சூடு பிடித்திருக்கிறது ஜனாதிபதி தேர்தல். ‘அதிகாரமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என பலர் டென்ஷன் ஆகிறார்கள். அதிகாரம் இல்லை என்றாலும், அந்தப் பதவி தரும் கௌரவம் ஸ்பெஷலானது! உலகிலேயே மிக காஸ்ட்லியான, மிகப் பெரிய ஒரு வீட்டுக்குள் குடியேறுவது என்பது லேசுப்பட்ட விஷயமா? அந்த காஸ்ட்லி வீடு பற்றி சில டீடெய்ல்ஸ்...
* உலகின் எந்த நாட்டு அதிபரும், ஜனாதிபதியும், பிரதமரும் இவ்வளவு பெரிய மாளிகையில் வசிப்பதில்லை. 335 ஏக்கர் வளாகம்; இரண்டு லட்சம் சதுர அடியில் கட்டிடம். சந்தேகமே இல்லாமல் உலகின் மிகப்பெரிய அரசாங்க இல்லம் இதுதான்!
* பிரிட்டிஷ் காலத்தில் 1911ம் ஆண்டு, இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றினார்கள். பிரிட்டிஷ் வைசிராய் தங்குவதற்காக ஒரு மாளிகை கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதுதான் இது!
* ரெய்சினா, மால்சா என்ற இரண்டு கிராமங்களில் வசித்த 300 குடும்பங்களை வெளியேற்றிவிட்டு, 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி புது டெல்லி என்ற நகரம் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 15 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை நிவாரணம் கொடுத்தார்கள். இதுவும் முறையாகக் கிடைக்கவில்லை என, நிலத்தை இழந்தவர்களின் வாரிசுகள் போன வருடம்கூட போராட்டம் நடத்தினர்.
* புது டெல்லியின் மையப்பகுதியில் இந்த மாளிகை இருக்குமாறும், நாடாளுமன்றம் போன்ற கட்டிடங்களும் அரசு இல்லங்களும் சுற்றிலும் இருக்குமாறும் வடிவமைத்தார்கள். ரெய்சினா கிராமத்தின் ஒரு மேடான பகுதியில் மாளிகை அமைந்ததால், ஜனாதிபதி இல்லத்துக்கு ‘ரெய்சினா ஹில்’ என இன்னொரு பெயரும் உண்டு.
* நான்கு வருடங்களில் கட்டி முடிக்கத் திட்டமிட்டார்கள். ஆனால் முதல் உலகப் போரால் 17 ஆண்டுகளுக்கு வேலை இழுத்தது.

* இந்திய - ஐரோப்பிய கட்டிடக் கலையின் கலவையாக இது அமைந்தது. இந்து, புத்த, சமணக் கோயில்களின் வடிவங்களிலிருந்து தூண்கள், மாடங்கள், கல் ஜன்னல்கள் போன்ற வடிவங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மையமாக அமைந்திருக்கும் குவிமாடம், கட்டிடத்துக்கு கம்பீரத் தோற்றம் தருகிறது.
* எட்வின் லூட்யென்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் என்ற இரண்டு ஆர்க்கிடெக்டுகள் இணைந்து புது டெல்லியின் பல கட்டிடங்களை நிர்மாணித்தார்கள். இந்த மாளிகை வடிவமைப்பு தொடர்பாக இருவருக்கும் சண்டை வந்து பல ஆண்டுகள் பேசிக் கொள்ளவே இல்லை.
* தரையில் பதிக்க இத்தாலி மார்பிள்கள் மட்டும்தான் வெளிநாட்டிலிருந்து வந்தன. மற்ற எல்லாமே இந்திய சரக்குதான். 70 கோடி செங்கற்கள், 30 லட்சம் கன அடி கற்கள் இந்த மாளிகையை உருவாக்க செலவானது. இரும்பு கொஞ்சமே கொஞ்சம்தான் பயன்பட்டது.
* மாளிகையில் மொத்தம் 4 மாடிகள். 340 அறைகள். இவற்றில் படுக்கை அறைகள் மட்டும் 54. வைசிராய் தங்கும் பகுதி ஒரு பக்கமும், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கும் பகுதி இன்னொரு பக்கமும் என இரண்டு பிளாக்குகளாக இது உள்ளது.
* இந்த மாளிகையில் முதலில் குடியேறிய பிரிட்டிஷ் வைசிராய் இர்வின். அவர் காலத்தில் மாளிகையைப் பராமரிக்க மட்டுமே 2 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அப்போது பிரிட்டிஷ் மகாராணியின் அரண்மனையில் கூட அவ்வளவு ஊழியர்கள் இல்லை.
* இங்கு முதலில் குடியேறிய இந்தியர் ராஜாஜி. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக அவர் இங்கு வந்தார். வைசிராய்கள் தங்கும் ‘அசோகா சூட்’ அறையைப் பார்த்து மிரண்ட அவர், ‘‘இது ரொம்ப ஆடம்பரமாக இருக்கிறது’’ என்று சொல்லி அங்கு தங்க மறுத்தார். விருந்தினர்களுக்கான பிளாக்கில் குடியேறினார். அந்த மரபே பிரதிபா காலம் வரை தொடர்கிறது.
