கவிதைக்காரர்கள் வீதி

கடவுள்கள் நீயும் நானும் கடவுளாகத்தான் இருந்தோம், குழந்தையாக இருந்தபோது! - செல்வராஜா, சேலம்.
விலாசம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் வெவ்வேறு திசைப் பயணிகளின் ஊர்ப் பெயர்களை சொல்லிச் செல்கின்றன ஜவுளிக்கடை துணிப்பைகள்! - ஜி.வி.மனோ, தூத்துக்குடி.
கொடை குடையைத் தாண்டி குவித்து நீட்டிய கைகளில் நதிக் குழந்தைகளை வழங்கியது வானம்! - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
ஏமாற்றம் ஓடி ஒதுங்கி நிற்போரைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிப் போனது, வரவேற்பை எதிர்பார்த்து வந்த மழை! - என்.உஷாதேவி, மதுரை.
வெட்கம் குடையின்கீழ் இரண்டு பேருக்குத்தான் இடமிருக்கிறது. உன் வெட்கத்தை வேறு எங்காவது ஒதுங்கச் சொல்! - பிரியதர்ஷன், சேலம்.
மனப்பயணம்! புறப்பட்டுவிட்டது புகைவண்டி கையசைத்து விடைபெற்று உன்னை வழியனுப்பிவிட்டுப் பின் நகர்கிறேன். இறுதிப்பெட்டியில் தொற்றிக்கொள்கிறது என்னைக் கழற்றிவிட்டு என் மனம்! - சிவபாரதி, சிதம்பரம்.
|