மனைவி மனசு!





இன்றைக்கெல்லாம் ஆபீசில் ஆனந்தத்திலும் அதிர்ச்சியிலும் அப்படியே செயலற்று அமர்ந்து விடுகிறேன். காரணம், காலையில் நடந்த அந்த சம்பவம்...

ஆபீஸுக்குக் கிளம்பும்போது என் மனைவியும் கூடவே கிளம்பினாள். ‘‘என்னங்க, அப்படியே என்னை மார்க்கெட்ல இறக்கி விட்டுருங்க...’’ என்றாள்.

‘‘ஏன் விசாலம்... இன்னிக்கு என்ன விசேஷம்?’’
‘‘மாமியார் வர்றாங்க. அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சிப் போடணுமே... அதான் காய்கறி வாங்கணும்!’’
‘‘எப்போ வர்றாங்க? உனக்கு எப்படித் தெரியும்?’’
‘‘அடடா! உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். காலையில் போன் பண்ணினாங்க. நீங்க பாத்ரூம்ல இருந்தீங்க. மத்தியானம் சாப்பாட்டுக்கு முன்னால வந்துடறேன்னு சொன்னாங்க...’’

‘‘சந்தோஷம்... சமைச்சிடு. ஸாரி... ஜமாய்ச்சிடு..!’’
‘‘நீங்களும் சாயந்திரம் வரும்போது ஸ்வீட், பழங்கள் எல்லாம் நிறைய வாங்கிட்டு வாங்க...’’
‘‘அசத்திடுறேன்!’’
என் மனைவியின் மாமியார் பாசத்தை நினைத்து மெய்சிலிர்த்தேன்.

ஆபீஸ் முடிந்தது. ஸ்வீட், காரம், பழங்கள் என்று என் அம்மாவுக்குப் பிடித்த அவ்வளவு வகைகளையும் வாங்கினேன். ஆவலுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்கே சோபாவில் அவள் அம்மா... அதாவது, என் மாமியார் அமர்ந்திருந்தார்.
என் மனைவியின் மனசு எனக்கு இப்போது புரிந்தது.