சிறார் நீதி... சிக்கலில் வழக்குகள்!





கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி, ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவனால் வகுப்பறையிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தக் கொலை வழக்கில் வேகமாக விசாரணை நடந்து முடிந்து, தண்டனை வழங்கும் கட்டம் நெருங்கும் நேரத்தில், ‘இந்த விசாரணையே செல்லாது’ என்று ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ஏன் இப்படி?

‘‘ஒரு காலத்தில் சிறார் செய்யும் குற்றங்களை வழக்கமான நீதிமன்றங்கள்தான் விசாரித்து வந்தன. ஏற்கனவே குற்றங்களால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர்களை, வழக்கமான போலீஸாரும் நீதித்துறையும் விசாரிப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், மத்திய அரசு 2006ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி இந்தக் குற்றங்களை ‘ஜுவனைல் ஜஸ்டிஸ் போர்டு’ எனப்படும் சிறார் நீதிக் குழுமங்கள்தான் விசாரிக்க வேண்டும். 2007லிருந்து இது நடைமுறைக்கும் வந்தது’’ என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாத்.

இதன்படி இந்த குழுமங்கள் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட வேண்டும். அரசால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் குழுவில் இருப்பார்கள். இவர்களில் ஒருவர் நீதித் துறையைச் சார்ந்த மாஜிஸ்திரேட். மற்ற இருவர் சமூக சேவகர்கள். இந்த மூவருக்குமே குழந்தைகள் உளவியலில் தேர்ச்சியும் அனுபவமும் இருப்பது அவசியம். ‘‘இந்த வழக்கைப் பொறுத்தவரை, மாஜிஸ்திரேட் இந்தத் தகுதிகள் இல்லாதவராக இருப்பதால்தான் விசாரணை செல்லுபடியாகாது என்றிருக்கிறது உயர் நீதிமன்றம். மாஜிஸ்திரேட் நியமனம் செல்லாது என்பதால், அவர் செய்த விசாரணையும் செல்லாது. தகுதியானவர் பொறுப்பேற்கும்போது விசாரணை மீண்டும் தொடங்கும்.


இதேபோல சிறார் குற்ற வாளிகளை விசாரிக்கும் போலீஸாருக்கும் சில தகுதிகளை வரையறை செய்திருக்கிறது சட்டம். குழந்தைகள் உளவியல் அறிந்த, ‘ஸ்பெஷல் ஜுவனைல் போலீஸ் யூனிட்’தான் சிறார் குற்றங்களை விசாரிக்க வேண்டும். இது தமிழகத்தில் எங்கும் நடைமுறையில் இல்லை.

சிறார் குற்றவாளிகளை திருத்துவதும், மேலும் குற்றச்செயலில் ஈடுபட விடாமல் தடுப்பதும்தான் முக்கியம். எனவே இந்த விசாரணைகளை வழக்கமான நீதிமன்றங்களில் நடத்தக் கூடாது. சிறார் குழுமக் கட்டிடத்தில் நடத்த வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. இதையும் இந்த வழக்கில் கடைப்பிடிக்காமல், நீதிமன்றத்திலேயே விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். சிறார் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காகத்தான் இந்த சட்டம் முயற்சிக்கிறது. ஆனால் விசாரணையிலேயே அவர்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு எப்படி மறுவாழ்வு கொடுக்க முடியும்? இந்த வழக்கு செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்ததன்மூலம், இந்த குழுமம் இதுவரை நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைகளும் செல்லுபடியாகாதது என்று அர்த்தமாகி விடுகிறது’’ என்றார் பிரசாத்.

குழந்தைகள் உரிமைக்காக பாடுபடும் சமூக ஆர்வலரான தேவநேயன், ‘‘சிறார் குற்றவாளிகள் என்று சொல்வதே தவறு. ‘சட்டத்துக்கு முரண்பாடாகக் கருதப்படும் குழந்தைகள்’ என்றே அழைக்க வேண்டும். வழக்கமான நீதிமன்றங்களின் சூழலும், அங்கு வரும் இதர குற்றவாளிகளும் இவர்களுக்கு தவறான சூழ்நிலைகளை உருவாக்கித் தந்துவிடக் கூடாது. விசாரிக்கும்போதுகூட நீதிபதிகளோ அல்லது வழக்கறிஞர்களோ அவர்களின் சீருடையில் இருக்கக்கூடாது. குழந்தைகளை விசாரிக்கும் சூழலானது, அவர்கள் விரும்பும் விதமாக இருக்கவேண்டும். அவர்களை போட்டோ எடுப்பதோ, அடையாளத்தை வெளிப்படுத்துவதோ, அல்லது பெயர்களைக் குறிப்பிடுவதோ தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளைப் போல கூண்டில் ஏற்றி விசாரிக்கக் கூடாது. இதெல்லாம் பல வழக்குகளில் மீறப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரித்துவிட்டு, அதே நீதிமன்றத்தில் சிறுவனை விசாரித்திருக்கிறார்கள். இது மாபெரும் குற்றமாகும்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிறார் நீதிக் குழுமங்கள் முறையாக இல்லை. நூற்றுக்கணக்கான சிறார்கள் திருட்டு, அடிதடி, கொள்ளை, பாலியல் வழக்குகளில் சிக்கி, அவ்வப்போது நீதிமன்றங்களுக்குச் சென்று அவதிப்படுகின்ற நிலையைத்தான் இங்கு பார்க்க முடிகிறது. அரசோ, நீதிக் குழுமமோ, அவர்களை அடைத்து வைத்திருக்கும் காப்பகமோ... எதுவுமே திருந்துவதற்கான சூழ் நிலைகளை அவர்களுக்கு உருவாக்கித் தருவதில்லை. இதனால்தான் காப்பகங்களிலிருந்து அன்றாடம் பலர் தப்பிக்கிறார்கள். விசாரணைச் சூழலும் தண்டனையும், சமூகத்தை அச்சுறுத்துகிற மனிதனாக எந்தக் குழந்தையையும் மாற்றிவிடக் கூடாது’’ என்கிறார்.
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்