அம்பிகா ராதா போல வருமா?





‘ஈகோ மோதலில் கலகலக்கும் டென்னிஸ் கபே’ - இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு படு பொருத்தமான தலைப்பு. நாட்டின் கௌரவத்துக்காகவே ஒலிம்பிக்கில் விளையாடுகிறோம் என்பதை மறந்து இப்படி மானத்தை வாங்கு கிறார்களே...
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

எண்ட சேட்டன் விஜய்யி, ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ‘கருத்தன்’ எண்ட மலையாளப் படத்தில் நடிக்கிறது கேட்டு சால சந்தோஷப்பட்டேன் சாரே. பட்சே, அது வெறும் ‘கோஸிப்’னு லோஸ்ட் பாராவில் படிச்சதும் மனசு ‘புஸ்’னு போயி சாரே. உங்க கோஸிப் உண்மையாயிட்டு வருமா?
- ஜி.டி.சங்கர், ஈரோடு.

நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் சினிமாவுக்கு வருகிறாரா? அந்தக் காலத்து அம்பிகா - ராதா மாதிரி இவர்கள் காம்பினேஷனும் வருமா? நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
- எஸ்.அனந்தராமன், தஞ்சாவூர்.

கல்விக் கடன் என்றதும் ‘அதெல்லாம் பெரிய புரொஸீஜர்பா’ என்று பயப்படும் மிடில் கிளாஸுக்கு ஆபத்பாந்தவனாக அமைந்தது, ‘கல்விக்கடன் வாங்குவது ஈஸி!’ கட்டுரை.
- ஏ.ஜி.கல்யாணசுந்தரம், சென்னை-126.
அரசு நிர்ணயித்த ஃபீஸ் கட்டிய ஒரே குற்றத்துக்காக மாணவன் ஒருவன் பிரம்படி பட்ட சம்பவத்தை படித்தபோது எனக்கே அடிபட்டது போல உணர்ந்தேன். கல்வியும் மாஃபியாக்கள் கையில் சிக்குகிறதோ!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பாத்திரக்கடை வைத்து பிழைப்பு நடத்தினாலும் எழுத்தாளராகத் திகழும் காமுத்துரையைப் பாராட்டியே தீர வேண்டும். ‘பாத்திர’க்காரர் என்று அவரை அழைப்பது அவர் அமைக்கும் கதாபாத்திரங்களுக்கும் சேர்த்துதானே?
- டி.வி.ரமா,
செங்கல்பட்டு.

மெட்டி ஒலி திருமுருகன் எழுதிய ‘விஜயா டீச்சர்’ கதையின் முடிவு, கொஞ்சமும் எதிர்பாராதது. கதை நாயகி விஜயா டீச்சருக்கும் அவரைப் போலவே காத்திருக்கும் நிஜ உலகப் பெண்களுக்கும் நல்ல கணவன் விரைவில் கிடைக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
- வி.சி.கீதா ராமு, பெங்களூரு.

இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ‘முதிர்கன்னி’ என்ற வார்த்தையில்லாமல் கவிதைகளே இல்லை என்ற நிலை இருந்தது. இன்று அந்த வார்த்தையே மறந்து போய்விட்டது. எனினும், எக்காலத்திலும் முதிர்கன்னிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர்த்தியுள்ளது ‘விஜயா டீச்சர்’ தொடர்.
- எஸ்.ஆனந்தன், சிவகாசி.

‘உன் தம்பி வரைக்கும் உன்னை ஓவர்டேக் பண்ணிட்டுப் போறாங்க... நீ என்ன டவுன் பஸ் மாதிரி நொண்டியடிச்சுட்டு இருக்கே?’ - ஒரு சீரியஸ் மேட்டரை இத்தனை ஜாலியாக சொல்ல முடியுமா? ஹேட்ஸ் ஆஃப் டு விஜயா டீச்சர்.
- ஜே.ஸ்டீபன் சார்லஸ், நாகர்கோவில்.