ஜில்லென்று விஷம்!





சமையல் அறையில் யாரும் இல்லை. இதுதான் சந்தர்ப்பம். ஃபிரிட்ஜை திறந்தான் தீனன். ஃப்ரீசரில் இரண்டு டிரேக்களில் ஐஸ் கட்டிக்காக தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. தீனன் தன் பாக்கெட்டில் இருந்து விஷத்தை எடுத்தான். ஃப்ரீசரின் ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டு சொட்டுகள் விட்டான்.

பரந்தாமன் அவனுக்குத் தாய் மாமாதான். ஏற்றுமதி பிசினஸ் செய்கிறார். கோடிகளில் புரளும் செழிப்பான பிசினஸ். பிளஸ் 2 முடித்துவிட்டு கிராமத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தவனை அவர்தான் இரக்கப்பட்டு இங்கு கூட்டி வந்தார். நல்ல வேலையும் கொடுத்திருந்தார்.

தீனனும் நல்லவன்தான். பிறகேன் இந்த ‘விஷ’மம் என்கிறீர்களா?

பரந்தாமனின் ஒரே வாரிசு நீராவதி. செல்வாக்கில் திளைத்து சினிமா நடிகை போல் சிக்கென இருப்பாள். திருப்பூரில் ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளையை நீராவதிக்கு பேசி முடித்திருந்தார் பரந்தாமன். அவளையும் மாமன் சொத்துக்களையும் இழக்க தீனனுக்கு மனமில்லை.

மனைவியை இழந்த பின் பரந்தாமனுக்கு பாட்டிலே துணை. இரவு ஆனதும் ஒரு பாட்டில் பிராந்தி, கொஞ்சம் சோடா, மற்றும் ஐஸ்கட்டிகளோடு உட்கார்ந்து விடுவார்.

‘இன்னிக்கு ராத்திரி இந்த ஐஸ்கட்டியைப் போட்டு தண்ணியடிச்சுட்டு மாமா சொல்லிக்காம போயிடுவார். அப்புறம் என்னை விட்டா நீராவதிக்கு யார் இருக்கா?’ - அவன் மனக்கணக்கு போடும்போதே வேலைக்காரன் வந்தான்.
‘‘முதலாளி உங்களை வரச்சொன்னார் சார்!’’ என்றான்.

என்னவோ ஏதோ என்று பரபரப்புடன் அவர் அறைக்குள் நுழைந்தான் தீனன். ‘‘தீனா, இப்பதான் நம்ம திருப்பூர் கிளையன்ட் போன் பண்ணினார். நம்ம நீராவதிக்கு பார்த்திருக்கிற பய, வேற எவ கூடவோ குடும்பம் நடத்தறானாம். அயோக்கிய ராஸ்கல். எவனுக்கோ நீராவதியை கட்டிக் கொடுக்குறதை விட உனக்கே கட்டி வைக்க முடிவு பண்ணியிருக்கேன். உனக்கு சம்மதம்தானே?’’ - மாமா கேட்டதும் ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது தீனனுக்கு.

‘‘அட, பய முகத்துல சந்தோஷத்தைப் பாரு. ஏ, நீரா! தீனனுக்கு ஏதாச்சும் ஸ்வீட் கொண்டு வாம்மா. இதையே நிச்சயதார்த்தமா நினைச்சுக்குவோம்’’ - மகளுக்குக் கட்டளையிட்டார் பரந்தாமன்.

ஜில்லென்று ரோஸ் மில்க்கை நீட்டினாள் நீராவதி. ‘கல்யாணம் முடிந்ததும் கம்பெனியை நம்ம பெயருக்கு மாத்திக்கணும்’ என்று கணக்கு போட்டுக் கொண்டே ரோஸ்மில்க்கை உள்ளே தள்ளியவனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

‘‘இந்த ரோஸ்மில்க்ல மிதக்கற ஐஸ்கட்டி...’’ என்று கத்தியவனது நுரையீரல் ஆக்ஸிஜனுக்கு ஏங்க ஆரம்பித்தது.