ஐ.ஏ.எஸ். கனவை நிஜமாக்கும் வழிகள்





ஐ.ஏ.எஸ்... இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு இன்றும் கவர்ச்சி குறையவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள யுபிஎஸ்சி எனப்படும் மத்திய தேர்வாணையம், வருடம்தோறும் 13 வகையான தேர்வுகளை நடத்துகிறது. இதில் ஒன்றுதான் ‘சிவில் சர்வீஸ்’ என்ற குடிமைப்பணிகளுக்கான தேர்வு. இது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அரசு  உயர் பதவிகளுக்கான தேர்வு. இதில் உச்சபட்ச வேலைதான் ஐஏஎஸ். அண்மையில் சிவில் சர்வீஸ் தேர்வில் சில மாற்றங்களை தேர்வாணையம் கொண்டுவந்த நிலையில், அதுபற்றியும் தேர்வாணையத்தின் வேறு பல தேர்வுகள் குறித்தும் இங்கே கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் சென்னை, சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குனர் சங்கர்.

‘‘மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள், ஐ.எஃப்.எஸ். எனப்படும் இண்டியன் ஃபாரஸ்ட் சர்வீஸ், ஐ.இ.எஸ். என்ற இண்டியன் எஞ்சினியரிங் சர்வீஸ், சென்ட்ரல் போலீஸ் ஃபோர்சஸ் (அசிஸ்டன்ட் கமாண்டென்ட்), கம்பைண்ட் டிஃபன்ஸ் சர்வீஸ், கம்பைண்ட் மெடிக்கல் சர்வீஸ், இண்டியன் எகானமிக் சர்வீஸ், இண்டியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ், ஜியாலஜிஸ்ட் தேர்வு, செக்ஷன் ஆபீசர்ஸ் தேர்வு என்ற 10 வகையான தேர்வுகளுக்கும் டிகிரி அவசியம். மிச்சம் இருக்கும் 3 தேர்வுகளான நேஷனல் டிஃபன்ஸ் சர்வீஸ், நேவல் அகாடமி தேர்வு, ஸ்பெஷல் கிளாஸ் ரெயில்வே அப்ரண்டீஸ் ஆகியவற்றுக்கு பிளஸ் 2 தகுதியே போதுமானது. மேற்சொன்ன 13 தேர்வுகளின் மூலம் மத்திய தேர்வாணையம் வருடம்தோறும் ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புகிறது. இவற்றில் பல தேர்வுகள் வருடத்தில் ஒருமுறை என்றால், சில தேர்வுகள் வருடத்தில் இரண்டு முறை கூட நடக்கின்றன.

முதலில் சிவில் சர்வீஸ் வேலைகளைப் பற்றிப் பார்ப்போம். இது வருடத்துக்கு ஒருமுறை நடக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். எனப்படும் இண்டியன் ஃபாரின் சர்வீஸ், இண்டியன் ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸ், இண்டியன் கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் சர்வீஸ், இண்டியன் ரயில்வே பர்சனல் சர்வீஸ், இண்டியன் ரெவின்யு சர்வீஸ், இண்டியன் போஸ்டல் சர்வீஸ், இண்டியன் சிவில் அக்கவுண்ட்ஸ், இண்டியன் ரெயில்வே டிராபிக் சர்வீஸ், இண்டியன் இன்ஃபர்மேஷன் சர்வீஸ், இண்டியன் டிரேட் சர்வீஸ், இண்டியன் கார்பரேட் லா சர்வீஸ், இண்டியன் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ், இண்டியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரி, இண்டியன் ரெயில்வே அக்கவுண்ட்ஸ் சர்வீஸ் உள்ளிட்ட இருபத்தைந்து சர்வீஸ்களில் காலியிடங்கள் இந்த ஒரே சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவற்றில் முதல் தரமானது ஐ.ஏ.எஸ். பிறகு ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ். என தரவரிசை குறைந்து கொண்டே போகும். மதிப்பெண் அடிப்படையில் முந்திக்கொள்பவர்களே, முதல்தரமான வேலைகளைப் பெற முடியும்.


சிவில் சர்வீஸ் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். முதலில் பிரிலிமினரி என்று சொல்லப்படும் முதல்நிலைத் தேர்வு, இரண்டாவதாக மெயின் எனப்படும் முதன்மைத் தேர்வு, இறுதியாக நேர்முகத் தேர்வு. இதில் பிரிலிமினரி தேர்வுக்கான அறிவிப்புகள் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாளிதழ்களில் வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதியாக ஏதேனும் டிகிரி இருந்தாலே போதுமானது. பொதுவாக பிரிலிமினரி தேர்வுகள் மே மூன்று அல்லது நான்காம் வாரத்தில் நடைபெறும்.

