எட்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது! டெல்லி தியான்சந்த் ஸ்டேடியத்தில் நடந்த தகுதிச் சுற்று பைனலில் பிரான்ஸ் அணியை போட்டுத் தள்ளிய பிறகுதான் நமக்கு உயிர் வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா பரிதாபமாக வெளியேறியபோது அணியின் எதிர்காலம் ஹாக்கி மட்டையின் தலைகீழ் பிம்பமாய் மாறிப்போனது. லண்டன் ஒலிம்பிக் வாய்ப்பும் கேள்விக்குறியாகி நிற்க, தகுதிச் சுற்றில் மல்லுக்கட்ட வேண்டிய கட்டாயம். ‘செய்... அல்லது செத்து மடி’ என்று கட்டளை தெளிவாக இருக்க, கோல் கீப்பர் பரத் செட்ரி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அடுக்கடுக்காய் வெற்றிகளை அள்ளி லண்டன் பயணத்தை உறுதி செய்தது.
கோஷ்டி மோதலால் நிர்வாகம் இரண்டுபட்டு நின்றாலும், வீரர்கள் ஒன்றுபட்டு விளையாடி மானம் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, நம்பிக்கை நட்சத்திரம் பெனால்டி கார்னர் ஹீரோ சந்தீப் சிங்கின் அசத்தலான ஆட்டம் ரசிகர்களை கொள்ளை கொண்டது. ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், பந்தை துல்லியமாகத் தடுத்து அப்படியே தரையோடு தரையாய் தேய்த்து இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் (145 கி.மீ. வேகம்!) கோலாக மாற்றும் மந்திரம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஆட்டத்துக்கு ஆட்டம் கோல் மழை பொழிந்த சந்தீப், பைனலில் ஹாட்ரிக்குடன் சேர்த்து 5 கோல் போட்டபோது இந்திய ஹாக்கி பீனிக்ஸ் பறவையாய் சாம்பலில் இருந்து சிலிர்த்து எழுந்து சிறகடித்தது. இந்த 26 வயது அரியானா ‘சிங்’கம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்பதே ரசிகர்களுக்கு புதுத் தகவலாக இருக்கும்! கிரிக்கெட் என்றால் நேற்று வந்த பசங்க கூட விளம்பர மாடலாக ஜொலிக்கலாம்! பாவப்பட்ட ஹாக்கி வீரர் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
கராச்சியில் ஜூனியர் ஆசியக் கோப்பையை (2004) இந்தியா வென்ற போது தான் ஸ்பாட் லைட் இவர் மீது பொழிய ஆரம்பித்தது. அந்த தொடரில் சந்தீப்பின் கோல் கணக்கு 16 மட்டுமே! 2006ல் ரயிலில் பயணித்தபோது, தவறுதலாக வெடித்த ஓர் துப்பாக்கிக் குண்டு சந்தீப்பின் வயிற்றைப் பதம் பார்த்தது. மீண்டும் களத்தில் கால் வைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், மன உறுதியுடன் போராடி மீண்டு வந்து சாதித்திருக்கிறார். அரியானா அரசு இவருக்கு டிஎஸ்பி அந்தஸ்து வழங்கி அழகு பார்த்தது. ‘‘லட்சங்கள் குவிந்தாலும் ஒலிம்பிக் பதக்கமே லட்சியம்’’ என்கிற இந்த கோல் ராஜா, லண்டனிலும் கோலோச்சுவார் என எதிர்பார்க்கலாம்.
அணியின் எழுச்சிக்கு இன்னுமோர் காரணம் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ். ஆஸ்திரேலியரான இவர் பொறுப்பேற்றபோது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. ‘ஆஸ்திரேலிய வீரர்களைப் போல கடைசி வரை ஆக்ரோஷமாக ஆடுங்கள். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்’ என்பதுதான் இந்திய வீரர்களுக்கு நாப்ஸ் கற்றுக் கொடுத்த நாக் அவுட் மந்திரம். வீரர்களின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவர்களை சரியான இடத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு 9 நிமிடத்துக்கும் ஒரு மாற்று வீரரைக் களமிறக்கும் இவரது முடிவால், வீரர்கள் அதிக சோர்வடையாமல் உற்சாகமாய் விளையாட முடிகிறது. சந்தீப் சிங் தன்னம்பிக்கையுடன் விளையாடுவதிலும் இவரது பங்கு மகத்தானது.
இதே வேகத்தோடு லண்டனிலும் இந்திய அணி வெற்றிக் கொடி கட்ட வாழ்த்துவோம்.
பா.சங்கர்