இணியது காதல்

செல்வம் கையில் எவர்சில்வர் மூடியிட்ட ஒரு பாத்திரத்துடன் வாசலில் அலைபாய்ந்து நிற்பதற்கும், அந்த ஓட்டு வீட்டுக்குள்ளிருந்து ஒரு அழகான சுடிதார் பெண் எட்டிப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் முதுகுக்குப் பின்னால் அடக்கமாய் இன்னுமொரு பெண் அவளின் சாயலில்.
‘‘ஏங்க, பாசந்தி...’’ ‘‘ஹலோ, யார் நீங்க? என் பேரு வாசந்தின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ ‘‘உங்க பேரு வாசந்தியா?’’ ‘‘அதிருக்கட்டும்... உங்களுக்கு என் பேரு எப்படித் தெரியும்னு கேட்டேன்?’’
‘‘எனக்கு உங்க பேர் தெரியாதுங்க. பாசந்திதான் தெரியும். ரொம்ப நாளா இதுக்கு அதாங்க பேரு’’ என்றபடி, அந்த எவர்சில்வர் பாத்திரத்தின் மூடியை சற்றே விலக்கி சாய்த்துக் காட்டினான் செல்வம். உள்ளே வாசந்தி. அட... ச்சே... பாசந்தி.
‘‘ஓ... சாரிங்க.’’ ‘‘ஐயோ, சாரி இல்லங்க... நீங்க போட்டுக்கிட்டு இருக்குறது சுடிதாருங்க.’’
‘‘ஐயோ ராமா, மன்னிச்சுக்கோன்னு இங்கிலீஷ்ல சொன்னேங்க.’’
‘‘ஓ... நமக்கு அவ்ளோ இங்கிலீஷ் வராதுங்க!’’ வாசந்தி கை நீட்டி பாசந்தியை வாங்கிக் கொள்ள, செல்வத்துக்கு பாசந்தியை விட அதிகமாக இனித்தாள் வாசந்தி.
‘‘வீட்ல விசேஷமுங்களா?’’ ‘‘ஆமா... பொண்ணு பாக்க வராங்க’’ - சாயல் முந்திக் கொண்டது.
“ஓ... யாரை?’’ என்று உள்ளர்த்தத்துடன் செல்வம் நிறுத்த, ‘‘ஆங்... யாரையோ! உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்?’’ - வாசந்தி சிடுசிடுத்தாள்.
‘‘ஒரு ஜெனரல் நாலெட்ஜு...’’ ‘‘இது தமிழ் இல்லையே!’’ ‘‘ஹி... ஹி... ஹி... இங்கிலீசு தான் வராது. இந்தி ஓரளவு வரும்!’’
‘‘யோவ்... எனக்கு நல்லா வாயில வந்துடும்... போய்யா!’’ என்று படாரென கதவைச் சாத்துகையில் ‘களுக்’கென்று சாயலின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
பத்து நிமிட இடைவேளை விட்டு மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்க, சந்தேகத்துடன் கதவு திறந்தாள் வாசந்தி. கையில் மூடிய எவர்சில்வர் பாத்திரத்துடன் வேறொருவன் நின்றிருந்தான். ‘‘ஏங்க, பாசந்தி!’’
‘‘பாசந்தியா... முன்னாடியே வந்திடுச்சே!’’ ‘‘முன்னாடியா? நான் இப்போதானே வரேன். உங்க அப்பா ஆர்டர் பண்ணியிருந்தாரே!’’
வாசந்தியைப் பார்க்க வருவதாகச் சொன்ன மாப்பிள்ளை ரொம்பக் குறும்புப் பேர்வழி என்று அப்பா சொன்னதையும், ‘பாசந்தி வாங்கி வையுங்கள்’ என்று அவர் குறிப்பாகச் சொன்னதையும், முதலில் வந்த பாசந்தி குறித்தும் ஏதோ புரியத் துவங்கிக் கொண்டிருந்த வேளையில் சாயல் தொண்டையைக் கனைத்தது.
‘‘அக்கா, அப்படின்னா முன்னாடி வந்தது பாசந்தி இல்லக்கா... அல்வா!’’ என்றுவிட்டு மீண்டும் ‘களுக்’கென்று சிரித்தது.
|