திருப்புமுனை : த.செ.ஞானவேல்





‘‘நல்லது கெட்டது தெரியாத 18 வயதில், அப்பாவின் மரணத்தை எதிர்நோக்கிய துயரமான சூழ்நிலை. ‘இறுதியாக எனக்கு ஏதாவது சொல்வாரா?’ என ஏக்கத்தோடு அவர் அருகில் நிற்கிறேன். என்னையே பார்க்கிற கண்கள் எனக்கு ஏதோ சொல்ல, என் கையை எடுத்து அவர் கை மீது வைத்து அழுத்தி, ‘தவமாய் நீங்கள் கற்ற ஓவியக் கலையை எனக்குள் இறக்கிவிடுங்கள்’ என்று மனசுக்குள் சொன்னேன். அதன்பிறகு அந்தக் கண்களில் சின்ன சிரிப்பு தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் அப்பா இறந்து போனார். அப்பா வரைந்து முடிக்காத ஓவியங்களை நான் இன்னமும் வரைந்து கொண்டிருக்கிறேன்...’’

- வார்த்தைகளால் தந்தையின் நினைவுகளை வரைகிறார் ஓவியர் மணியம் செல்வன். தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், தங்களின் கருத்துகளுக்கு வண்ணம் தீட்ட விரும்பி அழைக்கிற தூரிகைக்காரர்.


‘‘ஓவியம் என்னுடைய துறையாக இளம் வயதில் இருந்ததில்லை. ராணுவத்தில் சேரும் ஆசையோடு இருந்தேன். பள்ளியில் படிக்கும்போது தேசிய மாணவர் படையில் ஆர்வமா சேர்ந்தேன். ஒரு ஓவியரா, குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே அப்பா போராட வேண்டி இருந்தது. அவர் படும் கஷ்டங்களைப் பார்த்து அம்மாவுக்கு ஓவியத் துறை மீது அதிருப்தி இருந்தது. எனக்கும் அப்பாவின் ஓவியங்கள் மீது மரியாதை இருந்த அளவு ஆர்வம் இல்லை. அவரும் என்னை வற்புறுத்தியதில்லை.


ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வரைய மிகவும் சிரமப்பட்டார் அப்பா. பார்வையும் மங்கத் தொடங்கியது. உதவிக்கு ஆள் இல்லாமல், குறித்த நேரத்தில் பத்திரிகைகளுக்கு ஓவியம் தர முடியாமல் திணறினார். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, உடம்பு முடியாதபோதும் வருத்திக் கொண்டார். ஒரே மகனா இருந்தும், அவருக்கு உதவியாக இல்லாமல் இருப்பது குற்றவுணர்ச்சியாக இருந்தது. இங்க் பாட்டில் எடுத்துக் கொடுப்பது, சார்ட் பிரித்து வைப்பது என அப்பாவுக்கு உதவியாளனாக மாறியது முதல் திருப்புமுனை. ஓவிய நுணுக்கங்களை ரசித்து அவர் வரைவதைப் பார்த்து, எனக்குள்ளும் ஆர்வம் பிறந்தது. இன்னொரு முறை புதிதாய் பிறந்தேன் என்று சொன்னால்கூட பொருந்தும்!

அப்பாவுக்கு உதவி செய்ய வருவதற்கு முன்பு ஒரு சில படங்கள் வரைந்து காட்டும்போது, ‘நல்லா வரையறியே’ என்ற சின்னச்சின்ன பாராட்டு மட்டும் அப்பாவிடமிருந்து கிடைத்தது. பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. என்னால் நன்றாக ஓவியம் வரையமுடியும் என்ற நம்பிக்கை கொஞ்சம்கூட இருந்ததில்லை. 

தமிழ் மொழியின் நவீனகால அடையாளமாக விளங்கும் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு வரைந்த வரலாற்று ஓவியங்களின் மூலம் வாசகர்களிடம் மதிப்பையும் மரியாதையையும் பெரிய சொத்தாக சம்பாதித்திருந்தார் அப்பா. ஓவியம் பற்றி வருகிற அனைத்து மேல்நாட்டு புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ‘கிடைக்கிற கொஞ்சம் பணத்தையும் ஓவியத்துக்கே செலவழிக்கிறாரே’ என்கிற வருத்தம் அம்மாவுக்கு இருந்தது. அழியாத செல்வங்களான புத்தகங்களை தன் மகனுக்கு சொத்தாகச் சேர்க்கிறார் என்று அப்போது யாருக்கும் தெரியாது. பெரிய பயிற்சியோ முயற்சியோ இல்லாமல், இயல்பாகவே ஓவியம் எனக்கு கைவந்தது. என்னை பம்பாயின் புகழ்பெற்ற ‘ஜே.ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்’ கல்லூரியில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால், வசதி அனுமதிக்கவில்லை. பிறகு சென்னை ஓவியக் கல்லூரி மாணவனானேன். அப்போதே எழுத்தாளர் கல்கி அவர்கள், அவருடைய பத்திரிகையில் முழுநேர வேலையில் சேரச் சொல்லிவிட்டார். ‘என்ன ஆனாலும் படிப்பை முடித்து விடு’ என்று சொன்ன அப்பாவின் ஆசையை நிறைவேற்றும்போது, அவர் உயிரோடு இல்லை.