வருடம்தோறும் குறைந்தது இரண்டரை லட்சம் பேர் வரை பிரிலிமினரி தேர்வை எழுதுகிறார்கள். சிவில் சர்வீஸில் மெயின் தேர்வு மதிப்பெண்கள்தான் கணக்கில் கொள்ளப்படும் என்றாலும், பிரிலிமினரி எழுதி தேறுபவர்கள்தான் மெயின் தேர்வை எழுத முடியும். அந்த வருடத்தில் குடிமைப் பணிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளனவோ, அதைப் போல பன்னிரண்டு மடங்கு நபர்களே மெயின் தாளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ஆயிரம் காலியிடங்கள் இருந்தால், பிரிலிமினரி தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பன்னிரண்டாயிரம் பேரை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆகவே, பிரிலிமினரியில் பத்தாயிரத்தில் ஒருவராகவேனும் வருவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. மெயின் தாளை பத்தாயிரம் பேர் எழுதினாலும் அதில் சுமார் இரண்டாயிரம் பேர் வரையே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களில் சுமார் ஆயிரம் பேர்தான் பணிக்கான நியமனங்களைப் பெறுவார்கள். இனி, முதல்கட்ட தேர்வான பிரிலிமினரி பற்றி பார்க்கலாம்... இது முழுக்க முழுக்க ஆப்ஜெக்டிவ் டைப் தேர்வுதான். அதாவது ஒரு கேள்வியைக் கொடுத்து நான்கு பதில்களைக் கொடுத்திருப்பார்கள். சரியான பதிலை டிக் செய்ய வேண்டும். இந்த பிரிலிமினரி தேர்வில்தான் தற்போது ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆணையம். முன்பெல்லாம் இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் இருந்தன. ஒன்று ஜி.கே. எனப்படும் பொது அறிவுத்தாள். இரண்டாவது ஆப்ஷனல் சப்ஜெக்ட் எனப்படும் விருப்பப்பாடம். விருப்பப் பாடங்களில் பலவகையான பாடங்களை ஆணையம் வழங்கியிருக்கும். இவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் எழுதலாம்.

பொது அறிவுத் தாளில் பாடத் திட்டங்களாக 1. கரண்ட் அஃபயர் எனப்படும் அண்மைக்கால நடப்புகள், 2. இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாறு, 3. இந்திய மற்றும் சர்வதேசத்தின் சமூக, பொருளாதார நிலைகளில் புவியியலின் செல்வாக்கு, 4. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் அமைப்புகள், பஞ்சாயத்துகள், பொதுக்கொள்கைகள், உரிமைகள், பிரச்னைகள், 5. வறுமை, மக்கள்தொகை, சமூகப் பிரச்னைகளில் இந்திய சமூக வளர்ச்சியின் நீடித்த பங்கு, 6. சுற்றுச்சூழல், பயோ டைவர்சிடி எனப்படும் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலியல் மாற்றங்கள், 7. பொது அறிவியல் போன்றவற்றை ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. இவை எதிலுமே மாற்றம் இல்லை.

இந்தத் தாளில் முன்பு 150 கேள்விகள், ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் என்ற அளவில் மொத்தம் 150 மதிப்பெண்கள் என்றிருந்ததை மாற்றியிருக்கிறார்கள். இப்போது மொத்தம் 100 கேள்விகள். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள். மொத்தம் 200 மதிப்பெண்கள் என்ற சிறு மாற்றம் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது.

இரண்டாவது தாளில்தான் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது ஆணையம். அதாவது, இதுவரை இருந்த விருப்பப்பாடம் என்ற தாளையே மாற்றி, ‘திறனறிவுத் தாள்’ என்ற ஒன்றை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது கிராமப்புற மாணவர்களை கொஞ்சம் தளர்ச்சியுறச் செய்திருப்பது நிஜம்தான். ஆனால், இந்த மாற்றத்திலும் நன்மையுண்டு. விருப்பப் பாடங்களை ஒருவர் மனப்பாடம் செய்து எழுதிவிடலாம். ஆனால் திறனறிவுப் பாடம் உங்களை யோசிக்க வைக்கக் கூடியது. மதிநுட்பத்தை சோதிப்பது. இதனால் திறமையான மாணவர்களுக்கே வேலை நிச்சயம்.
அந்த திறனறிவுத் தாளைப் பற்றி அடுத்த வாரம் தொடர்வோம்...’’
- டி.ரஞ்சித்