக்கு 30 வயது.
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்
த.செ.ஞானவேல்