* பிரதமர், ஜனாதிபதி என வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் ‘அசோகா சூட்’டில் தங்குகிறார்கள். அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன் இந்தியா வந்தபோது அவருக்கும் அசோகா சூட் ஒதுக்கப்பட்டது. ஆனால் இங்கு கரப்பான் பூச்சி அதிகம் இருப்பதாக புகார் செய்த அமெரிக்க அதிகாரிகள், கிளின்டனை ஓட்டலில் தங்க வைத்தனர். ஒபாமாவும் வெளியில்தான் தங்கினார்.
* ஜனாதிபதி மாளிகையில் 18 இடங்களில் மாடிப் படிக்கட்டுகள் உள்ளன. ஒன்றரை மைல் நீள தாழ்வாரம் உள்ளது. 74 லாபிகள் இருக்கின்றன. உள்ளே நான்கு ஹால்கள். அசோகா ஹாலும் தர்பார் ஹாலும் மிகப்பெரியவை. அமைச்சரவை பதவியேற்பு, விருதுகள் வழங்கும் விழாக்கள் என எல்லாம் இங்குதான் நடக்கும். மார்பிள் ஹாலில் சின்னச் சின்ன விழாக்கள் நடக்கும்.
* ஒரே நேரத்தில் 104 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடும் பிரமாண்டமான விருந்து அறை இதன் ஸ்பெஷல் அம்சம்.
* மாளிகை வளாகத்திலும் ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை. 9 டென்னிஸ் கோர்ட்டுகள், ஒரு போலோ மைதானம், ஒரு கோல்ஃப் மைதானம், ஒரு கிரிக்கெட் கிரவுண்ட்... இத்தனையும் இங்கு உண்டு.
* மொகல் கார்டன்... ஜனாதிபதி மாளிகையின் ஸ்பெஷல் அட்ராக்ஷன்! காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருக்கும் ஷாலிமார் கார்டனை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உலகின் அழகான பூங்காக்களில் ஒன்று! 13 ஏக்கரில் இருக்கும் இந்தப் பூங்காவை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொதுமக்கள் பார்க்கலாம்.
* அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது இந்தப் பூங்காவில் ஒரு மணிப்பூரி ஸ்டைல் குடில் அமைத்தார். ‘திங்கிங் ஹட்’ என அழைக்கப்பட்ட இந்த குடிலில் காலையிலும் மாலையிலும் அவர் உட்கார்ந்து யோசிப்பார். அவரது இரண்டு புத்தகங்களை இங்குதான் எழுதினார். சமீபத்தில் அது அகற்றப்பட்டுவிட்டது. மொகல் கார்டனின் பாரம்பரிய அழகைக் கெடுக்கிறது என்பதே காரணம்.
* மாளிகை வளாகத்தில் பிரமாண்டமான காடும் இருக்கிறது. 335 ஏக்கர் வளாகம் என்றால் சும்மாவா? அரிய பறவைகள், விலங்குகள் வசிக்கின்றன. இயற்கை ஆர்வலர்கள், முன் அனுமதி பெற்று சனிக்கிழமைகளில் இங்கு டிரெக்கிங் போகிறார்கள்.
* இங்கு ஒரு மியூசியமும் உண்டு. ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பரிசுகள் எல்லாமே இங்குதான் வந்து சேரும். பிரிட்டிஷ் மகாராணியின் வெள்ளி சிம்மாசனம், பித்தளையில் உருவாக்கப்பட்ட கிரீட மாதிரி இரண்டும் இங்கு ஸ்பெஷல்.
* 30 கோடி மக்கள் இரவில் சாப்பிடாமல் தூங்கப் போராடும் ஒரு வறிய தேசத்தின் ஜனாதிபதி மாளிகைக்கு வருடாந்திர பராமரிப்புச் செலவு, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல்! மின் கட்டணமே சுமார் ஆறே முக்கால் கோடியைத் தாண்டுகிறது!
* டெல்லியைத் தவிர வேறு 2 இடங்களிலும் ஜனாதிபதி மாளிகைகள் உண்டு. சிம்லாவில் 10 ஆயிரம் சதுர அடியில் அமைந்த ‘தி ரெட்ரீட்’ மாளிகை; செகந்திராபாத்தில் 90 ஏக்கர் வளாகத்தில் இருக்கும் ‘ராஷ்ட்ரபதி நிலையம்’. ஆண்டுக்கு ஒருமுறையாவது இங்கெல்லாம் போவதை ஜனாதிபதிகள் மரபாக வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்களின் அலுவலகமும் அங்கு டிரான்ஸ்பர் ஆகும்!
பிரணாப் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான்...
- அகஸ்டஸ்