நியூஸ் வே





*  ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் மிரளும் 13ம் நம்பர்தான் பிரணாப் முகர்ஜிக்கு ராசியான நம்பர். நாடாளுமன்றத்தில் அவரது அலுவலக எண் 13. டெல்லியில் தல்கதோரா சாலையில் இருக்கும் அவரது வீட்டு எண்ணும் 13தான். சாதாரண எம்.பி.க்களுக்கான பங்களா இது. இதில் அவர் 10 ஆண்டுகளாக வசிக்கிறார். மத்திய கேபினட் அமைச்சர்களுக்கு இதைவிட பெரிய வீடு தரப்படும் என்றாலும், சென்டிமென்ட் காரணமாக இங்கேயே இருக்கிறார். தேர்தலில் ஜெயித்தால், அவர்தான் இந்தியாவின் 13வது ஜனாதிபதி.

*  காலில் விழும் தமிழக அமைச்சர்களே பரவாயில்லை என்கிற அளவுக்கு இருக்கிறது மம்தா பானர்ஜி சகாக்களின் பேச்சு. மேற்கு வங்காள உணவு அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் ஒரு பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு போட்ட கட்டளை இது... ‘‘எல்லோரும் வீட்டில் மம்தா போட்டோவை மாட்டி வையுங்கள். காலையில் அவர் முகத்தில் விழித்துவிட்டு வெளியில் போனால் அதிர்ஷ்டம் கொட்டும். மறந்தும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முகத்தில் முழிக்காதீர்கள். அப்படிச் செய்தால், வழியில் எங்காவது விபத்தில் செத்துப் போய் விடுவீர்கள்!’’

ஹீ நிஜமாகவே ஸ்டார் ஆகியிருக்கிறார் மாதுரி தீட்சித். இந்திய நடிகைகள் எவருக்கும் கிட்டாத பெருமையாக, வானத்து நட்சத்திரம் ஒன்றுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஓரியன் தொகுப்பில் இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு மாதுரி பெயர் வைத்திருக்கிறது உலக நட்சத்திர அறக்கட்டளை.

*  நடைபயணத்தில் வைகோவை மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது கர்நாடக அரசியல்வாதிகள். ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவரும், முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலு சமீபத்தில் தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு முன்பாக கர்நாடகம் முழுக்க 54 நாட்களில் 921 கிலோமீட்டர் நடைபயணம் சென்று வந்தார். கர்நாடக அரசியல் வரலாற்றில் நீண்ட அரசியல் பயணமான இதை கின்னஸ் சாதனையில் சேர்க்க முயற்சிக்கிறார்கள்.

 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கியும் தோல்வி கண்ட காங்கிரஸ் கட்சி, இம்முறை அங்கு நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் ரொம்ப அடக்கியே வாசிக்கிறது. ஆனாலும் சிலர் சொந்த செல்வாக்கில் தலைவர்களை அழைத்து வருகிறார்கள். அமிதாப் பச்சன் அரசியலே வேண்டாம் என ஒதுங்கியிருக்க, அவரது சகோதரர் அஜிதாப் பச்சன் காங்கிரஸுக்காக ஓட்டு கேட்கிறார்.