சுட்ட கதை சுடாத நீதி




மரணப் படுக்கையில் இருந்தார் அந்த முதியவர். சர்க்கரை நோய் முற்றி, பார்வை மங்கிவிட்ட நேரத்தில் கடுமையான ஹார்ட் அட்டாக். ‘சில மணி நேரங்கள் பிழைத்திருந்தால் அதிசயம்’ என்கிற நிலை. ‘‘என் மகன் சேகர் மிலிட்டரியில இருக்கான்’’ என்று தினமும் பணிவிடைகள் செய்யும் நர்ஸிடம் சொல்லியிருந்தார் அவர்.

இப்போது அவர், ‘‘சேகர்... சேகர்...’’ என அரற்றியபடி இருந்தார். இவர் இறுதி மூச்சை விடுவதற்குள் மகன் வந்து விடுவானா என நர்ஸ் கவலைப்பட்ட நேரத்தில், ராணுவ உடையில் வந்தான் அந்த இளைஞன். ‘‘இதோ உங்க மகன்’’ என்று நர்ஸ் சந்தோஷப்பட, ‘‘வந்துட்டியாப்பா?’’ என்றபடி அவனைப் பற்றிக் கொண்டார் முதியவர்.
‘‘உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா...’’ என்றபடி அவனும் ஆறுதலாக வருடிக் கொடுத்தான். அந்த முதியவர் தொடர்பற்று ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார். அவனும் ஆறுதல் வார்த்தைகளை நிறுத்தவில்லை.
பல மணி நேரம் கடந்தது. அவன் அவரது கைகளைப் பிடித்தபடியே இருந்தான். நர்ஸ் இடையில் வந்து, ‘‘நீங்க வேணா போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. நான் பார்த்துக்கறேன்’’ என்றாள். அவன் புன்சிரிப்போடு மறுத்தான்.
கொஞ்ச நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவன் எழுந்து போய் நர்ஸிடம் சொன்னான். அவள் வந்து பார்த்துவிட்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள்.
அவன் இடைமறித்து, ‘‘சரிங்க சிஸ்டர்! யார் இவர்?’’ என்றான்.
அவள் திடுக்கிட்டு, ‘‘அப்படின்னா நீங்க இவரோட மகன் இல்லையா?’’
‘‘இல்லை...’’
‘‘அப்புறம் எதுக்கு அவர் பக்கத்துல இவ்ளோ நேரம் இருந்தீங்க?’’
‘‘அவரோட மகன் இங்க இல்லைன்னு தெரிஞ்சது. சாகறதுக்குள்ள மகனைப் பார்த்துடத் துடிக்கறார்னு புரிஞ்சது. அதான் கொஞ்ச நேரம் அவரோட மகனா இருந்து ஆறுதல் தரலாம்னு உக்காந்துட்டேன். தீவிரவாதிகள் தாக்குதல்ல சேகர்னு ஒரு சிப்பாய் இறந்துட்டார். அந்தத் தகவலை அவங்க அப்பாவுக்குச் சொல்ல வந்தேன். அவர் இங்க இருக்கறதா சொன்னாங்க...’’
‘‘இவர்தான் அவர்’’ என்றபோது நர்ஸின் கண்களில் கண்ணீர்.
வலியுள்ளவர்களுக்கு
ஆறுதலாய் இருங்கள்!