நியூஸ் வே





சென்னை, அண்ணா மேம்பாலத்தில் மாநகரப் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்து, இந்த வார பரபரப்பு. காயலாங்கடை கண்டிஷனில் இருக்கும் பஸ்களை வற்புறுத்தி ஓட்டச் சொல்வதாலேயே இப்படி விபத்துகள் நடப்பதாக குற்றம் சாட்டுகின்றன போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.

விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக சந்தேகிக்கப்படுவது, டிரைவர் செல்போனில் பேசியபடி ஓட்டினார் என்பது! அவரது செல்போன் நம்பரின் ஆவணங்களை வாங்கிப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். கடந்த 2010ம் ஆண்டிலேயே, அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. வழியில் சோதனை நடத்தி சிலரை சஸ்பெண்ட் கூட செய்தார்கள். ஆனால் இந்தக் கட்டுப்பாடு அப்புறம் மறந்துவிட்டது. எல்லாமே நமக்கு ஆரம்ப ஜோர்
மட்டும்தான்!

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அபு ஜிண்டால், சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த இவன், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவன். மும்பையை தாக்க வந்த தீவிரவாதிகள் அனைவருக்கும் இந்தி கற்றுத் தந்தவன். மும்பைவாசி போல தோற்றமளிப்பது எப்படி என சொல்லித் தந்தவன். தாக்குதலை பாகிஸ்தானில் ஒரு கன்ட்ரோல் ரூமில் இருந்தபடி இயக்கிய தலைவர்களில் ஒருவன். அதன்பின் சவுதி சென்றவன், பிழைப்புக்காக அங்கு செல்லும் இந்திய முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் வேலையைச் செய்து வந்தான். இதற்காக இணையதளங்களில் அவன் விடுத்த அழைப்புதான், அவனைப் பிடிக்க உதவியது.


விஜய்யின் ‘துப்பாக்கி’ படத் தலைப்புக்கு தடை வாங்கியிருக்கிறார் ‘கள்ளத் துப்பாக்கி’ தயாரிப்பாளர் ரவிதேவன். ‘‘ஒரு படத்தின் தலைப்பை தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபிலிம் சேம்பர், கில்டு ஆகிய மூன்று சங்கங்களில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்யலாம். ஒரு சங்கத்தில் தலைப்பை பதிவு செய்யும்போது மற்ற சங்கங்களில் அது பதிவாகியிருக்கிறதா என்று பார்த்துவிட்டுதான் அந்த தலைப்பை பதிவு செய்யமுடியும். 1995ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விதி, ‘துப்பாக்கி’ விஷயத்தில் மீறப்பட்டுள்ளது.

சின்ன தயாரிப்பாளர்தானே... இவனால் என்ன செய்து விடமுடியும் என்று நினைத்தார்கள். விஜய்யின் ஒரு படத்தில், ‘அவன் எனக்கு தூசிதான்; ஆனால் கண்ணுல விழுந்துட்டான்’ என்று ஒரு வசனம் வரும். என்னை தூசி என்று நினைத்தவர்கள் கண்ணில் நான் விழுந்துவிட்டேன்’’ என்கிறார் ரவிதேவன்.

கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் தமிழ்மணி பைக் விபத்தில் இறந்தது, மீண்டும் ஒருமுறை ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தி இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையில் நிகழ்ந்த 5133 விபத்துகளில் 1506 விபத்துகளில் சிக்கியவர்கள் டூ வீலர் ஓட்டியவர்களே! விபத்துக்குள்ளாகும் டூ வீலர் நபர்களில் 96 சதவீதம் பேர் ஹெல்மெட் போட்டிருப்பதில்லை. ஹெல்மெட் இல்லாமல் ஓட்டியதற்காக சென்னையில் மட்டும் 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தவறு தொடர்கிறது.
இன்னொருபக்கம் வேகத்தடைகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதும் விபத்துக்குக் காரணமாகிறது. தமிழ்மணி மரணத்துக்கு அதுவும் காரணம். அந்த விபத்துக்குப் பிறகு அவசரமாக வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கிறார்கள். நம்ம ஊரில் ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால், ஏதோ ஒரு உயிரிழப்பு தேவைப்படுகிறது!

ஒலிம்பிக் விஷயத்தில் அடுத்த சர்ச்சை, சானியா மிர்சா. மகேஷ் பூபதி - லியாண்டர் பயஸ் சண்டையில், லியாண்டரை சமாதானம் செய்ய, ‘கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பயஸோடு சானியா ஜோடி சேர்வார்’ என அறிவித்தது இந்திய டென்னிஸ் சங்கம். ‘‘பூபதியோடு விளையாடி இரண்டு கிராண்ட் ஸ்லாம் வாங்கியவள் நான். ஒலிம்பிக்கில் ஜோடி சேர்வோம் என எனக்கு அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் சீனியர் வீரர் பயஸை தாஜா செய்ய என்னை தூண்டில் புழு ஆக்கிவிட்டனர்’’ என கொதித்தார் சானியா. இவ்வளவு சண்டைக்குப் பிறகு டென்னிஸில் எதுவும் பதக்கம் தேறாவிட்டால் எல்லோரும் பங்ச்சர் ஆவது நிச்சயம்!