ப்ரியாமணியின் பெயரை ரிப்பேராக்குவது போல இப்படி கோடம்பாக்கத்தில் உலா வரும் செய்திகளில் எந்த அளவு உண்மை? தெரிந்துகொள்ள ப்ரியாமணிக்கு ரிங்கினோம்... ‘‘உங்களைப் பற்றி தப்புத் தப்பா செய்திகள் வந்துக்கிட்டிருக்கே... ஒரு பத்து நிமிஷம் பேசமுடியுமா?’’ என நாம் கேட்ட நொடியிலேயே வேகம் கூடியது ப்ரியாமணியின் குரலில்.
‘‘ஏங்க... சென்னையில என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாதுங்க. நான் இப்போ ஷூட்டிங்ல இருக்கேன். என்னப் பத்தி அப்படி என்ன நியூஸ் வந்துச்சு?’’ இது ப்ரியாமணி.
‘‘செலிபிரிட்டி கிரிக்கெட் ஃபைனலில் சென்னை டீம் வென்றபிறகு சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த பார்ட்டியில் நீங்கள் கலந்துகொண்டதாகவும், அப்போது அதிகமாக மது அருந்தி நிதானம் தவறி இருந்த உங்களை நான்கு இளைஞர்கள் தூக்கிச்சென்று உதவியதாகவும் செய்தி?’’
‘‘அந்த நியூஸ் எழுதின ஆளோட போன் நம்பரை மட்டும் எனக்குக் கொடுங்க. ரெண்டுல ஒண்ணு பார்த்துடறேன். என்ன... சும்மா விளையாட்டுன்னு நினைச்சு இப்படியெல்லாம் செய்யறாங்களா? என்னைப் பத்தி எழுதறத விட்டா அவங்களுக்கு வேற வேலை இல்லையா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்க?
நடிகைன்னா என்ன வேணா எழுதிடலாமா?’’ என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவரை பிரேக் போட்டு, ‘‘அப்போ எதுவுமே நடக்கலையா?’’ என்றதுதான் தாமதம்... கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதுபோல கொப்பளிக்கத் தொடங்கினார்.
‘‘ஐதராபாத்ல ஃபைனல்ஸ் மேட்ச் முடிஞ்ச மறுநாளே நான் கொச்சிக்கு வந்துட்டேன். என்னோட சிஸ்டர் ஃபேமிலி இங்க இருக்கு. அவங்களோடதான் நான் இருந்தேன். உண்மை இதுதான்! நான் சென்னைக்கு வரவும் இல்லை. எந்த பார்ட்டியிலும் கலந்துக்கவும் இல்லை’’ என்றவர் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்தார்... ‘‘என்னைப் பத்தி தப்பா எழுதின ஆளோட போன் நம்பரை தயவுசெஞ்சு கொடுங்க. நான் பேச வேண்டிய விதத்தில பேசிக்கிறேன். என்ன...
ப்ரியாமணின்னா ரொம்ப ஈஸியா போச்சா உங்களுக்கு?’’‘‘கொச்சி நட்சத்திர ஓட்டலில் ஒரு பார்ட்டியில் இந்தி நடிகர் சச்சின் ஜோஷி உங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உங்களைக் காப்பாற்றியதாகவும், இதுபற்றி ட்விட்டரில் நீங்கள் கமென்ட் போட்டு, பிறகு டெலிட் செய்ததாகவும் நியூஸ் வந்திச்சே?’’
‘‘அப்படி ஒரு சம்பவமே நடக்கலை. என்னைப் பற்றி தப்பா நானே எழுதிட்டு, அப்புறம் அதை டெலிட் செய்ய நான் என்ன பைத்தியமா? ட்விட்டரில் அப்படி நான் எதையுமே எழுதலை. லூசுங்கதான் அப்படிச் செய்யும். ப்ளீஸ்... இதுபற்றி இனிமே எதுவுமே கேட்காதீங்க. திரும்பத் திரும்ப அதுபற்றி பேச விரும்பல!’’
‘‘உங்களுக்கு வேண்டாதவங்க யாராவது இப்படி கிளப்பிவிடுறாங்களா?’’‘‘எனக்குத் தெரியலீங்க. இதுபற்றி ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை!’’ என்று உஷ்ணமாகச் சொன்னவரை டிராக் மாற்றினோம்.
‘‘தெலுங்கில் சம்பளம் அதிகமென்பதால் உங்கள் கவனமெல்லாம் அங்குதான் இருக்காமே. அதனால்தான் தமிழில் பட வாய்ப்பு களை நிராகரிக்கறீங்களாமே?’’‘‘தமிழில் நிறைய படங்களை நடிக்க வேண்டாம் என்று மறுத்தது உண்மை தான். அதற்குக் காரணம் கதைதான். எனக்குப் பிடிக்காத கதை என்றால், எந்த மொழிப் படமாக இருந்தாலும் அதில் நடிக்கமாட்டேன். இப்போது சில தமிழ்ப் படங்களுக்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் எதுவும் முடிவாகவில்லை. என் மார்க்கெட்டுக்குத் தகுந்த நியாயமான சம்பளத்தையே கேட்கிறேன்.
சம்பளத்திற்காக யாரிடமும் கறாராக நடந்துகொண்டது இல்லை. அதேமாதிரி தெலுங்கு படங்களில் மட்டுமே நான் ரொம்ப கிளாமரா நடிப்பதா சொல்வதையும் ஏற்கமுடியாது. ‘மலைக்கோட்டை’, ‘ஆறுமுகம்’, ‘நினைத்தாலே இனிக்கும்’னு தமிழ்ப் படங்களில்கூடத்தான் கிளாமர் ரோலில் நடிச்சிருக்கேன்’’ என்ற ப்ரியாமணியிடம் மைனஸ் டிகிரி குளிர் கேள்வியை கடைசியிலாவது கேட்டால்தானே நியாயம்...
‘‘மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் பற்றி?’’‘‘ஆமாங்க. ‘கிராண்ட் மாஸ்டர்’ படத்தில் நடிக்கிறேன். சின்ன வயசிலிருந்தே மோகன்லாலோட பிக் ஃபேன் நான். இப்போ அவர்கூட ஒரு படம் சேர்ந்து நடிப்பது கனவு மாதிரி இருக்கு. இதில எனக்கு கிரிமினல் லாயர் வேடம். மோகன்லால் சார் போலீஸ் ஆபீஸரா நடிக்கிறார். ஷூட்டிங் ஆரம்பிச்ச சில நாள்லயே ‘நல்லா பண்றே’ன்னு பாராட்டினார். அந்த வார்த்தை இன்னொரு விருதுக்கு சமம்’’ என்ற ப்ரியாமணி, நல்லவேளையாக மீண்டும் அந்த நிருபரின் செல் நம்பரைக் கேட்க மறந்துபோயிருந்தார்.
அமலன்