இந்த வாரத்தில் வெளியாகும் அந்த தேர்தல் முடிவுகளை தேசமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவு, மத்திய அரசையே அசைத்துவிடக்கூடிய வல்லமை மிக்கது என்ற நம்பிக்கைதான் காரணம். 403 தொகுதிகள் கொண்ட ஜம்போ சட்டசபையில், நான்கு அணிகளாக மோதும் யாரும் மெஜாரிட்டியை எட்ட முடியாது என்ற கணிப்புகள் ஒருபுறம் இருக்க, சில அரசியல் தலைவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது இருக்கிறது!
முதல்வராக இருந்தபடி தேர்தலை சந்திக்கிறார் மாயாவதி. கடந்த 20 ஆண்டுகளில் தனி மெஜாரிட்டியோடு ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஒரே முதல்வர் என்ற பெருமை மாயாவதிக்கு உண்டு. ஆனாலும் அநாவசிய ஆடம்பரங்கள், மெகா ஊழல் குற்றச்சாட்டுகள் என ஆட்சிக்கு எதிரான மனோபாவம் அவருக்கு மைனஸ். மெகா பூங்காக்களில் வைத்திருந்த யானை பொம்மைகளை மூடி தேர்தல் கமிஷன் இலவச விளம்பரம் கொடுத்துவிட்டது அவரது கட்சி சின்னத்துக்கு!
மத்தியில் அமைந்திருக்கும் காங்கிரஸ் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்துவருகிறது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. ஏற்கனவே மாயாவதிமீது இருக்கும் சொத்து குவிப்பு வழக்குகளைத் தோண்டி சங்கடப்படுத்தாமல் இருப்பதற்கு இது உதவுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸின் ஆதரவை அவர் மாநிலத்தில் எதிர்பார்க்கலாம். இதனால் இரண்டு கட்சிகளுக்கும் உறவு கசக்கலாம். மோசமான தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், அதைத் தொடர்ந்து ஏராளமான வழக்குகளையும் மாயாவதி சந்திக்க நேரும்.
மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், அதிக சீட்டுகளை அள்ளும் என எல்லோரும் எதிர்பார்ப்பது சமாஜ்வாடி கட்சியை! குண்டர்களுக்கு ஆதரவாக இருந்தார், சட்டம் ஒழுங்கை சீரழித்தார் என முலாயம்சிங் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதையெல்லாம் மறக்க வைத்துவிட்டார் அவரது மகன் அகிலேஷ் யாதவ். தாதா இமேஜ் கொண்ட பழம் பெருச்சாளிகளுக்கு சீட் கொடுக்க மறுத்து, இளைஞர் பட்டாளத்தை களத்தில் இறக்கினார். ‘மாணவர்களுக்கு இலவச லேப்டாப்’ போன்ற ஹைடெக் வாக்குறுதிகள் கட்சியின் இமேஜையே மாற்றிவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மாயாவதியைத் திட்டுவதைவிட அதிகமாக முலாயமையும் அவரது மகனையும் திட்டுகிறார்கள்.

சமாஜ்வாடி கட்சியும் மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகிறது. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை என்று முலாயம் சொன்னாலும், ‘தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் சமாஜ்வாடியும் கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என சிலர் யூகம் சொல்கிறார்கள். இந்தமுறை ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றால் முலாயமின் கட்சி காணாமல் போய்விடும். ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்ய அவர் தயாராக இருப்பார்.
ஒருவேளை டீல் ஒத்துவரவில்லை என்றால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை வாபஸ் வாங்கவும் தயங்க மாட்டார் என்கிறார்கள். அப்படி நடந்தால், அது மத்திய அரசுக்கு சோதனையாக அமையும்!
இழப்பதற்கு ஏதுமில்லை என்கிற நிலையில் இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தல் அக்னிப் பரீட்சை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக உ.பியைச் சுற்றிச் சுற்றி வருகிறார் ராகுல் காந்தி. ‘‘ராகுலை உ.பி. முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் சுலபமாக ஜெயித்துவிடும்’’ என்று பலரும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் கவனம் இங்கு இருந்தது. அவரது தலைமைக் குணத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இதைச் சொல்கிறார்கள். முஸ்லிம்களைக் கவர சல்மான் குர்ஷித், குர்மிகளை ஈர்க்க பெனி பிரசாத் வர்மா என மத்திய அமைச்சரவையே இங்கு முகாமிட்டிருக்கிறது. அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளக் கட்சியுடன் கூட்டணி. சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா, பிரியங்காவின் கணவர், அவர்களின் இரண்டு குழந்தைகள், போதாக்குறைக்கு ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் என உ.பி. தேர்தல் களத்தை கலர்ஃபுல் ஆக்கியது காங்கிரஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 21 இடங்களை அள்ளியது காங்கிரஸுக்கு நம்பிக்கை கொடுத்தது.
ஒருவேளை காங்கிரஸ் வெற்றிகளைக் குவிக்காது போனாலோ, தேர்தலுக்குப் பிறகு குட்டையைக் குழப்ப முயற்சித்தாலோ சிக்கல்தான்! ராகுல் ஃபார்முலாவுக்கு வரவேற்பு இருக்காது. மத்திய அரசும் கூட்டணிக் கட்சிகளை அதிகாரம் செய்ய முடியாமல் போய்விடும்.
கடைசியாக பி.ஜே.பி... கடந்த தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்த இந்தக் கட்சி இம்முறை என்ன ஆகும்? உ.பி.யில் பிரசாரம் செய்யவந்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும் பி.ஜே.பி. சீனியர் தலைவருமான சுந்தர்லால் பட்வா, ‘‘இம்முறையும் எங்களுக்கு மூன்றாம் இடம்தான்’’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட, இதர தலைவர்கள் நறநறத்தார்கள். இங்கு பி.ஜே.பி. என்ன சாதிக்கிறது என்பதைப் பொறுத்தே கட்சித் தலைவர் நிதின் கட்கரியின் எதிர்காலம் இருக்கிறது. நரேந்திர மோடியை பிரசாரத்துக்கு வரவிடாதது, உமாபாரதியை மீண்டும் கட்சியில் சேர்த்து உ.பி. தேர்தல் களத்தில் இறக்கிவிட்டது என அவரது பல முடிவுகள் கேள்விக்கு ஆளாகலாம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் தலைவர் தேர்தலில் அவருக்கு இதெல்லாம் பாதகமாகலாம்.
‘பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்தால் யார் முதல்வர்?’ என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் வருண் காந்தி இப்படிச் சொன்னார்... ‘‘எங்களிடம் 55 முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்!’’
பி.ஜே.பி. எத்தனை சீட் ஜெயிக்கும் என்பதை சிம்பாலிக்காகச் சொல்கிறாரோ!
அகஸ்டஸ்