பார்ட்டின்னா கெட்ட வார்த்தையா? : த்ரிஷா செம ஹீட்

சர்ச்சைகள் த்ரிஷாவை குறிபார்ப்பது புதுசல்ல. ‘’தென்னிந்திய நடிகைகளிடம் மதுப் பழக்கம் அதிகரித்துள்ளது’’ என்று சமீபத்தில் கொளுத்திப் போட்டார் சனா கான். அடிக்கடி பார்ட்டிகளுக்கு போகும் பழக்கம் உள்ள த்ரிஷா இதனால் வெகுண்டெழுந்து, ‘சனா கான் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்’ என்ற தகவல் புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி த்ரிஷாவிடம் கேட்டதும் பொங்கி எழுந்துவிட்டார்.

‘‘ஏங்க... எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு யாரோ ஒருத்தர் மேல புகார் கொடுப்பதுதான் என் வேலையா? எனக்கு மேனேஜரே இல்லை... அம்மாதான் எல்லாமே! ‘மேனேஜர் மூலமாக புகார் கொடுத்திருக்கார் த்ரிஷா’ன்னு சிலபேர் எழுதியிருக்காங்க.

ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, விஷாலுடன் ‘சமரன்’, ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’ன்னு மூன்று படங்களில் பிஸியா இருக்கேன். மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்கவே நேரமில்லாதபோது, என்னை ஏன் சீண்டுறாங்கன்னு தெரியலை. இதுக்குப் பின்னாடி யாரு இருக்காங்கன்னும் புரியலை’’ என்றவரிடம் பார்ட்டி கலாச்சாரம் பற்றிக் கேட்டபோது ‘டென்ஷன்ஷா’ ஆனார்.

‘‘பார்ட்டிங்கறதே ஏதோ கெட்டவார்த்தை போலத்தான் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. அடிக்கடி பார்ட்டிக்கு போற பழக்கம் எனக்கு இல்ல. போனாலும் அதுல என்ன தப்பு? சாதாரணமா இருக்கறவங்க ஷாப்பிங் மால், பீச், தியேட்டர்னு பொது இடங்களுக்குப் போகலாம். என்னைப் போல பிரபலமா இருக்கிறவங்க அந்த மாதிரி போக முடியாது. அதனாலதான் ஹோட்டல்ல பிரைவேட் ஹால்ல ஃபிரண்ட்ஸ் சர்க்கிளுடன் சந்திக்கவேண்டியிருக்கிறது. பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கறேன். சும்மா கெட் டுகெதர்தான்; இத தப்பா எடுத்துக்கிட்டா எப்படி?

எங்களுக்குன்னு எதுவும் ரிலாக்ஸ் இருக்கக்கூடாதா? த்ரிஷா பார்ட்டிக்கு போறாள்னா உங்களுக்கு என்ன வந்துச்சு? கவலைப்படுவதற்கு நாட்டுல எத்தனையோ விஷயங்கள் இருக்கு. யாரு எங்க போறா, என்ன பண்றாங்கங்கற ஆராய்ச்சி ஏன்?’’ என்று த்ரிஷா முடிப்பதற்குள் அவரது அம்மா உமா இடைமறித்து, ‘‘என் பொண்ணப் பற்றி மற்றவங்களைவிட எனக்கு நல்லாவே தெரியும். என் அனுமதி இல்லாம, என் கவனத்திற்கு வராம த்ரிஷா எதையும் செய்ய மாட்டா. அவளோட சுதந்திரத்தில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமையில்லை’’ என பொறுப்புள்ள அம்மாவாக நற்சான்றிதழ் தருகிறார்.
-அமலன்