ஒரு ஓவியனாக வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவேனோ என்று கவலைப்பட்டார் அம்மா. அப்போது விளம்பர நிறுவனங்களில் ஓவியர்களுக்கு நல்ல வரவேற்பும் சம்பளமும் கிடைத்தது. கல்லூரி முடித்த மறுநாளே 600 ரூபாய் சம்பளத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பத்திரிகைகளுக்கும் பகுதி நேரமாக வரைந்தேன். வாரா வாரம் ஓவியம் பிரசுரம் ஆவதும், மக்கள் அதைப் பாராட்டுவதும் விமர்சிப்பதுமாக என் திறமையை மேம்படுத்திக்கொள்ள பத்திரிகைப் பணியே என் விருப்பமாக இருந்தது. துணிந்து வேலையை விட்டேன். சோதனைகள் பல தந்த திருப்புமுனை அது. தினமும் படம் வரைந்தாலும் மாதம் 100 ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள்... எந்தக் கஷ்டம் வந்தாலும் மனசுக்குப் பிடித்த விஷயத்தையே செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தேன். தினமும் 25 கி.மீ. சைக்கிளில் பயணித்து வாய்ப்பு தேடினேன். உட்கார்ந்த இடத்தில் 800 ரூபாய்க்கு வேலை தர விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தன. முருகன் உலகத்தைச் சுற்றி வந்து மாம்பழம் வாங்கியதைப் போல, 100 ரூபாய்க்கு சென்னையைச் சுற்ற வேண்டி இருந்தது. கஷ்டங்கள் இருந்தாலும், அது கவலையாகவோ, பயமாகவோ மாறவில்லை.

நான் வரைந்த, வரைகிற ஒவ்வொரு ஓவியத்திற்கும் நானே முதல் விமர்சகன். ஓவியத்துறையில் அடிக்கடி டிரெண்ட் மாறும். அப்படிப் பார்த்தால் இப்போது ஐந்தாவது தலைமுறையோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கேட்டு அலைந்த நாள் முதல், இன்று இருக்கிற இடத்துக்கு வாய்ப்புகள் தேடி வருகிற காலம் வரை, என்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன்.

படம் போடுவதற்கு முன்பு, அந்தக் கதையைப் படிக்காமல் ஓவியம் போடுவது இல்லை என்பது என்னுடைய கொள்கை. ஒரு முறைக்கு இருமுறை படித்து, கதையில் வருகிற கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப வரைவேன். சின்னச் சின்ன விஷயங்களை கவனிப்பதும் ஓவியனுக்கு அவசியம். பாலைவனத்தில் பயணம் செய்கிற ஒட்டகம் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்வதைப்போல, ஓவியனுக்கும் மனசுக்குள் ஒரு கேமரா இருக்க வேண்டும். 

அப்பா மீதும், அவர் ஓவியம் மீதும் பெரிய மதிப்பு கூட்டிய ஒரு நிகழ்வு, நான் பள்ளியில் படிக்கும்போது நடந்தது. எங்கள் வரலாற்று ஆசிரியர், ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற வரலாற்று நாவல்களைப் படிக்கவும், அந்த நூற்றாண்டை கண் முன் நிறுத்தும் அப்பாவின் ஓவியத்தைக் கவனித்துப் பார்க்கவும் மாணவர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவார். வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியருக்கே அப்பாவின் வரலாற்று ஓவியங்கள் நம்பகத்தன்மை ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பசி, தூக்கம் மறந்த உழைப்பு இருந்ததை பார்த்திருக்கிறேன்.

‘மடிசார் மாமி’ என்கிற தொடருக்கு சென்னை அண்ணா சாலையில் ஹீரோயின் வண்டியில் போவதைப் போல படம் போட வேண்டும். நாலு கட்டிடங்களை வரைந்து கொடுத்துவிடாமல், அண்ணா சாலையில் நிஜமாகவே வண்டிகள் போகும் காட்சியை வரைந்தேன். ஆட்டோ, சைக்கிள், டூவீலர்களுக்கு நடுவில் ஒரு தண்ணீர் லாரியையும் வரைந்தேன். தண்ணீர் லாரியில் நிறைய பேர் அடிபட்டு உயிரிழந்த செய்திகள் அடிக்கடி வந்த நேரம் அது. ‘அய்யோ, அந்த தண்ணி லாரியில் அடிபட்டு அடுத்த வாரம் ஹீரோயின் செத்துடுவாளா?’ என்று ஒரு வாசகர் பதறிப் போனார். ஓவியத்தை அவ்வளவு நுணுக்கமாக கவனிக்கும் வாசகர்களுக்குப் படம் வரைகிறோம் என்கிற பொறுப்புணர்வு ஒவ்வொரு படம் வரையும்போதும் இருக்கும்.

‘உன்னை விட திறமை குறைவா இருக்கிறவங்க எல்லாம் நிறைய சம்பாதிக்கும்போது, நூறுக்கும் இருநூறுக்கும் படம் வரையறீயே?’ என்று மற்றவர்கள் அறிவுரை தந்திருக்கிறார்கள். பணம் அடிப்படை வாழ்வுக்கு அவசியம் என்றாலும், அதுவே எல்லாவற்றையும் தீர்மானித்துவிடக் கூடாது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் நிறைவு இருக்கும். எல்லோரா ஓவியங்களையும், சிற்பங்களையும், பார்த்து என்னையறியாமல் கண்ணீர் விட்டிருக்கிறேன். அங்கிருக்கும் சிலையிடம் நான் பேசி இருக்கிறேன்.

‘மயக்கும் அழகிய சிலையே... கண்களைத் திறக்கும்போது, சிற்பம் முழுமையடைகிறது. ஒரு சிற்பிதான் உன்  கண்களைத் திறந்திருப்பான். வெறும் பாறையாக இருந்த உன் அழகை, தன் கண்களால் அவன் பார்த்திருக்கிறான். அவனை நான் உன் கண்களின் வழியாகப் பார்க்கிறேன். அந்தக் கலைஞனுக்கு என்னுடைய அநேக நமஸ்காரங்கள்’ என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியிருக்கிறேன். அந்தக் கலையும், அந்த சிலையும் தரும் இன்பத்திற்கு முன்னால் பேர், பணம், புகழ் எல்லாமே பொருளற்றவை. பாறையில் இல்லாத தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொண்டே வந்தால் அது சிற்பம். வெள்ளைத்தாளில் தேவையான விஷயங்களை சேர்த்துக்கொண்டே வந்தால் அது ஓவியம். மனதுக்கு நிறைவான ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்கும்போதே, என்னுடைய சம்பளம் கிடைத்துவிடுகிறது. ‘உன் திறமை என்கிற துப்பாக்கியை வைத்து கொசுவை சுட்டுக் கொண்டிருக்கிறாய்’ என்கிற விமர்சனம்கூட வந்திருக்கிறது. வேட்டையாடுபவர்களுக்கு சிங்கமும் புலியும் பெரிதாக இருக்கலாம். ஓவியனுக்கு ஒரு கொசுவை வரைவதாக இருந்தாலும், அதன் இயல்பு கெடாமல் தத்ரூபமாக வரைந்துவிட்டால் அதுவே போதுமானது.

ஓவியங்களில் இருப்பவை வெறும் கோடுகளோ, வண்ணங்களோ அல்ல! நம்முடைய உணர்வுகள், ஆசைகள், கனவுகள். என் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தை மீட்டெடுப்பதும், நான் வாழும் காலத்தை கண்முன் நிறுத்துவதும் ஓவியத்தில் சாத்தியம். காலத்தின் ஒரு கணத்தை நிறுத்தி, ‘இதோ, இதுதான் அது! பார்த்துக் கொள்’ என்று சொல்கிற கலை கையில் இருக்கிறது. அந்தப் பெருமிதத்திற்கு முன்னால், எல்லாமே சின்னதாகவே தெரிகிறது’’ என்கிற மணியம் செல்வனின் வீட்டுச் சுவரில், அவர் நிறுத்திய காலத்தின் கணங்கள் ஓவியங்களாக உயிர்த்தெழுந்துள்ளன.   அவர் கையில் உள்ள தூரிகை, கிருஷ்ணரை வரையும்போது புல்லாங்குழலாகிறது; சிவனை வரையும்போது தாண்டவம் ஆடுகிறது; நட்சத்திரங்களை வரையும்போது ஒளி வீசுகிறது. நதியின் ஓட்டத்தில் மிதந்து வருகிறது.  தன் ஓவியங்களின் கோடுகளாகவும் வண்ணங்களாகவும் வாழ்கிறார் மணியம் செல்வன்.  
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சி.எஸ்.
(திருப்பங்கள்
தொடரும்...)